பன்னிரண்டு ஆண்டுகளாக உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியாதரவு வழங்கி வரும் சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி நிதித் திட்டம் இவ்வாண்டு 111 மாணவர்களுக்கு $182,750 அளவிலான உதவித்தொகையை வழங்கியுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிஜிபி மண்டபத்தில் சனிக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற நிகழ்வில் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள், பொதுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் பலர் இந்த உதவித் தொகையைப் பெற்றனர்.
அத்துடன், 111 உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை உட்பட இவ்வாண்டில் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியக் கல்விநிதித் திட்டம் மொத்தம் $571,324 உதவித் தொகையாக வழங்கியுள்ளது என்றார் இந்து அறக்கட்டளை வாரியக் கல்விநிதித் திட்டத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா.
உதவித்தொகை பெற்று பயனடைந்தவர்களுள் ஒருவர் திருவாட்டி கோகிலா சுரேஷ், 42. மூன்று பிள்ளைகளின் தாயாரான அவர், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆலோசனையியல் துறையில் (Bachelor of Counselling) பட்டக்கல்வி முதலாண்டு பயின்று வருகிறார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சில் முழுநேர மூத்த உதவி நிர்வாகியாகவும் பணிபுரியும் தமக்கு வழங்கப்பட்ட $1,500 உதவித்தொகை, கல்வி சார்ந்த நோக்கங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
“வேலை, குடும்பம் போன்ற பல பொறுப்புகளுடன் கூடிய உயர்கல்வி மாணவர்களுக்கு இது போன்ற உதவித்தொகைகள் பெரிதும் கைகொடுக்கின்றன,” என்றார் திருவாட்டி கோகிலா.
இவரைப் போலவே உதவித்தொகையைப் பெற்றுள்ளார் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழக மாணவரும் கூடைப்பந்தாட்ட வீரருமான பிரேம் ஹரன் ராஜன், 23.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கநிலை 5ஆம் வகுப்பிலிருந்து கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடி வரும் இந்த சந்தையியல் பட்டயக்கல்வி மாணவருக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டும் $4,000 உதவித்தொகை வழங்கப்படும்.
“இது எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைகிறது. எதிர்வரும் காலத்தில் என் கூடைப்பந்தாட்ட ஆர்வம் மற்றும் பட்டயக்கல்வி அனுபவத்தை சிங்கப்பூர் தேசிய அணியில் பயன்படுத்தலாம் என்று நம்புகிறேன்,” என்றார் திரு பிரேம்.