நாட்டுப்புற இசை மற்ற இசை வடிவங்களின் வேர்: சுகந்தி

சிறப்பு நேர்காணல்

நாட்டுப்புற இசை மற்ற இசை வடிவங்களின் வேர்: சுகந்தி

4 mins read
4c4a9f15-d9f1-4eea-8bc7-6a6b91cf2e01
ஆய கலை அரிய கலைஞர் வலையொளி நிகழ்ச்சியில் இசைத்துறை முதுகலைப் பட்டதாரி, நாட்டுப்புற இசையைக் கற்பிக்கும் பேராசிரியர், மேடைப் பாடகர், திரையிசைப் பாடகர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர் க.சுகந்தி (இடது), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன். - படம்: பே கார்த்திகேயன்

எந்த இசைவடிவமென்றாலும் பாடலின் மொழியையும் அதன் பின்னணியில் உள்ள உணர்வுகளையும் புரிந்துகொண்டால், பாடகரால் அதன் ஆன்மாவைப் பிழையில்லாமல் பிடித்துப் பாடமுடியும் என்கிறார் நாட்டுப்புறப் பாடலில் முத்திரை பதித்துவரும் க. சுகந்தி.

நாட்டுப்புற இசையிலிருந்தே மற்ற இசைவடிவங்கள் தோன்றியதாகக் கூறப்படுவதை அவர் சுட்டினார்.

மண்வாசனை சுமந்த மக்களிசையை உலகத்தரம் வாய்ந்த மேடைகளுக்குக் கொண்டுசென்றுள்ள இவர், இசைத்துறை முதுகலைப் பட்டதாரி, நாட்டுப்புற இசையைக் கற்பிக்கும் பேராசிரியர், மேடைப் பாடகர், திரையிசைப் பாடகர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர்.

திறமை, தேடல் எனும் சிறகுகளோடு இசைவானில் வலம்வருபவர். இருந்தாலும் நாட்டுப்புறப் பாடகர் என்ற அடையாளமே தமக்குப் பெருமைதருவதாகக் கூறுகிறார்.

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளி நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த பல்வேறு தகவல்களைச் சுகந்தி பகிர்ந்துகொண்டார்.

நாட்டுப்புற இசையின் சிறப்பு

உழைப்பின் களைப்பு தெரியாமலிருக்க எளிய மக்கள் தாங்களாகவே சொற்களைக் கோத்துப் பாடும் இப்பாடல்கள் இயல்பாகவே கேட்பவரின் மனந்தொடக்கூடியவை என்றார்.

தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒளிவழியான ‘விஜய் டிவி’ நடத்திய ‘சூப்பர் சிங்கர்’ போட்டி மேடையில் இவர் பாடிய பாடல்கள் நடுவர்களையும் நேயர்களையும் கவர்ந்தன. அந்த மேடை தமக்கு மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு வழிவகுத்ததாகச் சுகந்தி கூறினார்.

நாட்டுப்புறப் பாடல்கள் அவற்றுக்கான பாரம்பரிய இசைக்கருவிகளோடு மட்டுமன்றி மேற்கத்திய, சீன வாத்திய இசைக்கருவிகளோடும் மிக அழகாகப் பொருந்திப்போவதைத் தாம் பாடிய மேடைகளில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘எஸ்பிளனேட்’ அரங்கில் ஆனந்தக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பாடிய ஒப்பாரிப் பாடலைச் சுட்டிய சுகந்தி, அதன் பின்னணியை விளக்கியதுடன் நேரடியாகப் பாடியும் காட்டினார்.

திரைத்துறை ஈடுபாடு

தமது இசைப்பயணத்தின் அடுத்த கட்டமாகத் திரைத்துறையிலும் கால்பதித்துள்ளார். திருவையாறு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இயக்குநர் பாலாவின் முன்னிலையில் முற்போக்குப் பாடலைப் பாடியதையும் அதைக் கேட்டு அவர் 2014ஆம் ஆண்டு தாரை தப்பட்டை படத்தில் பாட வாய்ப்பு தந்ததையும் நினைவுகூர்ந்தார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய மகிழ்ச்சியைத் தந்த அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஆனால், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் ‘இருட்டுக் காட்டுல என் கறுப்பு மின்மினி’ என்ற பாடல் அந்தக் குறையைப் போக்கியது. தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, டி.இமான், உதயகுமார், சி.சத்யா, டென்மா என நீள்கிறது இவருக்கு வாய்ப்பு தந்துள்ள இசையமைப்பாளர்களின் பட்டியல்.

