சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னோக்கிய பயணம்

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னோக்கிய பயணம்

4 mins read
39b26b1e-173f-4193-ab34-7bbe11430677
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் இணைந்து சங்கத்தின் தலைவர் தனபால் குமார் சிறப்பு நூலை வெளியிட்டார். - படம்: த.கவி
multi-img1 of 2

கடந்த 75 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்கு அரணாகவும் துணையாகவும் இருந்துவந்துள்ளது சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்.

இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து தமிழாசிரியர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

“இந்த முக்கிய மைல்கல்லை வளமான எதிர்காலத்தின் தொடக்கப்புள்ளியாகப் பார்க்கிறேன்,” என்று சங்கத்தின் தலைவர் தனபால் குமார் கூறினார்.

“இத்தனை காலம் சிங்கப்பூரில் தமிழ்மொழி நீடித்து வளர இச்சங்கம் பெரிதும் பங்காற்றியுள்ளது. இனிவரும் காலங்களிலும் அத்தகைய முயற்சிகள் தொடரும்,” என்று அவர் உறுதியளித்தார்.

சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாகவும் வளரும் மொழியாகவும் இருப்பதை உறுதிசெய்வதில் தங்கள் சங்கத்திற்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் திரு தனபால் குமார் குறிப்பிட்டார்.

தமிழ் மாணவர்களின் கற்றலுக்காக ஏற்பாடு செய்யப்படும் முயற்சிகளுக்கு என்றும் சங்கத்தின் ஆதரவு இருக்குமென அவர் கூறினார்.

“அண்மையில், தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ‘எடுவில்’ என்ற கற்றல் தளத்தை உருவாக்கி, இளைய மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க முனைந்ததற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். அத்தகைய முயற்சிகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களின் பணிகளுக்கும் உதவிகரமாக இருக்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகையால், அம்முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதோடு வழிகாட்டுதல், ஆலோசனை போன்றவற்றை வழங்கவும் சங்கம் முற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

திட்டங்களும் கனவுகளும்

தமிழாசிரியர்களின் வளர்ச்சிக்காகச் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகத் திரு தனபால் குறிப்பிட்டார்.

“பொதுவாக, தமிழாசிரியர்கள் பள்ளிகளில் தலைமைத்துவப் பொறுப்புகள் ஏற்பது அரிதாக உள்ளது. இந்நிலையை மாற்ற முன்னாள் பள்ளி தலைவர்களைத் தமிழாசிரியர்களுக்கு வழிகாட்டிகளாக்கி, அவர்களது தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தத் திட்டமிடுகிறோம்,” என்று அவர் விளக்கினார்.

உள்ளூர்த் தமிழாசிரியர் பற்றாக்குறையைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் பகிர்ந்து[Ϟ]கொண்டார்.

சங்கம் தொடர்ந்து கல்வி அமைச்சின் மனிதவளப் பிரிவுடன் இணைந்து செயல்பட்டு கூடுதல் தமிழாசிரியர்களை ஈர்க்க முற்படுகிறது.

“பலருக்கும் தமிழாசிரியர் பணியில் வளர்ச்சி வாய்ப்புகள் குறைவென்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. அது உண்மையன்று என்ற விழிப்புணர்வு இல்லாததே எங்களுக்கு மிகப் பெரிய சவால்,” என்றார் அவர்.

சவாலைச் சமாளிக்க பல்வேறு சமூகத் தலைவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் சொன்னார்.

எதிர்காலத்தில் கூடுதலான மாணவர்கள் தமிழில் சரளமாக பேசுவதைக் கண்டால், அதனையே சங்கத்தின் வெற்றியாகக் கருதுகிறார் திரு தனபால் குமார்.

“ஆசிரியர்களின் நலனும் திறனும் உயர்ந்தால், மாணவர்களின் தரமும் உயரும். ஆகையால், ஆசிரியர்களைப் பேணுவதில் நாங்கள் முக்கியக் கவனம் செலுத்துகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகத் தலைவர்கள் வாழ்த்து

தமிழாசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க சங்கம் கைகொடுத்து வருவதாகச் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைவர் அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் தமிழாசிரியர்கள் அதனைத் திறம்பட பயன்படுத்த சங்கம் நிச்சயம் கைகொடுக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளாகச் சங்கம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்று சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற ஆலோசகர் டாக்டர் வீரமணி குறிப்பிட்டார்.

