இசைக்கு அசையாத இதயம் ஏது? அதுவும் இறைவனை எண்ணிப் பாடும்போது மயங்காத மனம் ஏது? உருகாத உள்ளம் ஏது?. அத்தகைய உணர்வுதான் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் இசை மலர்கள் பூத்து மணம்வீசிய ‘இசைத் தமிழ் இறைத் தமிழ்’ நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தவர்களுக்கு ஏற்பட்டது.
‘த்வனி மியூசிக் அகாடமி’ இசைப் பள்ளி மாணவர்களின் கச்சேரி, வந்திருந்தோருக்குப் பாரம்பரிய இசையை உள்ளத்து உணர்வோடும் தாள லயத்தோடும் உணவாகப் பந்திவைத்தது. அதில் தமிழை முந்தி வைத்தது. இறைவனைப் போற்றிப் பாடிய இசைக்குப் பாலமாய்த் துணைவந்து தனைத் தந்தது இன்பத் தமிழ்.
நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும் பிரிவுக்குத் ‘தமிழ்ச்சோலை’ என்று பெயர். அதை மனத்திற்கொண்டு இசைக் குழுவின் பல்வேறு நிலைகளில் உள்ள பிரிவுகளுக்கும் மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. தாமரை, ரோஜா, குறிஞ்சி, முல்லை, மல்லிகை, பாரிஜாதம், செம்பருத்தி, குவளை, அனிச்சம், சூர்யகாந்தி, கனகாம்பரம், சாமந்தி, நாகலிங்கம் முதலியவை அவற்றுள் அடங்கும்.
தமிழில் 26 பாடல்களைக் கண்ணிகளாகத் தொடுத்துப் பூமாலை கட்டி, இறைவனுக்குப் பாமாலையாக இசை விருந்து படைத்தனர் இக்குழுவினர்.
சிறார், பெரியவர்கள் என 50க்கும் மேற்பட்ட பாடகர்களும் வயலின், மிருதங்க இசைக் கலைஞர்களும் ஏழு சுரங்களில் எட்டவொண்ணாத எல்லையை எட்டினர்.
மாணவர்களுக்குத் தமிழின்மீது ஆர்வத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமே வித்தாய் அமைந்ததாகக் கூறினார் த்வனி இசைப் பள்ளியின் நிறுவனர் பாரதி முரளி.
“கோயில் நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றில் எங்கள் மாணவர்கள் பங்கெடுத்து வருகின்றனர். அவர்களுக்கெனத் தனியாய் ஒரு மேடையை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் என் நீண்ட நாள் ஆசை. இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழின் அழகு, உச்சரிப்பு, வார்த்தைகளின் பொருள் எனப் பலவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டதில் எனக்கு மிக மகிழ்ச்சி,” என்றார் இவர்.
நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் வசிக்கும் இவரின் மாணவர்கள் பாடிய காணொளிகளும் இடம்பெற்றன.
சுப்பிரமணிய பாரதியார், பாபநாசம் சிவன், மகாராஜபுரம் சந்தானம், வள்ளலார் உட்பட பலரின் பாடல்கள் தமிழின் அழகை, நேர்த்தியை, பொருள் அடர்த்தியை அருமையாக வெளிப்படுத்தின.
‘வேழமுகத்து விநாயகனே’ என்று கச்சேரியை இளமொட்டுகள் தொடங்கியதிலிருந்து களைகட்டத் தொடங்கியது இந்த இசைமாலையின் இசைக் காலை.
‘மயில்மீது விரைந்தோடி வா’ எனும் முருகனின் பாடலில் வேகம் பெற்ற கச்சேரியின் உற்சாகம், ராகம் தானம் பல்லவியில் உச்சம் தொட்டது. அதில் ‘சிவசங்கரனை தயாகரனை கௌரி மனோகரனை நினை நீ சதா சிவ’ எனும் பல்லவிக்கு ஆசிரியர் பாரதி, கௌரி மனோகரியில் அமைத்திருந்த மெட்டு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
பின்னர், ராமசாமி பிள்ளை இயற்றியிருந்த ‘ஜெகதீஸ்வரி கிருபை புரி’ எனும் பாடலில் மனோதர்மத்தை மேல்நிலை மாணவர்கள் நிகழ்த்திக் காட்டியது பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது.
இறுதியில் மலர்கள் நிரம்பிய பூந்தோட்டம், பசந்த் பஹார் ராகத்தில் அமைந்த தில்லானா நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
இசைமலர்கள் வழங்கிய தேனை உண்ட ரசிகர்களின் எண்ணிக்கை இருநூற்றுக்கும் அதிகம். அவர்களில் ஒருவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிங்கப்பூரின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மோஹனா ஹரேந்திரன்.
“பாடிய எவருக்கும் சுருதி விலகவில்லை. எல்லாரும் நன்றாகப் பாடினார்கள். தரமான நிகழ்ச்சியைப் பார்த்த நிறைவு கிடைத்தது. அடுத்த தலைமுறைக்குத் தமிழ்ப் பாடல்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற த்வனி குழுவினரின் முயற்சி பாராட்டுக்குரியது,” என்றார் அவர்.
நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கும் இடமிருந்தது. ஆசிரியரும் மாணவரும் இடம் மாறினால் எப்படி இருக்கும் என்பதைச் சுவையாக, சுவாரசியமாக எடுத்துக்காட்டிய ‘மாறுவேடம்’ அங்கம் அரங்கத்தை அதிரவைத்தது.
ராகத்தைக் கண்டுபிடிக்கும் புதிர்ப்போட்டியும் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை ஏற்றியது. ஒருவர் ஆலாபனை செய்ய, மூவர் ராகத்தைக் கண்டுபிடிக்க, மற்ற இருவர் ஒருசில நொடிகளுக்குள் அதற்கு இணையான திரைப்பாடலை நினைவுகூர முற்பட்டனர்.
நிகழ்ச்சி சுறுசுறுப்பாக இடையூறின்றி நடைபெறுவதை உறுதிசெய்த நெறியாளர்கள் லக்ஷ்மி சந்திரசேகரும் வித்யா வெங்கட்டும் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு இடையிடையே பூக்களைப் பற்றியும் மற்றப் பல நல்ல தகவல்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
“எல்லா அங்கங்களும் ரசிக்கும் வகையில் தொய்வின்றி இருந்தன. மாணவர்கள் சிறப்பாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடியது, அவர்கள் எந்த அளவுக்குக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. புதிர்ப்போட்டி சிந்திக்க வைத்தது. ‘மாறுவேடம்’ அங்கம், நகைச்சுவை கலந்த பாடம்,” என்று கூறினார் திருமதி பத்மா கணேஷ்
“மாணவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் குருவின்மீது வைத்துள்ள மரியாதையும் அவர்களின் படைப்புகளில் நன்றாக வெளிப்பட்டன. தமிழ்ப் பாடல்கள் பக்தியை மையமாகக் கொண்டவை. குறிப்பிட்டுச் சொன்னால், வள்ளலார் எழுதிய பாடல்கள் மனத்தைக் கவர்ந்தன,” என்றார் திரு பிரசன்னா.
“சிலர் மேடை ஏறுவதற்கு அச்சப்படலாம். அதைக் களைந்து பிள்ளைகளை நம்பிக்கையோடு பாடவைத்ததைப் பாராட்ட வேண்டும். பூக்களைப் பற்றி மாணவர்கள் மேலும் அறிந்துகொள்ளவும் நிகழ்ச்சி வாய்ப்பளித்தது. தமிழ்ப் பாடல்களில் இறையம்சத்தையும் சேர்த்தது நல்ல முயற்சி,” என்று திருமதி சரண்யா குறிப்பிட்டார்.
பல பாடல்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர் பக்கவாத்தியக் கலைஞர்கள். அவர்களில் இளையவரான 13 வயது நாராயணன், தமக்கு மிருதங்கம் அறிமுகமான கதையைப் பகிர்ந்துகொண்டார்.
“மிருதங்கத்தைப் பார்த்தபோது எரிவாயுக் கலன்போல் இருந்தது. முதலில் நாதம் வரவில்லை. ஆனால் நான் விடவில்லை. ஐந்தாண்டுக்குப் பிறகு, அதில் பிடிப்பு வந்துள்ளது. இப்போது மிருதங்கம் கற்றுக்கொண்டதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது,” என்றார் தபலாவும் வாசிக்கத் தெரிந்த நாராயணன்.
நிகழ்ச்சி சீராக நடைபெறப் பலவற்றில் கவனம் செலுத்தியதாகக் கூறினார் தொழில்நுட்பப் பணியைப் பார்த்துக்கொண்ட ஆர்த்தி வேணுகோபால்.
“பாட்டுக்கேற்பச் சரியாகத் துணைவாசகங்கள் வரவேண்டும். கலைஞர்களின் நிழற்படங்களைச் சேர்த்தோம். ‘ஏஐ’ உதவியுடன் இறைவனின் படங்களை இணைத்தோம். பல முறை பயிற்சி செய்தோம், ஒத்திகை பார்த்தோம்,” என்றார் அவர்.
ஏறக்குறைய மூன்றே கால் மணிநேரம் நீடித்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியைக் கையில் எடுத்துக்கொண்ட ராதிகா ராமச்சந்திரன், அனைவரும் ஒத்துழைத்ததாலேயே நிகழ்ச்சி சிறப்பாய் அமைந்ததாகக் கூறினார்.
மொத்தத்தில், இசைத் தமிழ் இறைத் தமிழ், இணைத் தமிழானது. இசையை இறைவனோடு இணைக்கும் பாலமானது தமிழ். அத்துடன் பார்வையாளர்களின் இதயங்களில் தமிழை இறுக இணையச் செய்த நிகழ்வாகவும் இது அமைந்தது.
