குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழரின் ஐவகைத் திணைகளையும் அவற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் வரலாற்றையும் மனித உணர்வுகளையும் சர்வா நுண்கலைப் பள்ளி நடன வடிவில் படைத்துக் காட்டியது.
தமிழ்மொழி விழாவையொட்டி ஏப்ரல் 25ஆம் தேதி வண்ண ஆடை நடனமணிகளின் சலங்கை மணியோசை அரங்கெங்கும் ஒலிக்க, சர்வா நுண்கலைப் பள்ளி ‘அஞ்சு மணி’ என்ற நடனப் படைப்பை மேடையேற்றியது.
சிங்கப்பூர் இலக்கிய விருதைப் பெற்றவரும் கவிமாலை இலக்கிய அமைப்பின் தலைவருமான திருவாட்டி இன்பா இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“தமிழின் தொன்மையையும், பழமையையும், அன்பின் ஐந்திணைகளையும், சிங்கப்பூர் இளையர்களிடையே அவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் படைப்பை சர்வா நுண்கலைப் பள்ளி மேடையேற்றியது பாராட்டத்தக்கது,” என்று திருவாட்டி இன்பா புகழாரம் சூட்டினார்.
தமிழ்மொழி விழாவில் சர்வா நுண்கலைப் பள்ளி இவ்வாண்டு மூன்றாவது முறையாகத் தமிழுக்கான ஒரு படைப்பை வழங்கியது. இவ்வாண்டு விழாவின் கருப்பொருளான ‘ஈடுபாட்டை’ ஒட்டி, எல்லா வயதினரையும் ஈடுபடுத்தி, ஐவகை நிலங்களை மையமாகக் கொண்டு இந்நடனப் படைப்பை அது மேடையேற்றியது.
குறிஞ்சி நிலப்பகுதியானது மலையும் மலை சார்ந்த பகுதிகளும். அந்நிலத்தில் வாழ்ந்தோர் குறவர்கள் என்றழைக்கப்பட்டனர். குறிஞ்சி நிலத்துடன் பிணைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், மலைகளுக்கு உகந்த தெய்வமான முருகனின் ‘அழகு தெய்வமாக வந்து’ என்ற பாடலுக்குக் குழந்தைகள் நடனமாடினர்.
தொடர்ந்து, காட்டையும் காடு சார்ந்த பகுதிகளையும் குறிக்கும் ‘முல்லை’ நிலத்தின் சூழலையும் அந்நிலவாழ் மக்களின் வாழ்க்கைமுறையையும் எடுத்துக்காட்டும் வகையில், ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற பாடலுடன் கூடிய நடன அங்கம் இடம்பெற்றது. மாதவன் என்றழைக்கப்படும் கிருஷ்ணருக்கான இப்பாடல், ஒரு சிறுவனுக்கும் தாய்க்கும் இடையில் இடம்பெறும் உரையாடலை மையமாகக் கொண்ட பாடலாகும்.
‘மருதம்’ என்பது வயலும் வயல் சார்ந்த இடங்களும். நெல் வயல்கள், கிராம வாழ்க்கை மற்றும் உறவுகளின் கொண்டாட்டங்கள் நிறைந்த அந்நிலப்பகுதியை ஒட்டிய படைப்பும் அரங்கேறியது. இந்நில மக்களின் தெய்வம் இந்திரன் என்பதும் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ‘நெய்தல்’ திணையாகும். அந்நிலத்தைச் சேர்ந்தோர் பரதவர்கள் என அழைக்கப்பட்டனர். வருணனைத் தெய்வமாக வழிபட்ட நெய்தல் திணையை எடுத்துக்காட்டும் வகையில், ‘வருண சந்தி கௌத்துவம்’ என்ற இசைக்கு நடனமணிகள் நடனமாடினர்.
பாலை என்பது தனித்த நிலப்பரப்பன்று. மற்றத் திணைகள் வறண்டுபோகும்போது ‘பாலை’ நிலமாகிவிடுகின்றன. அந்நில மக்கள் துணிவிற்கும் வீரத்திற்கும் பெயர்பெற்றவர்கள் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில், துர்க்கை அம்மனின் வலிமையை வெளிப்படுத்தும் நடனம் படைக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இப்படைப்பு வடிவமைக்கப்பட்டது என்று சர்வா நுண்கலைப் பள்ளியின் நிறுவனர் ஷைலு வின்ஸ்டன், தமிழ் முரசிடம் கூறினார்.
“இப்படைப்பிற்காக ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோதும் பயிற்சியின்போதும் குழந்தைகள் பல புதிய தகவல்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டனர். அவற்றைத் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் அவர்கள் பகிர்ந்ததன்வழி சங்கத் தமிழைப் பலரிடமும் கொண்டுசேர்க்க முடிந்தது,” என்றார் திருவாட்டி ஷைலு.
“இப்படைப்பு, பரதமும் தமிழும் ஒரே மேடையில் இணைந்து சிறப்பித்த படைப்பாகத் திகழ்ந்தது. அதில் பங்கேற்ற என் மகள், எட்டு வயதிலேயே ஐவகை நிலங்களைப் பற்றி கற்றறிந்தது வியக்கத்தக்கது,” என்றார் 34 வயதான திவ்யா ஆர்.எஸ். அவரது மகளான சிற்பிகா கௌதம் ‘குறிஞ்சி’ படைப்பில் பங்கேற்றார்.
“பள்ளியிலும் வீட்டிலும் கற்றுக்கொள்ளாத பல தகவல்களை இந்நடனத்தில் பங்கேற்றதன்வழி கற்றுக்கொண்டேன்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சிற்பிகா.

