லிட்டில் இந்தியா வர்த்தகங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவு

லிட்டில் இந்தியா வர்த்தகங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவு

2 mins read
5e43b035-33eb-48e2-9667-0f6015551d43
(இடமிருந்து) லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத் தலைவர் ரெகுநாத் சிவா, வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகத் துணைத் தலைமை நிர்வாகி கேரி கோ, சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத் தலைவர் குர்சரண் சிங் ஆகியோர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். - படம்: லிஷா

மாறிவரும் மனிதவள, பொருளியல் சவால்களுக்கு மத்தியில் வேலைவாய்ப்பு ஆதரவு, திறன் மேம்பாடு, மனிதவளம் ஆகியவற்றில் லிட்டில் இந்தியா வர்த்தகங்கள் இனி கூடுதல் ஆதரவை எதிர்பார்க்கலாம்.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஆகியவை தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகத்துடன் (இ2ஐ) ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கட்கிழமை (ஜூலை 20) கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்வழி லிட்டில் இந்தியா வர்த்தகங்களும் இந்திய உணவகங்களும் வலுவடைந்து, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவு பெறலாம்.

தேவன் நாயர் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வர்த்தக உரிமையாளர்கள், வணிகர்கள், பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

ஆட்பற்றாக்குறை, நிதி நிர்வாகம் போன்ற சவால்களைப் பொதுவான வர்த்தகர்கள் சந்திப்பதுண்டு என்று தெரிவித்தார் லிஷா தலைவர் ரெகுநாத் சிவா.

“அவர்களுக்கு ‘இ2ஐ’ கழகத்தை அறிமுகப்படுத்துவதன்வழி தங்கள் வர்த்தகங்களுக்குத் தேவையான உதவி அல்லது சேவையை அவர்கள் நேரடியாகப் பெறுவதை உறுதிசெய்ய முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘இ2ஐ’, நியாயமான, முன்னேற்ற வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி (TAFEP) ஆகியவற்றின் சார்பில் உரைகள் ஆற்றப்பட்டன.

நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய மனிதவள ஆதரவு, பணியாளர் ஆதரவுத் திட்டங்கள், நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகள் குறித்துப் பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தற்போது லிஷாவின்கீழ் கிட்டத்தட்ட 400 வர்த்தகங்களும் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின்கீழ் கிட்டத்தட்ட 60 உணவகங்களும் உள்ளன.

கழகத்தின்வழி விரைவில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் வர்த்தகர்களுக்குச் சில முக்கியக் கலந்துரையாடல்களை நடத்த லிஷா திட்டமிட்டுள்ளதாக அதன் செயலாளர் ருத்ராபதி பார்த்தசாரதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
லிஷாலிட்டில் இந்தியாவர்த்தகம்ஆதரவு