மழலைத் தமிழ் மணம் கமழ்ந்த ‘இன்தமிழும் இளையர்களின் ஈடுபாடும்’ விழா

மழலைத் தமிழ் மணம் கமழ்ந்த ‘இன்தமிழும் இளையர்களின் ஈடுபாடும்’ விழா

படம்: ஹர்ஷவர்த்தினி

08 Apr 2026 - 6:30 am

2 mins read

-கணேஷ் அனுராதா கௌசல்யா

தமிழ்மொழி விழாவையொட்டி, திருக்குறள், தமிழ்ப் பழமொழிகளைச் சுவைபடக் கதைகளாகக் கோத்துப் படைத்து, உமறுப்புலவர் அரங்கை மழலைத் தமிழ் மணக்கும்படிச் செய்தனர் பள்ளி மாணவர்கள்.

பாலர் பள்ளி, தொடக்கநிலை மாணவர்கள் தங்களின் தமிழாற்றலையும், திறனையும் வெளிப்படுத்திப் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளின் பரிசளிப்பு விழாவான ‘இன்தமிழும் இளையர்களின் ஈடுபாடும்’ எனும் நிகழ்ச்சி ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெற்றது.

போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சிறுவர்கள் மேடையேறியும் திறன்காட்டினர். மாணவர் அறிவு அலங்காரம் ஆதவன் அலங்காரன் உரைத்த ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ எனும் தலைப்பிலான திருக்குறள் கதை, நகைச்சுவையுடன் வாழ்க்கை நெறியை நயமாகச் சொன்னது.

பாலர் பள்ளி மாணவி, பிரக்ஞா ஸ்ரீநிதி, ‘பேராசை பெருநட்டம்’ என்ற பழமொழி தொடர்பிலான கதையைச் சுவைபடக் கூறினார்.

முதல் பரிசு வென்ற மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
முதல் பரிசு வென்ற மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. - படம்: ஹர்ஷவர்த்தினி

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற தமிழ்ப் போட்டிகளில் 60 தொடக்கப்பள்ளிகள், 30 பாலர் பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் பங்கேற்றன. பல்வேறு போட்டிகளில் 65 மாணவர்கள் வாகை சூடினர். வெற்றியாளர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன், தமிழ்ப் புழக்கம் குறைவாக உள்ள மாணவர்களையும் கண்டறிந்து, வழிகாட்ட அமைப்புகள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நயம்படக் கதைசொல்லும் மாணவர் அறிவு அலங்காரம் ஆதவன் அலங்காரன்.
நயம்படக் கதைசொல்லும் மாணவர் அறிவு அலங்காரம் ஆதவன் அலங்காரன். - படம்: ஹர்ஷவர்த்தினி

தொடர்ந்து, வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம் தலைமையில், ‘தமிழ்மொழியில் கடப்பாடும் ஈடுபாடும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இரு பிரிவுகளில் பங்கேற்றுப் பரிசுகள் வென்ற சகோதரர்கள் அறிவு அலங்காரம் ஆதவன் அலங்காரன், அறிவு அலங்காரம் அறநேசன் அலங்காரன் இருவரும், “முதற்பரிசு கிட்டும் என எதிர்பார்க்கவில்லை. பலர்முன் மேடையில் பேச வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்றனர்.

கலந்துரையாடலில் பங்கேற்ற விருந்தினர்கள். (இடமிருந்து) ரெ. கருணாநிதி, ஜோதி மாணிக்கவாசகம், ந. நாராயணசாமி, வெ. இந்துமதி.
கலந்துரையாடலில் பங்கேற்ற விருந்தினர்கள். (இடமிருந்து) ரெ. கருணாநிதி, ஜோதி மாணிக்கவாசகம், ந. நாராயணசாமி, வெ. இந்துமதி. - படம்: ஹர்ஷவர்த்தினி

“என் மகன்கள் உட்பட மாணவர்கள் பலரும் தமிழில் அழகுறப் பேசியதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. தமிழின் எதிர்காலம் இளம் தலைமுறையின் கைகளில் நன்றாக வளர்கிறது என்பதை இவ்வகை விழாக்களின் மூலம் அறியலாம்,” என்றார் இவர்களது தந்தை அறிவு அலங்காரம்.

மழலைக் குரலால் அரங்கை மயக்கிய பிரக்ஞா ஸ்ரீநிதி, “முதலில் சற்றே அச்சமாக இருந்தாலும் ஊக்கத்துடன் மேடையில் பேசி முடித்ததில் மகிழ்ச்சி,” என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்