மகவுக்காக மாதரின் மறுபிறப்பு

மகவுக்காக மாதரின் மறுபிறப்பு

6 mins read
தாய்மை பெண்களின் உடலையும் அடையாளத்தையும் உருமாற்றுகிறது.
25474545-15b9-4413-a312-8b5efbd5f0b2
பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை எதிர்நோக்கும் தாய்மார்கள். - படம்: வாட் டு எஸ்பெக்ட் இணையத்தளம் 
தனது 6 மாத மகனுடன்  ஸ்ரீனிதா சுகுமார்.
தனது 6 மாத மகனுடன்  ஸ்ரீனிதா சுகுமார். - படம்: ஸ்ரீனிதா

தயக்கத்தைப் போக்கிய தாயாரின் அறிவுரை

பிரசவ அனுபவம் பெண்ணாகத் தாம் பெற்ற ஓர் அனுபவம் என்றார் 31 வயது ஸ்ரீனிதா சுகுமார். இவர் மகன் திரவ் ருவன் சக்திவேல் பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.

தொடக்கத்தில் குழந்தையின் தூக்க நேரத்தைச் சீரமைக்கப் போராடிய அவர், ஓய்வு என்பது நம் உடலைப் பொறுத்தது அல்ல, குழந்தைக்கான நமது நேரத் திட்டமிடலைப் பொறுத்தது என்பதை மெல்லப் புரிந்துகொண்டார்.

குழந்தை தூங்கும் நேரத்தில் தூங்க வேண்டும் என்று சிலர் தமக்கு அறிவுரை கூறியதை குறிப்பிட்ட அவர், ஆனால், குழந்தை தூங்கியதும் பால் போத்தல்கள் கழுவுவது, இடத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் இருந்துகொண்டே இருக்கும் என்றார்.

இன்றைய தாய்மார்கள் தங்கள் பழைய வாழ்க்கைமுறையைத் தக்கவைக்க விரும்புவதால், கணவருடன் பொறுப்புகளைச் சமமாகப் பகிர்வது அவசியமாகிறது. இதனால் குழந்தையும் இருவர் மீதும் சமமான அன்பு செலுத்துவதாக அவர் கூறினார்.

மேலும், குழந்தைகளின் உடல்நலம் குறித்து தாமாகவே கற்றுக்கொண்டதையும் ஸ்ரீனிதா விவரித்தார்.

இவரது பயணத்தில் இவரது தாயின் அறிவுரை பெரும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தால் அதுவே குழந்தைக்குப் பழக்கமாகிவிடும் என்ற பயத்தில் குழந்தையைத் தூக்கத் தயங்கியபோது, ஸ்ரீனிதாவின் தாயார், “அவன் இன்னும் குழந்தைதான், அவனை அணைத்துக்கொள், தூக்கிக்கொள்,” என்று கூறி பாசத்தின் அவசியத்தை உணர்த்தினார்.

“எனது மகளின் தொடக்ககாலப் பயம், கிருமிகள் குறித்த அதீத கவலைகளைக் கடந்துவந்து, இப்போது ஒரு பக்குவப்பட்ட தாயாகத் திகழ்கிறார்,” என்று ஸ்ரீனிதாவின் அம்மா திருவாட்டி அனிதா நாநு, 59, பெருமிதம் கொள்கிறார்.

தனது 2 மாத மகனுடன் மீனலோசனி சேஷன்.
தனது 2 மாத மகனுடன் மீனலோசனி சேஷன். - படம்: மீனலோசனி

நடனத்தால் மீண்ட தன்னம்பிக்கை

இரண்டு மாதக் குழந்தையான விஷாகன் மீ சேஷனைப் பராமரிக்கும் அதேவேளையில், நடனத்தின் மூலம் தனது தனித்துவத்தையும் பேணி வருகிறார் 30 வயது மீனலோசனி சேஷன்.

மகூலம் கலைக்கூடத்தின் நிறுவனரான மீனலோசனிக்கு ஜனவரி மாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அவரது மன அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியது.

“ஒரு பெண், மணமான பின்னர் எவ்வாறு தனது துணைவருக்காக தனது வாழ்க்கைமுறையை மாற்றுகிறாரோ அதேபோல குழந்தைக்காகவும் சில மாற்றங்களைச் செய்கிறார்,” என்ற மீனா, மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் தேவையையும் விளக்கினார்.

உடல் ரீதியான சவால்கள், உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலைகள் இருந்தாலும், தமது பழைய நடனக் காணொளிகள் அவருக்கு உந்துதலாக அமைந்தன.