திரைத்துறையில் மெல்லிசைப் பாடல்களையும் பாடவேண்டும் என்பது சுகந்தியின் விருப்பம்.

நாட்டுப்புறப் பாட்டை மட்டுந்தான் தம்மால் பாட முடியும் என்று மனத்தில் பதிந்த கருத்தை உடைக்க உதவியவர் தம் கணவர் சுதந்திரகுமார் என்று கூறிய சுகந்தி, ‘சூப்பர் சிங்கர்’ போட்டிக்குத் தம்மை வற்புறுத்தி அவர் அனுப்பிவைத்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். அதன் பிறகே தமக்கான வரவேற்பு மிகப்பெரிய உயரத்தைத் தொட்டதாகச் சொன்னார்.

நாட்டுப்புறப் பாடல்கள் அக்காலப் பெண்களின் மன உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்தன. ஆனால் இப்போது சமூகத்தில் பெண்களின் நிலை மாறியுள்ளது. இருந்தபோதும் வரலாற்றுப் பின்னணியுடன்கூடிய அந்தப் பாடல்களை இன்றைய தலைமுறைப் பெண்களும் உள்வாங்கி, அக்காலப் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார் சுகந்தி.

ஆங்கிலேயர் வரி வசூல் செய்தது தொடர்பில் விழுப்புரத்துப் பெண்ணின் பாடலைப் பாடியும் காட்டினார்.

இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கோலோச்சும் காலகட்டம். ஆனாலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இசைக்கோப்பு அல்லது பாடல்களை அமைப்பது வரவேற்கத்தக்கதன்று என்பது தமது தனிப்பட்ட கருத்து என்று பதிவுசெய்தார். இசைத்துறைக்குத் தேவைப்படும் கற்பனையாற்றலை, சிந்திக்கும் திறனை அது குறைக்கும் என்று குறிப்பிட்டார்.

இன்றைய இளையர்கள் மேற்கத்திய இசையால் ஈர்க்கப்படும் போக்கை ஒப்புக்கொண்டார். இருப்பினும், இளவயதில் கூடி விளையாடிய குழந்தைகள் வெற்றி தோல்விக்குப் பழகிப்போவதால் பிற்காலத்தில் வாழ்வில் எந்தச் சூழலிலும் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கமாட்டார்கள். விளையாட்டு மட்டுமன்றி நாட்டுப்புற இசை அறிவும் இதைச் செய்யும் என்று உறுதிபடக் கூறுகிறார் சுகந்தி.

மற்ற நாடுகளின் விளையாட்டுகள் அனைத்திற்கும் பாடல்கள் கிடையாது. ஆனால், தமிழ் மண்ணின் விளையாட்டு ஒவ்வொன்றுக்கும் அதுசார்ந்த பாடல் இருப்பதை எடுத்துச்சொன்னார். இந்த இசையறிவு இக்காலக் குழந்தைகளுக்கும் கற்பனைத் திறன் வளரவும் மனஉறுதிக்கும் வித்திடுவதாக விவரித்தார்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆவணப்படுத்துவதே தமது எதிர்கால இலக்கு என்கிறார் சுகந்தி. நாட்டுப்புறப் பாடல்களால் விளையும் நன்மையையும் அதில் குறிப்பிட எண்ணியுள்ளதாகக் கூறினார்.

சிங்கப்பூரின் ‘ஆட்டம்’ (ATAM) அமைப்பு, கடல்கடந்த நிலப்பரப்பில் நாட்டுப்புறக் கலைகளை மேடையேற்றவும் மக்களிடம் கொண்டுசேர்க்கவும் மேற்கொள்ளும் முயற்சி தம்மை நெகிழவைப்பதாகச் சுகந்தி குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று பயிலரங்குகளை நடத்தியுள்ள இவர், சிங்கப்பூர் உட்பட கடல்கடந்த நாடுகளில் வளரும் இளம் தலைமுறையினர் நாட்டுப்புற இசையால் கவரப்படுவதாகக் கூறினார்.

தமிழ் முரசு நேயர்களுக்காகப் பலவகைப் பாடல்களைப் பாடிக்காட்டிய சுகந்தி, தமது வளர்ச்சியில் பங்களிக்கும் ஆசிரியர், குடும்பத்தினர், ஊக்கமும் வாய்ப்பும் தரும் பல்வேறு அமைப்புகள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்