நான்கு தலைமுறையினர் நேசம் பகிரும் அன்புக் கூடு

நான்கு தலைமுறையினர் நேசம் பகிரும் அன்புக் கூடு

3 mins read
கொள்ளுப் பாட்டியரின் அன்பில் திளைக்கும் குழந்தைகள்
94a679eb-a0de-4075-849e-685fc11b7103
பிள்ளைகள் கொள்ளுப்பாட்டிகளுடனும் தாத்தா பாட்டிகளுடனும் நேரம் செலவிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் திரு விஜயேந்திரன் கனகலிங்கம், திருமதி தர்ஷனாயினி கோவிந்தன் தம்பதியர். - படம்: திரு விஜயேந்திரன் கனகலிங்கம், திருமதி தர்ஷனாயினி கோவிந்தன்

சிங்கப்பூரில் இன்று பல தனிக்குடும்பங்களும் சிறுகுடும்பங்களும் உருவாகிவரும் நிலையில், கூட்டுக்குடும்பக் கலாசாரத்தைக் கைவிடாமல் கட்டிக்காக்கிறது தர்ஷனாயினி கோவிந்தன், 39 - விஜயேந்திரன் கனகலிங்கம், 39, தம்பதியரின் குடும்பம்.

ஒரே கூரையின்கீழ் அனைவரும் வசிக்காதபோதிலும், ஒவ்வொரு வாரமும் தங்கள் பிள்ளைகளான 5 வயது ஜேவியன் விஜயேந்திரன், 2 வயது வியா விஜயேந்திரன், ஒரு மாதக் குழந்தை திவியன் விஜயேந்திரன் மூவரையும் கொள்ளுப் பாட்டிகளின் வீட்டுக்கு அழைத்துச்செல்வதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கொள்ளுப்பாட்டிகளின் தீரா அன்பு

வாரத்திற்கு ஒருமுறை திருமதி தர்ஷனாயினியின் பாட்டி வீட்டிற்கும் மாதத்திற்கு ஒருமுறை திரு விஜயேந்திரனின் பாட்டி வீட்டிற்கும் அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர்.

திரு விஜயேந்திரன் கனகலிங்கம், திருமதி தர்ஷனாயினி கோவிந்தன் தம்பதியரின் குழந்தைகளுக்குத் தங்கள் தந்தைவழி கொள்ளுப்பாட்டி, திருவாட்டி நல்லம்மாள் கந்தசாமி, 84, (இடது), தாய்வழி கொள்ளுப்பாட்டி கமலா காளிமுத்து, 84, ஆகிய இருவருடனும் நேரம் செலவிடும் வாய்ப்பு கிட்டுகிறது.
திரு விஜயேந்திரன் கனகலிங்கம், திருமதி தர்ஷனாயினி கோவிந்தன் தம்பதியரின் குழந்தைகளுக்குத் தங்கள் தந்தைவழி கொள்ளுப்பாட்டி, திருவாட்டி நல்லம்மாள் கந்தசாமி, 84, (இடது), தாய்வழி கொள்ளுப்பாட்டி கமலா காளிமுத்து, 84, ஆகிய இருவருடனும் நேரம் செலவிடும் வாய்ப்பு கிட்டுகிறது. - படம்: விஜயேந்திரன் கனகலிங்கம் - தர்ஷனாயினி கோவிந்தன் தம்பதியர்

அச்சந்திப்புகளில் இருவரது பெற்றோர், சகோதரர்கள், சகோதரர்களின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றுகூடுவர். பல்லாண்டுகளாகத் தங்கள் குடும்ப வழக்கம் இது என்று தொழில்நுட்பக் கல்விக்கழக மத்திய வளாகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு விஜயேந்திரன் கூறினார்.

“பிள்ளைகளை அவர்களது கொள்ளுப் பாட்டிகளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றால், அங்கேயே ஒரு நாள் முழுவதும் கடந்துவிடும்.

தங்களுக்குப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள கூடுதல் கரங்களும் மனங்களும் கிடைப்பதில் விஜயேந்திரனுக்கு மகிழ்ச்சி.

பிள்ளைகளின் தாய்வழிக் கொள்ளுப்பாட்டியான திருவாட்டி கமலா காளிமுத்துவிற்கு, 84, தமது கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவில் அலாதி இன்பம்.

நாசி லெமாக், லொன்டோங், கோழி, ரசம் என்று வகைவகையாகச் சமைத்து பிள்ளைகள் உண்டு மகிழ்வதைப் பார்ப்பதில் அவருக்கு ஆனந்தம்.

உணவுக்குப் பிறகு அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பது, விளையாடுவது என முகத்தில் சிரிப்புடன் வளைய வருவதைப் பார்ப்பது அவருக்கு நெகிழ்ச்சி தரும் அனுபவம்.