விரைவாக வேலைகளில் ஈடுபடத் தொடங்கியதால் மனச்சோர்வைச் சமாளிக்க முடிந்ததாக அவர் கூறினார்.

மற்ற தாய்மார்களுக்கும் நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற செயல்களில் ஈடுபட அவர் அறிவுறுத்துகிறார்.

“எனது குழந்தையை புரிந்துகொள்வதுடன், ஒரு நடனமணியாக எனது அடையாளத்தையும் தொடர்ந்து பேணும்போது எனக்கு உற்சாகமாக இருக்கிறது,” என்றார் அவர். இதில், மீனாவின் விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றார் அவரது கணவர்.

“அவரது நடன ஆர்வத்தை ஊக்குவித்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது, இதனால் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு அறிகுறிகளைத் தடுக்க முடிந்தது,” என்றார் திரு சேஷன்.

 ஒரு வயதாகும் தனது மகளுடன் அஸ்வினி அலிசன். 
 ஒரு வயதாகும் தனது மகளுடன் அஸ்வினி அலிசன்.  - படம்: அஸ்வினி

மன உளைச்சலில் இருந்து மீட்ட மனம் திறந்த உரையாடல்

ஒரு வயதாகும் இஸ்லா இஷானா அலிசனின் தாயார் 33 வயது அஸ்வினி அலிசனுக்கு மகப்பேற்றுக்குப் பிந்தைய வாரங்கள் சவால் மிக்கதாக இருந்தன.

தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், வேலைக்குத் திரும்புவதில் இருந்த குற்றஉணர்வு ஆகியவை அவரை நிலைகுலையச் செய்தன.

இருந்தாலும், தமது தாயின் ஆதரவும், மற்றவர்களிடம் உதவி கேட்கத் தொடங்கியதும் அவருக்குப் பெரும் பலத்தைத் தந்தது.

மகப்பேற்றுக்குப் பிந்தைய காலம் என்பது தமக்கு முடிந்துபோகும் கட்டம் அல்ல, அது ஒரு ஒருங்கிணைந்த உருமாற்றமாக அஸ்வினி உணர்கிறார்.

ஒரு சிறந்த தாயாகத் தம்மை மெய்ப்பிக்க முயன்ற அவர், காலப்போக்கில் மெல்லத் தன் உள்ளுணர்வை நம்பத் தொடங்கினார்.

“எனது போராட்டங்களைப் பற்றி நான் வெளிப்படையாகப் பேசியது, உதவி கேட்கும் மனப்பக்குவத்தை எனக்கு அளித்தது. ஓய்வெடுப்பதும் மனஉளைச்சலால் அழுவதும் தவறல்ல என்பதை உணர்ந்தேன்,” என்றார் அவர்.

“சவால்கள் நிறைந்த அந்த நாள்கள், வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி என்பதை உணரத் தொடங்கினேன்,” என்றார் அவர்.

அஸ்வினியின் மாற்றத்தைக் கவனித்த அவரது தோழர் முகமது அஷ்ரஃப் பின் முகமது ஜலால், 34 , “தாயாக ஆனது அஸ்வினியை அதிக வலிமையானவராகவும், பொறுப்புள்ளவராகவும், குறிப்பாகத் தன் குழந்தையைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டவராகவும் மாற்றியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அதிக தன்னம்பிக்கையுடனும், தன் மீதான கருணையுடனும் அடுத்தடுத்த சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார் அஸ்வினி.

 4 மாத மகளுடன் பவித்ரா ரேனுகா மிஷேல்.
4 மாத மகளுடன் பவித்ரா ரேனுகா மிஷேல். - படம்: பவித்ரா

தாயெனும் பெருமையால் மனப் போராட்டத்தை வென்றார்

நான்கு மாத லெயா ரெல்லா ஜேம்ஸின் அம்மா 36 வயது பவித்ரா ரேனுகா மிஷேல், தமது அனுபவத்தில், கர்ப்ப காலத்தைவிட பிரசவத்திற்குப் பிந்தைய காலமே மிகவும் சவாலானது என்றார்.

சமூக வலைத்தளங்களில் மற்ற தாய்மார்களின் உடல் விரைவாகத் பழைய நிலைக்குத் திரும்பியதைப் பார்த்தபோது, தமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

உடல் முன்பைவிட, பருமனாகவும், வடுக்களுடனும் இருந்ததால் அந்நிய உடலில் வசிப்பது போல பவித்ரா உணர்ந்தார்.

அந்த மன அழுத்தத்திலிருந்து மீள அவர் கையாண்ட வழிகள் முக்கியமானவை.

