உலகெங்கிலும் வாழும் மாணவர்கள் தமிழ்மொழியை இலகுவாகவும் இலவசமாகவும் கற்றுக்கொள்ள இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் கல்வியாளர் பி.எம்.ஏ.அமானுல்லாஹ்.
அதன் நிறுவனரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (சிங்கப்பூர் கிளை) செயலாளரும் கணித விரிவுரையாளருமான அவர் இந்த இணையத்தளத்தை வடிவமைத்துள்ளார்.
மாணவர்கள் தமிழ்மொழியை எளிமையாக பயிலவும் பயிற்சி செய்யவும் 40க்கும் மேற்பட்ட கணினிப் பயிற்சி தமிழ் விளையாட்டுகளைக் கொண்டு மாணவர்களைக் கவரும் வண்ணம், நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
‘சொற்கள்’ என்றழைக்கப்படும் இந்த இணையத்தளம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய பயனாளர்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது. மேல் விவரங்களை www.sorkkal.com எனும் இணையப்பக்கத்தில் காணலாம்.
‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அறநிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான அ.முஹம்மது இர்ஷாத் ‘சொற்கள்’ இணையத்தளத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தார்.
கடந்த 16 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை ஆற்றிவரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் இந்நிகழ்ச்சி நவம்பர் 1ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
ஏறத்தாழ 100 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
“இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பதிவோ மாதாந்தரக் கட்டணமோ செலுத்தத் தேவையில்லை.
“பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் தமிழார்வத்தை வளர்க்க இந்தத் தளம் மிகவும் உதவியாக இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி அளிக்க இந்தத் தளம் மிகவும் ஏற்றது.
“கணினி, மடிக்கணினி போன்ற பலவகை மின்னிலக்கக் கருவிகளிலும் அனைவரும் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்,” என்று கூறினார் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் தலைவர் மு.அ.காதர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு இத்தளத்தின் அடிப்படைக் கட்டமைப்பைக் குறுகிய காலத்தில் உருவாக்க முடிந்தபோதும், இரு மாதங்களாகப் பிழைகளைச் சரிபார்த்து, கூடுதல் கவனம் செலுத்தி இந்தத் தமிழ் கற்றல் இணையத்தளத்தை வடிவமைத்தார் கல்வியாளர் அமானுல்லாஹ், 62.
தமிழ் கற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இந்த இணையத்தளத்தை உருவாக்க அவரைத் தூண்டியது.
”தமிழ் எனது தாய்மொழி. ஒரு கல்வியாளராக மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் இந்தத் தமிழ்க் கற்றல் இணையத்தளம்,” என்று அவர் கூறினார்.
பிள்ளைகள் தமிழை விரும்பிப் படித்தால் அது கடினமாக இருக்காது. நூலகத்திற்குச் செல்லும்போது ஆங்கில நூல்களோடு சில தமிழ்க் கதைப் புத்தகங்களையும் பிள்ளைகளுக்கு எடுத்துத்தர வேண்டும் எனக் கல்வியாளர் அமானுல்லாஹ் அறிவுறுத்துகிறார்.
