தீபாவளியைக் கொண்டாட ஒன்றிணைந்த காற்பந்து வீரர்கள்

தீபாவளியைக் கொண்டாட ஒன்றிணைந்த காற்பந்து வீரர்கள்

படம்: எஸ்.விஜயன்

08 Nov 2026 - 1:00 pm

2 mins read

தீபாவளியை விளையாட்டின் மூலம் கொண்டாடும் நோக்கில், தீபாவளி கிண்ணம் 2026 காற்பந்துப் போட்டிக்கு அக்டோபர் 31ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘கேஜ் @ கார்லைல்’ விளையாட்டரங்கில் திரு எஸ்.விஜயன் ஏற்பாடு செய்த இப்போட்டியில், 21 முதல் 50 வயதுக்குட்பட்ட 10 அணிகளைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்றனர். ஆதரவாளர்கள், ஏற்பாட்டுக் குழுவினர் உட்பட மொத்தம் 80 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிற இனத்தவர் சிலரும் போட்டியில் பங்கேற்றனர்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பால், சமூகத்தினர் சந்தித்துப் பழகுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று திரு விஜயன் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், இல்லத்தின் சார்பில் சமூகச் சேவைகளை அறிமுகப்படுத்தவும் தொண்டூழியர்களைத் திரட்டவும் காட்சிக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

37 வயதுத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜாஃபர் சாதிக் போட்டியில் சிறந்த கோல்காப்பாளருக்கான விருதை வென்றார்.

காற்பந்துப் போட்டியில் சிறந்த கோல்காப்பாளருக்கான விருதை வென்ற ஜாஃபர் சாதிக்.
காற்பந்துப் போட்டியில் சிறந்த கோல்காப்பாளருக்கான விருதை வென்ற ஜாஃபர் சாதிக். - படம்: எஸ்.விஜயன்

“விளையாட்டின் மூலம் சமூகத்தினர் ஒன்றிணைந்து, நட்புறவை வளர்த்துக்கொண்டு, பண்டிகைக் கொண்டாட்டத்தை நினைவில் நிற்கும் தருணமாக்கியது மகிழ்ச்சியாக இருந்தது. விளையாட்டு என்பது வயது, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கக்கூடியது,” என்றார் அவர்.

ஏற்பாட்டுக் குழுவின் தொண்டூழியரான பிரகாஷ் சந்திரா.
ஏற்பாட்டுக் குழுவின் தொண்டூழியரான பிரகாஷ் சந்திரா. - படம்: எஸ்.விஜயன்

“சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சியில் தொண்டூழியராகப் பங்கேற்றேன். இதன் மூலம் குழுவாகச் செயல்படுவது, தொடர்புகொள்வது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற அனுபவங்களைப் பெற்றதோடு, புதிய நண்பர்களையும் சந்தித்தேன்,” என்றார் ஏற்பாட்டுக் குழுவின் தொண்டூழியரான பிரகாஷ் சந்திரா.

இத்தகைய போட்டிகளை ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது நடத்த ஏற்பாட்டாளர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துபோட்டிதீபாவளிதீபாவளி 2026