“தமிழாசிரியர்கள் அனைவரும் சங்கத்தில் இணைந்து சேவையாற்றுவது முக்கியம். தங்களுக்குச் சோறுபோடும் தமிழுக்குத் தொண்டுசெய்ய அவர்கள் முன்வர வேண்டும்,” என்றார் அவர்.

தற்போது இளைய ஆசிரியர்கள் பலர் சங்கத்தின் தலைமைத்துவப் பொறுப்புகளில் இருப்பது நெகிழ்ச்சியளிப்பதாக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி கூறினார்.

இளைய ஆசிரியர்களின் தலைமையில் சங்கம் மேல்நோக்கிச் செல்வதில் மகிழ்ச்சி என்றும் சங்கம் தனது அனுபவத்தையும் வளங்களையும் கொண்டு தொடர்ந்து சிங்கப்பூரில் தமிழ்மொழியை வளரச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மொழியைக் கற்பிப்பதோடு நின்றுவிடாது, தமிழ்வழிச் சிந்தனை, பண்பாடு, அடையாளம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் விதைப்பதே இன்றைய ஆசிரியர்களின் எதிர்காலப் பங்கு என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பதிவாளர் ரா.ராஜாராம் கருதுகிறார்.

இன்றைய சூழலில் தமிழை வாழ்வியல் மொழியாகவும் உலகளாவிய வாய்ப்புகளுக்கான மொழியாகவும் மாணவர்கள் உணரச் செய்வதே தமிழாசிரியர்களின் உயரிய பணியென்றும் அவ்வாசிரியர்களுக்குச் சங்கம் தொடர்ந்து ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்குமென்றும் அவர் நம்புகிறார்.

இளைய ஆசிரியர்களின் குரல்கள்

இளைய ஆசிரியர்கள் பலர் சங்கத்தின் தற்போதைய முயற்சிகளைப் பாராட்டும் அதே வேளையில், புதிய முயற்சிகளையும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

இளைய ஆசிரியர்களுக்கு முக்கியச் சவாலாக அமைவது கற்பித்தல் வளங்கள் என்று விக்டோரியா பள்ளி ஆசிரியர் கஜோல் ரெவி, 23, கருதுகிறார்.

“ஆசிரியர் பணியில் புதிதாகக் காலடி எடுத்து வைக்கும்போது எங்களிடம் பெரிதாக கற்பித்தல் வளங்கள் இருப்பதில்லை. அவற்றைத் தொடக்கத்திலிருந்து தயார்செய்யவும் நீண்ட நேரம் எடுக்கும். மூத்த ஆசிரியர்கள் அவர்களுடைய வளங்களை எங்களுடன் பகிரும்வண்ணம் சங்கம் ஏற்பாடுகள் செய்தால் சிறப்பாக இருக்கும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் ஆசிரியர்களின் இணக்கத்திற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டால் அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறலாம் என்று எண்ணுகிறார் யுவான் சிங்க் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவசண்முக பிரியா, 23.

“ஒவ்வொரு ஆசிரியர்க்கும் வெவ்வேறு திறன்கள் இருக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் திறன்களைப் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் அவர்.

இளையர்களுக்குத் தமிழாசிரியர் பணியில் நல்ல வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்த்துவதைச் சங்கத்தின் எதிர்கால வெற்றியாக கருதுகிறார் ஈசூன் டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்ருதிகா குமார், 22.

“மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி போன்ற நிலைகளில் பயிலும்போதே சங்கம் அவர்களுக்காகச் சில கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து, தமிழாசிரியர் பணியின் மீதான ஆர்வத்தை வளர்க்கலாம்,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், அனைத்து யோசனைகளையும் கருத்துகளையும் மனத்திற்கொண்டு முன்னோக்கிச் செயல்படவிருப்பதாகச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் உறுதியளித்தது.

குறிப்புச் சொற்கள்
ஆசிரியர்கள்சங்கம்சிங்கப்பூர்தமிழ்