பெண்கள் மென்மையானவர்களாக இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு இடையில், கனமான எடைகளைத் தூக்குவதன்மூலம் தமக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார் சுகந்தி மணிமாறன், 35.
72.5 கிலோ எடையும் 1.63 மீட்டர் உயரமும் கொண்ட சுகந்தி, சிறுவயதில் உடல் பருமனாக இருந்ததால் தாம் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தார். இன்று ‘ஸ்ட்ராங்மேன்’ விளையாட்டில் தமது வலிமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த விளையாட்டுத் துறையில், சிங்கப்பூரின் முதலாவது இந்திய ‘ஸ்ட்ராங்மேன்’ வீராங்கனையாக உலக அரங்கில் தடம்பதிக்க வேண்டும் என்பதே இவரின் இலக்கு.
“சிங்கப்பூர் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதன் கனவுகள் சிறியவை அல்ல. அந்த உணர்வை எனது விளையாட்டுப் பயணத்திலும் வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று உற்சாகம் ததும்ப தமிழ் முரசிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சுகந்தி.
சீனத் தாய்க்கும் இந்தியத் தந்தைக்கும் பிறந்த சுகந்தி, கலப்பினப் பின்னணியால் சிறுவயதில் பல சவால்களை எதிர்கொண்டார். உடல் தோற்றம், மொழி வேறுபாடு ஆகியவற்றால் நண்பர்களுடன் ஒன்றிணைவது இவருக்குக் கடினமாக இருந்தது.
விளையாட்டில் ஆர்வமிருந்தாலும் வேகமும் சுறுசுறுப்பும் தேவைப்படும் விளையாட்டுகள் தமக்குப் பொருந்தமாட்டா என்பதை இவர் விரைவிலேயே உணர்ந்தார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியல் பயின்றபோது, வகுப்பில் இருந்த பத்து மாணவர்களில் சுகந்தி மட்டுமே பெண். அது தன்னை முன்னிறுத்தக் கற்றுக்கொடுத்தது என்கிறார் இவர்.
தமது 21வது வயதில் பல்கலைக்கழகத்தில் படித்தபோது தோழியின் அறிமுகத்தால் இவர் உடற்பயிற்சிக் கூடத்தில் எடை தூக்கும் பயிற்சியைத் தொடங்கினார். ‘ஸ்ட்ராங்மேன்’ விளையாட்டைப் பற்றித் தெரிந்தபோது முதன்முறையாக வாகனச் சக்கரத்தை (டயர்) இவர் புரட்டிப் பார்த்தார்.
“அதில் கிடைத்த உற்சாகமும் மனநிறைவும் என்னைக் கவர்ந்தன. எனது உடலால் இன்னும் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை அறிய விரும்பினேன்,” என்றார் சுகந்தி. சிறுவயதில் ஒதுக்கப்பட்டதும் கேலி செய்யப்பட்டதும் தமது மனவுறுதியை வளர்த்ததாக இவர் கருதுகிறார்.
தனி அடையாளம்
பெண்கள் அதிக எடையைத் தூக்குவது உடல்நலத்தைப் பாதிக்கும் என்ற கருத்துகளையும் குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு இல்லாத சூழலையும் எதிர்கொண்டார் சுகந்தி. பெண் என்பதால் உடலைப் பாதுகாக்க வேண்டும், பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும் விளையாட்டு இலக்குக்கும் இடையே இவர் போராடினார்.
“வேலை, பயிற்சி, குடும்பம் என எல்லாவற்றுக்கும் சரியான சமநிலை கிடையாது. எனது இலக்கை அடையச் சிலவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது,” என்றார் சுகந்தி.
‘ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்’ என்பது காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கூற்று. ஆனால், சுகந்தியின் விளையாட்டுப் பயணத்தில் உறுதுணையாக இருப்பவர் அவரின் கணவர் கேபி சுலிவன் போக்கன், 33.
“இந்தப் பயணத்தில் நெருங்கியவர்களின் அங்கீகாரத்தை சுகந்தி அதிகம் எதிர்பார்ப்பாள். ஆனால், தனது கனவை நோக்கி 11 ஆண்டுகளாகப் போராடும் இவருக்குத் தேவைப்படுவது தன் அங்கீகாரமே என்பதை அடிக்கடி நினைவூட்டுவேன். எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கிவிட்டு இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். என்னைப் பற்றிக்கூடக் கவலைப்பட வேண்டாம் என்பேன்,” என்று கேபி கூறினார்.
