ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார் திருவாட்டி செல்வி. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தம் மூத்த சகோதரரைப் பண்டிகையன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதால் அவரைப் பொறுத்தமட்டில் பண்டிகைக் காலம் தனி இன்பம்.
“வீட்டில் நான் கடைக்குட்டி. என் சகோதரிகளுடன் நான் மிக நெருக்கம். ஆனால், என் அண்ணனை நான் அவரது திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சந்திக்க முடியாமல் போனது. தீபாவளிதான் எனக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் திருவாட்டி செல்வி, 56.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இவரைப் போன்றவர்களுக்கு பண்டிகைக் காலம் அவர்களின் உற்றார் உறவினர்களைக் காண்பதற்கான வாய்ப்பாக விளங்குகிறது.
குடும்பப் பிணைப்புக்கு அப்பாற்பட்டு, சுகாதாரம் சார்ந்து திருவாட்டி செல்விக்கு தீபாவளித் திருநாள் பொருள்பொதிந்ததாக விளங்குகிறது.
பொதுவாக, பண்டிகைக் காலத்தில் பலர் உணவு சுவைத்திட ஆவலுடன் இருப்பர். ஆனால், திருவாட்டி செல்வியோ, தமது உணவுப் பழக்கத்தைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்.
அவருக்கு 28 வயதில் ‘லூபஸ்’ எனப்படும் உடலின் நோயெதிர்ப்பாற்றல், உடல் திசுக்கள், மற்ற உறுப்புகளைப் பாதிக்கும் நோய் கண்டறியப்பட்டது.
அந்நோய் இவருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர், அண்மைக் காலமாக ரத்தச் சுத்திகரிப்பும் செய்துகொள்ள வேண்டியுள்ளது.
சிறுநீரகங்களின் செயல்திறன் குறைந்தபோது திருவாட்டி செல்வி வேலையை இழக்க நேரிட்டது. அப்போது, அவரின் மகன் சஞ்சய்க்கு சாதாரண நிலைத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தொடர் சவால்களால் முடங்கிப்போன திருவாட்டி செல்வி, தம் மகனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போராட முடிவெடுத்தார்.
வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அதற்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ள திருவாட்டி செல்வி, தீபாவளியின்போது தம் சகோதரிகளுடன் சேர்ந்து முறுக்கு சுடுவது வழக்கம்.
இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக முன்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருவாட்டி செல்விக்கு மீண்டும் இதயத்தின் முதன்மையான மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவரது உணவுப் பழக்கத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளியன்று பல உணவு வகைகளை சுவைத்துப் பார்க்க முடியாவிட்டாலும், குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் அவர் இன்புறுகிறார்.
செல்வியின் நோயெதிர்ப்பாற்றல் மிகக் குறைவாக இருப்பதால், தேவைப்படும்போது அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
“பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் பல உணவு வகைகளைச் சாப்பிடுவது வழக்கம். இருந்தாலும், ஆரோக்கியத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். என் உடல்நலனைக் காக்க நான் தடுப்பூசி போட்டுக்கொள்வதுமின்றி அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்கிறார் திருவாட்டி செல்வி.

