தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறையன்பர்களுக்கு இசைவிருந்து

2 mins read
9cdc7007-9769-4a7a-bd92-076ce3297527
பக்தர்களை இசைமழையில் நனைக்கக் காத்திருக்கும் (இடமிருந்து) அருணா ரவீந்திரன், வி.எம்.மகாலிங்கம், அகிலா ரவீந்திரன். - படம்: சுந்தர நடராஜ்

பாட்டியின் உந்துதலில் தொடங்கி பெற்றோரின் ஊக்கத்தால் தொடர்ந்து வளர்கிறது சீர்காழி சகோதரிகளின் இசைப்பயணம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ஒன்பதாவது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய அருணா ரவீந்திரன், 24, ‘பக்தி சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் மிளிர்ந்த அகிலா ரவீந்திரன், 24, இருவருக்கும் பக்திப் பாடல்களே அடையாளம்.

சீர்காழியின் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் முதன்முதலாகப் பாடிய இரட்டையர்கள் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அக்டோபர் 10, 11ஆம் தேதிகளில் மேடையேறுவர்.

“சொந்த ஊர் மாரியம்மன் ஆலயத்தில் தொடங்கி இப்போது சிங்கப்பூரின் மிகப் பழமையான ஆலயத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துவது எங்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் அருணா.

சகோதரிகள் இருவரும் சிங்கப்பூர் வந்திருப்பது இதுவே முதன்முறை.

“சிங்கப்பூரில் பாடக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு இது ஒரு தொடக்கம்,” என்றார் அகிலா.

சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி எனப் புகழ்பெற்ற பாடகர்களின் பக்திப் பாடல்கள், கிராமிய பக்திப் பாடல்கள், சங்கீத சாயலில் உள்ள பக்திப் பாடல்கள் என சகோதரிகள் இருவரும் இரு நாள்களில் மக்களுக்கு இசைவிருந்து படைக்கவுள்ளனர்.

“எங்கள் பாடல்களைக் கேட்க வரும் மக்களுக்கு உற்சாகமூட்டுவதே எங்களின் நோக்கம்,” என்றனர் இருவரும் உறுதியுடன்.

தீமிதித் திருவிழாவுக்கு மேலும் சிறப்பூட்ட சீர்காழி சகோதரிகளுடன் இசை விருந்து படைக்கவிருக்கிறார் சென்ற ஆண்டு நிகழ்ச்சியில் பாடிய வி.எம்.மகாலிங்கம், 42.

மீண்டும் மாரியம்மன் கோயிலில் மேடையேறும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெருமையுடன் உணர்வதாகச் சொன்னார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம்.

“சென்ற ஆண்டு பாடியபோது மீண்டும் இதுபோன்ற மேடை கிடைக்குமா என்று நான் எண்ணிய வண்ணம் எனக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தாம் சென்ற முறை பாடிய ‘அங்கே இடி முழங்குது’ கிராமிய பக்திப் பாடல், தம்மைச் சிங்கப்பூர் மக்களின் மனத்தில் இடம்பிடிக்க வைத்த பாடல் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் அவர்.

இவ்வாண்டு எல்லாரையும் ஆரவாரப்படுத்தும் வகையில், அதிகமான அம்மன் பாடல்களைப் பாடவிருப்பதாகச் சொன்ன மகாலிங்கம், அருணா-அகிலா சகோதரிகளுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சி படைப்பது மற்றொரு சிறப்பு என்றார்.

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மட்டும் தீமிதித் திருவிழா நடந்தேறி வருவது ஒரு தனிப்பட்ட சிறப்பு என்ற அவர், “அத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் மீண்டும் பாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இறையருள்,” என்று கூறி, மனம் நெகிழ்ந்தார் மகாலிங்கம்.

குறிப்புச் சொற்கள்