புதிய தொடக்கம், புதிய ஆண்டு பிறந்துவிட்டது. இவ்வேளையில் நம்பிக்கையின் சுவையுடன் மலர்ந்த முகத்துடனும், ருசியான உணவுத் தட்டுகளுடனும், ரோஸ் பண்டுங், கோப்பி-ஓ எனப் புத்துணர்ச்சியூட்டும் பானங்களுடனும் மக்களை வரவேற்க சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள உணவங்காடிக்காரர்கள் தயாராகிவிட்டனர்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினமோ, உயர்ந்துவரும் வாடகை, பொருளியல் சவால்களோ எதுவாக இருந்தாலும், மக்களின் பசியாற்றுவதில் இவர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்திற்குத் தடைபோடவில்லை. புத்தாண்டில் உணவங்காடிக் கடைக்காரர்கள் கொண்டிருக்கும் விருப்பங்களை அறிந்துவந்தது தமிழ் முரசு.
பெல்ஜியம் சாக்லேட் பானத்துடன் புத்தாண்டு:
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தித்திக்கும் பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திரு முபாரக் அலி, 62.
‘முபாரக் அலி கோப்பித்தியாம்’ கடை உரிமையாளரான இவர், 2025ஆம் ஆண்டு சீராகவே இருந்தது. எனினும், இதுவரை இல்லாத வகையில் பேரளவிலான நம்பிக்கையுடன் புதிய ஆண்டிற்குள் காலடி வைத்துள்ளதாகக் கூறினார். பானத்தைப்போல மக்களின் வாழ்வும் இனிக்க வேண்டும் என்பதே இவரது எண்ணம்.
இன்முகத்துடன் சேவை:
வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாழ்க்கை, கடைக்காரர்களுக்கு நல்ல வருவாய், இப்படியாகப் புத்தாண்டு திகழ வேண்டும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார் திரு ராஜேஷ் கண்ணா, 45.
‘ஏஸ் சர்பத் ஸ்டால்’ கடை உரிமையாளரான இவருக்கு இந்த ஆண்டு கூடுதல் மகிழ்ச்சி. எதனால் என்பதை இவரே கூறினார்.
“இந்த ஆண்டு முதல் உணவகங்களில், உணவைக் கையாள்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது. இனி இன்முகத்துடன் உணவைப் பரிமாற இயலும். அதுவே பெருமகிழ்ச்சி,” என்றார் திரு ராஜேஷ்.
உணவோடு நேசத்தையும் பரிமாறும் அன்புள்ளம்
“சிரமங்கள் இருக்கலாம். இடையூறும் ஏற்படலாம். ஆனாலும் உணவருந்த வருவோருக்குப் புரியும் விருந்தோம்பலில் குறை வைக்கக் கூடாது என்பதே இந்த ஆண்டிலும் நான் கொண்டிருக்கும் இலக்கு,” என்று கூறினார் ‘ஸம் ஸம்’ உணவுக்கடை உரிமையாளர் திருவாட்டி சபியா, 39.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புத் தேவையுள்ள பிள்ளையைக் கவனித்துக்கொண்டவாறு தனியோர் ஆளாக மிகுந்த மனவுறுதியுடன் உணவுத் துறையில் நீடித்து வரும் திருவாட்டி சபியா, “குறிப்பாக, என் சகோதரர் ஷேக் அலாவுதீன் எனக்கு அளிக்கும் ஊக்கம் இத்துறையில் இன்னும் தனித்துவமாகச் செயல்படுவதில் தொடர்ந்து என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் எல்லோருக்கும் குடும்பப் பாசமும் நிறைவான வருமானமும் கிடைக்க வேண்டும்,” என்று வாழ்த்தினார்.
ஆரோக்கியத்தைப் பரிசளிக்க ஆசை
புத்தாண்டில் நாள் தவறாமல் மக்களுக்கு ஆரோக்கியம் மிகுந்த நல்வாழ்வைப் பரிசளிக்க ஆவல் கொண்டுள்ளார் ‘ஏ ஸ்டார் பராட்டா’ உணவுக்கடை ஊழியர் சுந்தரராஜு சாத்தய்யா, 50.
சிங்கப்பூரில் வேலை பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வி, குடும்ப முன்னேற்றம் உள்ளிட்டவற்றில் கைகொடுக்க முடிவதாகச் சொன்ன இவர், “இத்துறையில் பணியாற்றுவது மக்களுக்குச் சேவை செய்ய கிடைத்த வரம்”, என்றார்.