சமூக ஊடகங்களில் பயிற்சிப் படங்களைப் பகிரும்போது, ‘ஏன் உங்களைத் துன்புறுத்திக்கொள்கிறீர்கள்?’, ‘ஆண்களைப் போல உடலைக் கட்டமைக்க வேண்டுமா?’ என்பன போன்ற விமர்சனங்களும் எழுந்தன.
“வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எனது உடல் வடிவம் மாறியிருப்பதாகத் தோன்றலாம். ஆனால், என் உடற்கட்டமைப்பே எனது உழைப்பிற்கான சான்று,” என்கிறார் சுகந்தி.
‘ஸ்ட்ராங்மேன்’ போட்டிகளில் எடையைத் தூக்குவது மட்டுமே சவாலன்று. கைப்பிடி இல்லாத கனமான பொருள்களைக் கையாள்வதும் எடையுடன் ஓடுவதும் உடல் வலிமையோடு சிந்திக்கும் திறனையும் சோதிக்கின்றன.
“வலிமை என்பது உடலில் மட்டுமன்று; மனநிலையிலும் இருக்கிறது,” என்கிறார் சுகந்தி.
தகுதிச்சுற்றிலிருந்து உலக அரங்கை நோக்கி!
கடந்த ஈராண்டுகளில் ஏழு போட்டிகளில் பங்கேற்றுள்ள சுகந்தி, ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று முதல் நான்கு மாதங்கள் பயிற்சி மேற்கொள்கிறார். இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் அங்கீகாரமும் நிதியுதவியும் பெறுவது சவாலாக இருப்பதாக இவர் கூறுகிறார்.
இருப்பினும், இவ்வாண்டு பிப்ரவரியில் ஹாங்காங்கில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இவர் வென்றார். அதன்மூலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், ஒகாலாவில் நவம்பர் 20 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் ‘அதிகாரபூர்வ ஸ்ட்ராங்மேன்’ உலக இறுதிப் போட்டியில் 73 கிலோவிற்குக்கீழ் உள்ள எடைப் பிரிவில் பங்கேற்கும் முதல் சிங்கப்பூர் வீராங்கனையாக இவர் தேர்வாகியுள்ளார்.
மூன்று ஆண்டுகளாக சுகந்திக்குப் பயிற்சியளிக்கும் திரு சூ கோக் வேய், 36, அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டினார். கட்டுமானத் துறையில் மேலாளராகப் பணியாற்றினாலும் பயிற்சியில் சுகந்தியின் ஈடுபாடு குறைந்ததில்லை என்றார் அவர்.
“கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பயிற்சியைக்கூடத் தவறவிடக்கூடாது என்பதில் அவர் காட்டும் உறுதி அபாரமானது. ‘ஸ்ட்ராங்வுமன்’ எனும் வலிமையான பெண்ணுக்குத் தேவையான விடாமுயற்சியும் கடுமையாக உழைக்கும் மனவுறுதியும் அவரிடம் முழுமையாக உள்ளன,” என்கிறார் திரு சூ.
எதிர்காலக் கனவும் பெண்களுக்கான அழைப்பும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ‘ஸ்ட்ராங்மேன்’ விளையாட்டில் சிங்கப்பூரில் பெண்களுக்கான அணியை உருவாக்கி, வெளிநாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது சுகந்தியின் கனவு.
சமூக ஊடகங்களில் இவரின் பதிவுகளைப் பார்ப்போருக்கு நெகிழ்ச்சியாகத் தோன்றினாலும் இவரின் பயணத்தில் தனிமையும் மனவுளைச்சலும் நிறைந்த தருணங்களும் உண்டு. தம்மைப் பின்தொடரும் பெண்கள், அவர்களின் கனவுகளை எட்டுவதற்குத் துணிவும் நம்பிக்கையும் பெற வேண்டும் என்பது இவரின் எண்ணம். அதுவே இவரை மீண்டும் எழச் செய்து துடிப்புடன் இயங்கவைக்கிறது.
“முயற்சி இல்லையேல் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிய முடியாது. கதவைத் திறந்து வெளியே வருவதற்கு அச்சமாக இருக்கலாம். ஆனால், வெளியே என்ன இருக்கிறது என்பதை அறிய முதலில் காலடி எடுத்துவைக்க வேண்டும்,” என்ற சுகந்தியின் வார்த்தைகள், வலிமை குறித்த இவரின் பார்வையையும் அடுத்த தலைமுறைப் பெண்களுக்கான அழைப்பையும் ஒருசேர வெளிப்படுத்துகின்றன.