“குழந்தையை ஈன்றெடுத்த நம் உடலின் அற்புதமான ஆற்றலின் சான்றுகளான தழும்புகளை அழிப்பதில் இவ்வளவு அவசரம் காட்டுகிறோமோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது, ஒவ்வொரு தழும்பும் குழந்தையின் முதல் வீட்டை உருவாக்கியதில் ஏற்பட்டது என்பதை நினைவில்கொள்ளும்போது பெருமையாக இருந்தது,” என்றார் அவர்.

பவித்ராவின் கணவர் ஜேம்ஸ் குமார், 43, தமது மனைவியின் தாய்மை பயணத்தைப் பற்றி பகிர்ந்தார்.

“எப்போதும் உற்சாகமாக இருக்கும் ஒருவர், தமது திறமையின் மீது சந்தேகம் கொள்வதைப் பார்ப்பது வருத்தத்தை அளித்தது. இருப்பினும் அவர் மெதுவாக தமது தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறார்,” என்றார்.

தனது 3 மாத மகனுடன் ஹலீமா.
தனது 3 மாத மகனுடன் ஹலீமா. - படம்:  ஹலீமா

சவால்களைச் சமாளிக்க உதவிய தாயன்பு

மகப்பேற்றுக்குப் பிந்தைய காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் ஒரு காலகட்டம் என்றார் 32 வயது ஹலீமா அஸ்மான்.

“ஒருபுறம் மகப்பேற்றினால் உண்டான உடல்நல பாதிப்புகளிலிருந்து மீள வேண்டும், மறுபுறம் கைக்குழந்தையை எவ்வித முன் அனுபவமும் இன்றிப் பராமரிக்க வேண்டும்,” என்றார் அவர்.

மகப்பேற்றுக்குப் பிந்தைய ‘நான்காவது காலாண்டு’ அவருக்கு பெரும் சவாலாகவே அமைந்தது.

தொடக்கத்தில் தாய்ப்பால் சுரப்பதில் ஏற்பட்ட சிக்கலால் அவர் மருத்துவரை அணுக வேண்டியிருந்தது.

அறுவை சிகிச்சை தையல்கள் (Episiotomy) போட்ட பகுதி ஆற ஒன்றரை மாதங்கள் ஆன போதிலும், ஒரு நாளின் 24 மணி நேரமும் தனது குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததால், அவரால் உடல்நலனில் முழுமையாகக் கவனம் செலுத்தவோ அல்லது குழந்தையைப் பராமரிப்பதில் சுணக்கம் காட்டவோ முடியவில்லை.

சில வேளைகளில் முந்தைய தலைமுறையினர் கலாசார அடிப்படையில் கூறும் அறிவுரைகள், தற்கால மருத்துவர்களின் நவீனக் கருத்துகளோடு முரண்படுவதையும் அவர் உணர்ந்துள்ளார்.

இன்றைய தலைமுறையினர் சுகாதாரம், அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளில் அதிக அக்கறை காட்டுவதாக அவர் கருதினார். முதல் எட்டு வாரங்கள் பேரும் போராட்டமாகவே அவருக்கு இருந்தது.

குழந்தையின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகும், குழந்தை அழும்போதும் அல்லது இரவு நேரங்களில் தூங்காமல் இருக்கும்போதும் அவருக்குள் பெரும் பதற்றமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

மகப்பேற்றுக்குப் பிந்தைய பராமரிப்பை வழங்கிய மாது, ஹலீமாவின் மனச்சோர்வையும் பதற்றத்தையும் குறைக்க பெரும் உதவியாக இருந்தார். அத்தகைய உதவிகள் அவரது சுமையைக் குறைத்து, மனத்திற்கு ஓரளவு அமைதியைத் தந்தது.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கியது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது.

“பிள்ளை பெறும் ஒவ்வொரு பெண்ணும் மீண்டும் பிறப்பெடுப்பதைப் போன்ற புதிய உணர்வையும், புதிய அடையாளத்தையும் பெறுகிறார்கள்,” என்றார் ஹலீமா.

“உடல்வலி, தூக்கமில்லா இரவுகளுடனும் அன்பு நிறைந்த இதயத்துடனும் தாய்மைக்குள் அடியெடுத்து வைத்த  ஹலீமா, நம் மகனுக்காக மன, உடல் வலிமையை  ஒவ்வொரு நாளும் பெற்று வருகிறார்,” என்றார் ஹலீமாவின் கணவர் முகமது அஷ்ராஃப், 35.

குறிப்புச் சொற்கள்