தமிழ் முரசின் ‘காற்பந்து கலாட்டா’வின் ஆறாம் பாகம் திங்கட்கிழமை (ஜூலை 20) யூடியூப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இதுவே இவ்வாண்டின் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி தொடரின் இறுதிப் பாகம்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தேசிய காற்பந்துக் குழு ஆட்டக்காரர் டி. ராமு கலந்துகொண்டார்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம், மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் ஆகியவை குறித்து வலையொளியில் விரிவாகப் பேசப்பட்டது.
மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் இடையே நடந்த முக்கியமான, சுவாரசியமான நிகழ்வுகளும் ஸ்பெயின்-அர்ஜென்டினா மோதிய இறுதி ஆட்டம் குறித்தும் அலசி ஆராயப்பட்டன.
மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. 6-4 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, இரண்டு கோல்கள் போட்டு மொத்தம் பத்து கோல்களுடன் பிரெஞ்சு நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே தங்கக் காலணி விருதைத் தட்டிச் சென்றது குறித்து பேசப்பட்டது.
இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி அர்ஜென்டினாவை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் கிண்ணம் ஏந்தியது. வெற்றி கோலை ஸ்பெயினின் ஃபெரன் டோரெஸ் கூடுதல் நேரத்தில் போட்டார்.
இரு ஆட்டங்களும் வலையொளியின்போது காணொளிப் பதிவுகள் மூலம் ஆராயப்பட்டன.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் வாகை சூடியது மட்டுமின்றி சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது, போட்டியில் மிகச் சிறந்த ஆட்டக்காரர் விருது, மிகச் சிறந்த கோல்காப்பாளர் விருது ஆகியவற்றைத் தட்டிச் சென்றது.
மிகச் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருதை ஸ்பெயினின் 19 வயது தற்காப்பு ஆட்டக்காரர் பாவ் குர்பாசியும் மிகச் சிறந்த ஆட்டக்காரர் விருதை ஸ்பெயினின் அணித் தலைவர் ரோட்ரியும் மிகச் சிறந்த கோல்காப்பாளர் விருதை ஸ்பெயினின் உனாய் சிமோனும் வென்றனர். இவை நியாயமான முடிவுதானா என்று வலையொளியில் விவாதிக்கப்பட்டது.
இது பற்றி மட்டுமல்லாது, ரசிகர்களுக்கான போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
கிண்ணத்தை வெல்லும் குழுவைச் சரியாக ஊகிப்பதே போட்டி. இதில் பலர் பங்கெடுத்தனர். சரியான பதிலை 14 பேர் ஊகித்தனர்.
அவர்களில் ஒருவருக்கு மட்டுமே பரிசு
$250 பெறுமானமுள்ள 'டிகேத்லான்’ பற்று அட்டை, உலகக் கிண்ண மாதிரி, உலகக் கிண்ணக் காற்பந்து ஆகியவற்றை அதிர்ஷ்டசாலி ஒருவர் தட்டிச் சென்றார்.
மின்னிலக்கக் குலுக்கல் முறை வழியாக வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள வலையொளியைப் பார்க்கவும்.
‘காற்பந்து கலாட்டா’ வலையொளியைக் கண்டு களித்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தமிழ் முரசு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

