ரவி சிங்காரம்
தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரின் 32 இடங்களில் உள்ள 11,670 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பீட்சா, சமோசா, சுவைப் பானங்களை அக்டோபர் 31ஆம் தேதி விநியோகித்தது ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம்.
2015ல் ஐஆர்ஆர் அமைக்கப்பட்டதிலிருந்து தீபாவளி உணவு விநியோகத்தை ஆண்டுதோறும் நடத்திவந்துள்ளது. ஒரே நாளில் இத்தனை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஐஆர்ஆர் உணவு விநியோகித்துள்ளது இதுவே முதன்முறை.
இவ்வாண்டு அதிக நன்கொடைகள் பெறப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டைவிடக் கூடுதலான 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையில் மொத்தம் 86 தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.
காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஆர்க்கேடியா சாலைக்கு வந்து உணவுப் பொருள்களைத் தம் வாகனங்களில் ஏற்றி தீவு முழுவதும் 32 இடங்களுக்கு 66 தொண்டூழியர்கள் விநியோகித்தனர்.
அவர்களுடன், 20 தொண்டூழியர்கள் உணவுப் பொருள்களை வாகனங்களில் ஏற்றி இறக்கிவைக்க உதவினர்.
மொத்தம் 1,750 பீட்சா, 6,420 சமோசா, 10,800 பானங்கள் விநியோகிக்கப்பட்டன.
‘பீட்சா ஹட்’ 1,000 பீட்சாவையும் ‘டோமினோஸ்’ 500 பீட்சாவையும் ‘ஆல்ட் பீட்சா’ 250 பீட்சாவையும் வழங்கின.
‘கோர்மே ரெடி’ (Gourmet Ready) நிறுவனம் 6,420 சமோசாவையும் யோஸ் (Yeo’s) நிறுவனம் 10,800 பானங்களையும் வழங்கின.
இதற்கிடையே, நவம்பர் 13ஆம் தேதி வரை தொடர்ந்து நிதித் திரட்டு நடைபெறுகிறது. நன்கொடையளிக்க விரும்புவோர் https://www.giving.sg/donate/campaign/deepavali-drive-2026 இணையத்தளத்துக்குச் செல்லலாம். இதுவரை $30,000 இலக்கில் $25,000க்கும் மேலாகத் திரட்டப்பட்டுள்ளது.
அக்டோபர் 31ஆம் தேதியுடன் விநியோகம் நின்றுவிடவில்லை. கிடைத்த நன்கொடைகள் மூலம் பீட்சாவும் சமோசாவும் வேலையிடங்களுக்கும் தங்குவிடுதிகளுக்கும் தொடர்ந்து விநியோகிக்கப்படும்.
இந்த விநியோகம் மூலம் பயனடைய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள், https://tinyurl.com/DeepavaliDrive இணையத்தளம்வழி தமக்காகவும் தங்கள் நிறுவனங்கள் அல்லது தங்குமிடங்கள் சார்பாகவும் விண்ணப்பிக்கலாம். காத்திருப்போர் பட்டியலில் இருப்போர், ஐஆர்ஆர் நடத்தும் கிறிஸ்துமஸ் விநியோகம் போன்ற எதிர்வரும் நிகழ்ச்சிகள்மூலம் பயனடைவர்.
