சிங்கப்பூரின் பலசமய நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விழா

சிங்கப்பூரின் பலசமய நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விழா

2 mins read
a4a9f2dd-ecba-4d99-8f46-b5144aaa8528
விழாவில் அமைக்கப்பட்ட சாவடிகளைப் பார்வையிட்ட துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூரிலுள்ள பத்து வெவ்வேறு சமயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் குடியிருப்பு வட்டாரங்களில் மேற்கொள்ளப்படும் பல சமயத் தொடர்புப் பணிகளின் ஒரு பகுதியாக, அனைத்துச் சமய மன்றம் (ஐஆர்ஓ) தனது முதல் நல்லிணக்க விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பத்துச் சமயங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்துக் கூட்டு வழிபாடுகள் அல்லது ஆசிகளை வழங்குவதன் மூலமும், தேசிய தினம், பிற நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதன் மூலமும், குறிப்பாக நெருக்கடிக் காலங்களில் சமய நல்லிணக்கம், ஒற்றுமைக்கான தனது அர்ப்பணிப்பைத் தலைமைத்துவ அளவில் அனைத்துச் சமய மன்றம் மெய்ப்பித்து வருகிறது.

சமூகத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துவதன்மூலம் பொதுமக்களிடையே பல்வேறு சமயங்கள் குறித்த புரிந்துணர்வை வளர்க்க அது நோக்கம் கொண்டுள்ளது.

நமது தெம்பனிஸ் நடுவத்தில் சனிக்கிழமை (11 ஏப்ரல்) நடைபெற்ற விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்குக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வருகைபுரிந்திருந்தார்.

சிறப்புரையாற்றிய திரு தினேஷ், பன்முகத்தன்மை, பன்முகக் கலாசாரம், சமய நல்லிணக்கம் ஆகியவையே சிங்கப்பூர்ச் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

“நமக்கு ஒரு பொதுவான சமயம் இருப்பதனால் அல்ல, மாறாக நம்மிடம் உள்ள ஒவ்வொரு சமயத்தின் பலத்தையும் நாம் கொண்டாடுவதால் உருவாகும் ஒரு பொதுவான அடையாளத்தின்கீழ் மக்களையும் நாட்டையும் ஒன்றிணைக்க அனைத்துச் சமய மன்றம் உருவாக்கப்பட்டது,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் சமூக இணக்கத்தையும் பல சமய அடையாளத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்காக திரு தினேஷ் மூன்று வழிகளைப் பரிந்துரைத்தார்.

“இந்த அமைப்பு இருப்பதன் முக்கியத்துவத்தை நம் மக்களிடம் விளக்கவேண்டும். நம்மை ஓர் ஒருங்கிணைந்த குழுவாக இணைத்துக்கொண்டு அக்கறை செலுத்த வேண்டும். அக்கறை காட்டுவது என்பது ஒவ்வொரு சமயத்தின் இன்றியமையாப் பகுதி,” என்றார் திரு தினேஷ்.

அனைத்துச் சமய மன்றத்தின் தலைவர் கே.இளங்கோ, சமய நல்லிணக்கத்திற்கான அமைப்பின் அர்ப்பணிப்பை உறுதிசெய்வதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

“கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம், சிங்கப்பூரின் நல்லிணக்கம் என்பது தற்செயலாக அமைந்ததன்று என்பதையும் சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள், தனிமனிதர்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் வாயிலாகவே அது தீவிரமாகப் பேணப்பட்டு வருகிறது என்பதையும் நாங்கள் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்,” என்றார் திரு கே இளங்கோ.

இந்த இரண்டு நாள் விழா, ஐந்து கருப்பொருள் மண்டலங்களைக் கொண்டிருப்பதுடன், புரிந்துணர்வுமுதல் அகச்சிந்தனைவரை சிங்கப்பூரின் பல சமயச் சூழலின் வழியாக வருகையாளர்களை வழிநடத்தும் பட்டறைகள், ஒருங்கிணைக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.

அனைத்துச் சமய மன்ற இளையர் பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஷுகுல் ராஜ் குமார், 29, சிங்கப்பூர் இளையர்கள் சமயம் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதுடன் உண்மையான உரையாடல்களில் ஈடுபட விரும்புவதாகவும் சொன்னார்.

விழாவில் பங்கேற்ற ஷுகுல் ராஜ் குமார்.
விழாவில் பங்கேற்ற ஷுகுல் ராஜ் குமார். - படம்: சுந்தர நடராஜ்

தம் மகளுடன் விழாவிற்கு வந்திருந்த தெம்பனிஸ் குடியிருப்பாளர் அலங்கார முத்துராமன், 40, இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் தம் மகள் போன்ற இளைய தலைமுறையினர் சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்துகொள்ளமுடியும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்