உரமாக உருமாறும் உணவுக் கழிவு: உயர்கல்வி நிலையத்தின் உன்னத முயற்சி

உரமாக உருமாறும் உணவுக் கழிவு: உயர்கல்வி நிலையத்தின் உன்னத முயற்சி

படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

14 Nov 2026 - 6:00 am

3 mins read

சிறுவயதில், குறிப்பாக நமக்குப் பிடிக்காத காய்கறிகளைச் சாப்பிடாமல் தட்டில் சிறிதளவு உணவை மீதம் வைத்துவிட்டால் நம் பெற்றோர் மெதுவாக நம்மிடம், “இது ஒரு பறவைக்கு உணவாக இருந்திருக்கலாமே! இது ஒரு விவசாயியின் கடின உழைப்பு என்பதை மறந்துவிட்டாயா?”அல்லது, “இந்த உணவு நம் மேசைக்கு வந்துசேர எத்தனை பேர் கடினமாக உழைத்திருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்பர்.

அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் எளிமையானது. உணவு வீணாவதைக் குறைப்பதும் நமக்குத் தேவையான அளவு உணவை மட்டும் எடுத்துக்கொள்வதுமே அது.

உணவுக் கழிவுப் பிரச்சினை தனிமனிதர்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இது உலகளாவிய நிலையிலும் உள்ளூரிலும் கவனம் செலுத்தவேண்டிய சுற்றுச்சூழல் பிரச்சினையாகவும் உள்ளது.

சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 790,000 டன் உணவுப்பொருள்கள் கழிவாகச் சென்றன. நாட்டில் உருவான மொத்தக் கழிவுகளில் உணவுக் கழிவுகளின் பங்கு ஏறக்குறைய 11 விழுக்காடு.

உணவுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக அளவில் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கன்று.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தப் பல்கலையில் மூத்த விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் எனக்கும் டாக்டர் டானியா நாக்பாலுக்கும் உணவுக் கழிவுகள் குறித்துக் கீழ்க்காணும் சில முக்கியக் கேள்விகள் எழுந்தன.

1. அன்றாடப் பழக்கவழக்கங்களை எவ்வாறு மாற்றியமைத்து, உணவுக் கழிவுகளைக் குறைக்கலாம்?

2. உணவுக் கழிவுகளைக் குறைப்பதில் உயர்கல்வி நிலையங்கள் என்ன பங்களிப்பை ஆற்ற முடியும்?

எங்களைப் பொறுத்தவரை, அன்றாட வாழ்க்கையில் நிலைத்தன்மைமிக்க தெரிவுகளை ஊக்குவிப்பதில் உயர்கல்வி நிலையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

மாணவர்களும் ஊழியர்களும் உணவு உட்கொள்ளும் பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்து, உணவுக் கழிவுகளைக் குறைக்கும் வகையில் பொறுப்பான தெரிவுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் சூழலை அந்நிலையங்களால் உருவாக்க முடியும்.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில், இன்னொரு முக்கியமான கேள்வியும் எழுந்தது. ‘உணவுக் கழிவுகளை மட்டும் கண்ணுக்குப் புலப்படுமாறு செய்வதற்குப் பதிலாக, அவை உருவான பின்னர் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பதையும் வெளிப்படையாகக் காட்டினால் என்ன?’ என்பதுதான் அது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மேசைகளில் வைக்கப்படும் அறிவிப்புகள், பயிலரங்குகள், காணொளிகள்மூலம் உணவுக் கழிவுகளை உரமாக மாற்றும் செயல்முறை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் ஊழியர்களிடமும் ஏற்படுத்தும் பணியில் நாங்கள் இப்போது ஈடுபட்டுள்ளோம்.

இதன்மூலம், உணவுக் கழிவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதை மாணவர்களும் ஊழியர்களும் அறிந்துகொள்வதுடன், அவற்றைக் குறைப்பதிலும் வளமாக மாற்றுவதிலும் தங்களுக்கும் பங்கிருப்பதை உணர அவர்களை ஊக்குவிக்கிறோம்.

உரமாக்கப்படும் இயந்திரத்தில் கொட்டப்பட்டுள்ள உணவுக் கழிவுகள்.
உரமாக்கப்படும் இயந்திரத்தில் கொட்டப்பட்டுள்ள உணவுக் கழிவுகள். - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இந்தச் சிந்தனை ஒருங்கிணைந்த சமூகச் சூழலமைப்பாக உருவெடுத்துள்ளது. உணவக ஊழியர்கள் தங்கள் சமையலறைகளில் உருவாகும் உணவுக் கழிவுகளைப் பொதுக் கழிவுகளிலிருந்து தனியாகப் பிரித்துச் சேகரிக்கின்றனர்.

பராமரிப்பு ஊழியர்கள் அவற்றைச் சேகரித்து நிர்வகிப்பதற்கு ஆதரவளிக்கின்றனர். வளாகத் தோட்ட ஊழியர்கள், உணவுக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தைத் தோட்டத்தில் பயன்படுத்துகின்றனர். மாணவர்களும் ஊழியர்களும் அறுவடைச் செயல்பாடுகளில் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு, உணவுக் கழிவுகள் உருவாகும் நிலையிலிருந்து அவை உரமாக மாற்றப்பட்டு, பின்னர் அது தாவரங்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிலைவரை, பல்வேறு தரப்பினர் இணைந்து செயல்படுகின்றனர். இத்தகைய முயற்சிகளைப் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது.

தாவரங்கள் பயிரிடப்பட்ட இடங்களில் நேர்த்தியாகக் கொட்டப்பட்டுள்ள உரம்.
தாவரங்கள் பயிரிடப்பட்ட இடங்களில் நேர்த்தியாகக் கொட்டப்பட்டுள்ள உரம். - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
உரம் போடப்பட்ட பிறகு வளர்ந்த வாழைக்குலை.
உரம் போடப்பட்ட பிறகு வளர்ந்த வாழைக்குலை. - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
உரம் போடப்பட்ட பிறகு வளர்ந்த பப்பாளிக் காய்கள்.
உரம் போடப்பட்ட பிறகு வளர்ந்த பப்பாளிக் காய்கள். - படம்: சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

இன்றுவரை, பல்கலைக்கழக வளாகத்தில் கிட்டத்தட்ட 500 கிலோ உணவுக் கழிவுகள் உரமாக்கப்பட்டுள்ளன.

மீதமாகும் உணவு ஒரு பறவைக்கு உணவாக அமையலாம் என்ற சிறுவயது நினைவூட்டல், நாம் பெரும்பாலும் கவனிக்காமல் விட்டுவிடும் பொருள்களிலும் மதிப்பும் பயனும் அடங்கி இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

மேலும், பொது இடங்களில் இணைந்து உரம் தயாரிக்கும் இத்தகைய முயற்சி அதனை விரிவுபடுத்தி, நமது அன்றாடத் தெரிவுகளை மறுபரிசீலனை செய்யவும் உணவுக் கழிவுகளைக்கூட ஒரு புதிய வளமாகப் பார்க்கவும் நிலைத்தன்மைமிக்க வாழ்க்கை முறையை நோக்கி, சிறிய ஆனால் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றன.

கட்டுரையாளர்கள்:

டாக்டர் ஜி.காவேரி

டாக்டர் டானியா நாக்பால்

மூத்த விரிவுரையாளர்கள்

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

குறிப்புச் சொற்கள்