தமது பாட்டி, தமது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவததால் துடிப்புடனும் உற்சாகத்துடனும் இருப்பது இன்பமளிப்பதாக அனைத்துலக வங்கியொன்றில் இயக்குநராகப் பணிபுரியும் தர்ஷனாயினி கூறினார்.

“என் பாட்டியை என் குழந்தைகள் செல்லமாக ‘பிக் ஆத்தா’ என்று அழைப்பார்கள்.

“அவர் தமது வாழ்க்கை அனுபவங்கள், கதைகள் போன்றவற்றைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வார். அதன்வழி, அவரது நினைவும் மனமும் சீராக இருக்கிறது என நம்புகிறேன்,” என்றார் அவர்.

தமிழ் மொழியை அதிகம் பேசவும் கற்கவும் பிள்ளைகளுக்கு அச்சந்திப்புகள் உதவுகின்றன.

“இருவழிக் கொள்ளுப்பாட்டிகளுடனும் பாட்டி, தாத்தாக்களுடனும் நேரம் செலவிட முடிவது என் பிள்ளைகளின் அதிர்ஷ்டம். இன்று பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அவர்களுடனான உரையாடல்கள், நடவடிக்கைகள்வழி என் பிள்ளைகள் நிறைய விழுமியங்களையும் பாடங்களையும் கற்கின்றனர்,” என்றார் தர்ஷனாயினி.

எதிர்காலத்திற்கான விதை

தமக்குத் தெரிந்த முதியவர்கள் பலர் தங்கள் பேரப்பிள்ளைகளை மாதக்கணக்காகப் பார்க்க முடியாமல் தவிப்பது வருத்தமளிப்பதாகத் திரு விஜயேந்திரன் குறிப்பிட்டார்.

“சிறு வயதிலிருந்தே இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகளுக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.

“வருங்காலத்தில் எங்கள் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிடும் வாய்ப்பை எங்கள் பிள்ளைகள் உருவாக்கித்தரவும் இது ஒரு விதையாக விளங்குகிறது,” என்று அவர் கூறினார்.

அன்புத் தொல்லைகள்

அன்பு வெள்ளம் சில நேரங்களில் அன்புத் தொல்லையாகவும் மாறிவிடுகிறது.

உதாரணத்திற்கு, பிள்ளைகளின் உணவில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த திருமதி தர்ஷனாயினி ஒருபுறம் பெரும்பாடுபட, மறுபுறம் அவர் பாட்டி நிறைய சாக்லெட், மிட்டாய்கள் போன்றவற்றைக் கொடுத்துவிடுவார்.

அதிக இனிப்பு உண்டால் பிள்ளைகள் மிகுந்த துடிப்புடன் இருப்பார்கள். அவர்களைத் தூங்க வைப்பதற்குள் திருமதி தர்ஷனாயினி சோர்வடைந்துவிடுவார்.

அவ்வாறு செய்வதைத் தம் அன்பை வெளிப்படுத்தும் முறையாகப் பார்க்கிறார் திருவாட்டி கமலா.

முன்னர், தம் பேத்திக்கும் பிள்ளைகளுக்கும் பலகாரங்கள் கொடுக்க அவருக்கு வசதியில்லை. தற்போது வசதியுள்ளதோடு கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என்பதால் அவர்கள்மீது கூடுதல் அன்பு அவருக்கு.

இந்த அன்பினால் சில நேரங்களில் பிள்ளைகளைக் கண்டிப்பதிலும் தம்பதியர் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

“முன்பெல்லாம் என்னையும் என் சகோதரர்களையும் கண்டிக்க என் பெற்றோர் பிரம்பைப் பயன்படுத்தினர். நான் இப்போது பிரம்பை வாங்கப் போகிறேன் என்றாலே, என்னைத் தடுத்துவிடுகிறார்காள்,” என்று திரு விஜயேந்திரன் கூறினார்.

அன்புத் தொல்லை சற்று அதிகமாகும் வேளையில் தமது குடும்பத்தினருடன் வெளிப்படையாக உரையாடி தம்பதியர் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

அன்பான குடும்பம்

அனைவரும் இணைந்து தங்களது குடும்பத்துக் குழந்தைகளை நன்றாக வளர்க்க முனைவதோடு, இரண்டு கொள்ளுப்பாட்டிகளும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை உறுதிசெய்யவும் இக்குடும்பம் முனைகிறது.

சென்ற மாதம் நடைபெற்ற தேசியக் குடும்ப விழாவில் இக்குடும்பத்தினர் தங்கள் கதையை, ‘உண்மைக் குடும்பங்கள், உண்மைக் கதைகள்’ என்ற முயற்சியின்கீழ் வாழ்வுக்கான குடும்பங்கள் மன்றத்தின்வழி பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்