தமிழ் முரசின் ‘காற்பந்து கலாட்டா’ வலையொளியின் ஐந்தாம் பாகம் வியாழக்கிழமை (ஜூலை 16) யூடியூப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.
வலையொளியின் சிறப்பு அம்சமாகத் தேசிய காற்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரரான டி. ராமு கலந்துகொண்டு, நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டி குறித்த தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
டி. ராமு, 1994ஆம் ஆண்டிலிருந்து 1997ஆம் ஆண்டுவரை தேசியக் காற்பந்துக் குழுவில் அங்கம் வகித்து பல ஆட்டங்களில் களமிறங்கினார்.
1994ஆம் ஆண்டில் மலேசிய லீக் பட்டத்தையும் மலேசியக் கிண்ணத்தையும் சிங்கப்பூர் குழு வென்றது. அந்த அணியில் டி. ராமுவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1995ஆம் ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர்க் காற்பந்துக் குழு வெண்கலம் வென்றது. அக்குழுவிலும் டி. ராமு இடம்பெற்றிருந்தார்.
நடந்து முடிந்த ஸ்பெயின்-பிரான்ஸ், இங்கிலாந்து-அர்ஜென்டினா இடையிலான ஆட்டங்கள் பற்றி வலையொளியில் அலசி ஆராயப்பட்டது. அரையிறுதிக்கு முன்பு தாக்குதலில் அதிரடி காட்டிய பிரான்ஸ், அரையிறுதியில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் பெட்டிப் பாம்பாக அடங்கியது பற்றியும் அரையிறுதியில் இங்கிலாந்து கையாண்ட உத்தி அதைத் தோல்வியின் பிடியில் சிக்க வைத்தது குறித்தும் வலையொளியில் கலந்துரையாடப்பட்டது.
ஆட்டங்களின் முக்கியமான தருணங்கள் காணொளிப் பதிவு மூலம் காட்டப்பட்டு ஆராயப்பட்டன.
ஸ்பெயின்-அர்ஜென்டினா இடையிலான இறுதி ஆட்டத்துக்கான முன்னுரைப்பும் வலையொளியில் முன்வைக்கப்பட்டது.
ரசிகர்களுக்கான போட்டியின் முடிவுகளும் வலையொளியின்போது அறிவிக்கப்பட்டன. போட்டியில் பலர் பங்கெடுத்து நல்லாதரவு வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தமிழ் முரசு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய குழுக்கள் தகுதிபெறும் என்று மொத்தம் எட்டுப் பேர் சரியாக ஊகித்தனர்.
அவர்களில் வெற்றியாளர் மூவரைத் தேர்ந்தெடுக்க வலையொளியின்போது மின்னிலக்க முறைப்படி குலுக்கல் நடத்தப்பட்டது. வெற்றியாளர்களுக்குத் தலா $75 பெறுமானமுள்ள ‘டிகேத்லான்’ பற்று அட்டை வழங்கப்படுகிறது. வெற்றியாளர்களுடன் தமிழ் முரசு தொடர்புகொள்ளும்.
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூலை 20) அதிகாலை மூன்று மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தும் குழுவைச் சரியாக ஊகிக்கும் ஒருவருக்கு $250 பெறுமானமுள்ள ‘டிகேத்லான்’ பற்று அட்டை, மாதிரி உலகக் கிண்ணம், உலகக் கிண்ண காற்பந்து ஆகியவை பரிசுகளாக வழங்கப்படும். போட்டியில் பங்கெடுப்போர் தங்கள் விடையை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இரவு 9 மணிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை வருடி அல்லது https://tinyurl.com/TM-WCFinal எனும் இணைய இணைப்பு மூலமாகச் சென்று பதிலைப் பதிவிடவும்.
இப்போட்டிக்கான முடிவுகள் ‘காற்பந்து கலாட்டா’ ஆறாம் பாகத்தில் அறிவிக்கப்படும்.

