‘எம்எஸ்எஃப்’ இளையர் இல்லங்களில் கனிவுடன் கற்பிக்கும் கணே‌ஷினி ஸ்ரீ கந்தன்

‘எம்எஸ்எஃப்’ இளையர் இல்லங்களில் கனிவுடன் கற்பிக்கும் கணே‌ஷினி ஸ்ரீ கந்தன்

3 mins read
db24384a-e78a-450e-8979-0ddc7c9ae560
கணே‌ஷினி கந்தன். - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

ஆசிரியர்கள் சூழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர் கணே‌ஷினி ஸ்ரீ கந்தன். அந்த வகையில், இவரின் வாழ்க்கைத் தொழில் ‘முன்னரே முடிவுசெய்யப்பட்டது’ என்றுகூட சொல்லலாம்.

இவரின் தாய் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவரின் தங்கையும் கல்வி அமைச்சில் ஆசிரியராகப் பணிபுரிபவர்.

“காவல்துறை அதிகாரியான எனது தந்தைகூட காவல்துறைக் கழகத்தில் பயிற்றுவிப்பாளராக இருந்தார். அவரும் ஒரு வகையில் கற்பித்தலில் ஈடுபட்டார்,” என்றார் திருவாட்டி கணே‌ஷினி.

அறிவியலில் தனக்கிருந்த ஆர்வத்தால் திருவாட்டி கணே‌ஷினி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருள் பொறியியலில் (materials engineering) இளநிலைப் பட்டக் கல்வி பயின்றார்.

பிறகு தேசியக் கல்விக்கழகத்தில் ஆசிரியர்ப் பயிற்சி மேற்கொண்டார். தெம்பனிசில் உள்ள ஜுன்யுவான் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றியபோது 2011ஆம் அண்டு ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொடர்பில் முதுநிலைப் பட்டக் கல்வி பயின்றார்.

2013ல் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் (எம்எஸ்எஃப்) இளையர் இல்லங்களில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு திருவாட்டி கணே‌ஷினிக்குக் கிடைத்தது. அப்பணியை ஏற்றுக்கொண்டார்.

முன்பு வழக்கநிலைத் தொழில்நுட்பக் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம், இவருக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இளையர் இல்லங்களில் கற்பிக்க உதவியதாகத் தெரிவித்தார்.

எனினும், சாதாரணப் பள்ளிகளிலிருந்து இதுபோன்ற பள்ளிகளுக்கு மாறுவது என்பது திருவாட்டி கணே‌ஷினிக்கு சவாலாக இருந்தது. தனது கண்டிப்பான அணுகுமுறை ஒரு மாணவருக்குப் பிடிக்காததால் வேலை தொடங்கி மூன்று மாதங்களிலேயே பதவி விலகும் அளவுக்குச் சென்றார்.

“அது எனது தவறுதான். நான் சொன்ன விதம் சரியில்லை. அது அந்த மாணவரை மேலும் கோபப்படுத்தியிருக்கலாம். அவரின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள நான் முயற்சி எடுக்கத் தவறினேன்,” என்று திருவாட்டி கணே‌ஷினி விளக்கமளித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவரை இல்லம் கண்டித்த பிறகு அவர் திருவாட்டி கணே‌ஷினியை மேலும் கோபத்துடன் பார்க்க ஆரம்பித்தார்.

இதுபோன்ற பிரச்சினைகளைக் கடந்து தனது சக ஊழியர்களின் ஆதரவோடு பணியைத் தொடர்ந்தார் திருவாட்டி கணே‌ஷினி.

அதே மாணவர், காலப்போக்கில் திருவாட்டி கணே‌ஷினியைப் புரிந்துகொண்டார். திருவாட்டி கணே‌ஷினி தன் மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டதற்காக அவருக்கு நன்றி கூறி கடிதமும் தந்தார் அந்த மாணவர்.

அதே வகுப்பில் மிகவும் போக்கிரித் தனமான மாணவர்களையும் திருவாட்டி கணே‌ஷினி கையாள வேண்டியிருந்தது. பிறகு 2014ல் தனது தாய் நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அந்த மாணவர்களைப் பற்றிய திருவாட்டி கணே‌ஷினியின் கருத்து மாறத் தொடங்கியது.

அவ்வேளையில் அதே போக்கிரித்தனமான மாணவர்கள், தாயை இழக்கக்கூடிய நிலையில் இருந்த திருவாட்டி கணே‌ஷினிக்கு ஆறுதலாக இருந்தனர்.

“இந்தச் சிறுவர்கள் பார்ப்பதற்குத்தான் கரடுமுரடான தோற்றத்துடன் இருப்பர். ஆனால், அது அவர்களின் உண்மையான தன்மையை மறைக்கும் சுவர் மட்டுமே,” என்று திருவாட்டி கணே‌ஷினி சொன்னார்.

தனது 18 ஆண்டுகால ஆசிரியர்ப் பணியில் திருவாட்டி கணே‌ஷினி எப்போதும் துடிப்போடு இருப்பார். இப்போது சிங்கப்பூர் சிறுமியர் இல்லத்தில் மூத்த ஆசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றும் இவர் அதே துடிப்புடன் இயங்குகிறார்.

“தொடர்ந்து மேம்படுவதிலும் கற்றல், கற்பித்தலில் உள்ள ஆக அண்மைய நிகழ்வுகளைத் தெரிந்து வைத்திருப்பதிலும் திருவாட்டி கணே‌ஷினி சற்றும் குறையாமல் ஈடுபாடு கொண்டிருப்பது நமது கல்விப் பாடங்களுக்கான உயரிய தரநிலைகளை எடுத்துக் காட்டுகிறது,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இளையர் இல்லங்களின் கல்விக்கான முதல்வர் ஓவ் குவோன் லியோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிங்கப்பூர்ஆசிரியர்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுஇளையர்