ரஞ்சனி, சில்வியா ஆகிய இருவருக்கும் இடையேயான நட்பு, அவர்கள் இணைந்து பணியாற்றிய பழைய அலுவலகப் பணியிடத்தையும் தாண்டிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
வெவ்வேறு பண்பாட்டு, பாரம்பரியப் பின்னணியைக் கொண்டிருந்த போதிலும், இருவரிடையே நிலவும் அன்பும் புரிதலும் அவர்களைப் பிரிக்க முடியாத உற்ற தோழிகளாக்கின.
தற்போது தீபாவளிப் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், தனது அலுவலகத் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பாரம்பரிய இந்திய உடையில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் சில்வியாவுக்கு எழுந்தது.
தனது ஆறு வயது மகளுக்கும் தனக்கும் பொருத்தமான தீபாவளி ஆடைகளைத் தேர்வு செய்ய உதவுமாறு தனது தோழியான ரஞ்சனியிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
தோழியின் விருப்பத்தை ஏற்று, பொங்கோலில் வசிக்கும் ரஞ்சனி, சில்வியாவையும் அவரது மகளையும் லிட்டில் இந்தியா, பெர்ச் ரோடு சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
“சில்வியாவுடனான எனது நட்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தீபாவளிப் பண்டிகையின்போது மக்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிவது வழக்கம். இந்த முறை என் தோழி பாரம்பரிய இந்திய ஆடையை அணிய விரும்பினார். அவருக்கு உதவவும் ஆடைகளைத் தேர்வு செய்யவும் லிட்டில் இந்தியாவுக்கு என் தோழியை அழைத்து வந்தேன்,” என ரஞ்சனி கூறினார்.
பிலிப்பீன்சிலிருந்து வந்த சில்வியா இந்தியப் புடவையை அணிந்து பார்க்கத் தோழி ரஞ்சனி உதவினார்.
அங்கு வண்ணமயமாகக் காட்சியளித்த பல்வேறு பாரம்பரிய உடைகளிலிருந்து, சில்வியாவுக்கும் அவரது மகளுக்கும் நேர்த்தியான தீபாவளி ஆடைகளைத் தோழிகள் இருவரும் மகிழ்ச்சியோடு தேர்வு செய்து வாங்கினர்.
“என் தோழியின் உதவியுடன் நானும் என் மகளும் இந்திய ஆடைகளை வாங்கியுள்ளோம். எங்களின் பல ஆண்டு நட்பின் மூலம் நாங்கள் ஒருவருக்கொருவர் பண்டிகைகளையும் கலாசாரத்தையும் பற்றி அறிந்துகொண்டோம். அடுத்த தலைமுறையான எங்கள் பிள்ளைகள் மூலமும் எங்கள் நட்பு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் சில்வியா.
