தலைமுறை மாறினாலும் தரம் மாறவில்லை

தலைமுறை மாறினாலும் தரம் மாறவில்லை

3 mins read
5da0ceaf-6522-48fb-aae0-961634abfd4b
ஆடம் ரோடு உணவங்காடி நிலையத்தில் ‘பஹ்ரகத் இறைச்சி சூப்’ வியாபாரத்தை 50 ஆண்டுகளுக்குமுன் தம் தந்தையிடம் கற்றறிந்தார் சைய்யது அப்துல் ரஹ்மான், 64 (இடது). இப்போது அவரது மூத்த மகன் சைய்யது அஜ்மல் கான், 38, வியாபார நுணுக்கங்களை தம் தந்தையிடமிருந்து கற்று வருகிறார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு லிட்டில் இந்தியாவில் தம் தந்தை தள்ளுவண்டியில் பரோட்டா விற்றதை நினைவுகூர்ந்தார் சைய்யது அப்துல் ரஹ்மான், 65.

ஓராண்டுக்குப் பிறகு ஆடம் ரோடு உணவங்காடி நிலையத்தில் ‘பஹ்ரகத் இறைச்சி சூப்’ கடையை அவர் தொடங்கினார்.

“இன்றுவரை அப்பாவின் இறைச்சி சூப் செய்முறை பின்பற்றப்படுகிறது,” என்றார் திரு சைய்யது.

தந்தையிடமிருந்து கடை நிர்வாகத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலை. மனைவி அளித்த ஊக்கத்தால் 2005ஆம் ஆண்டு திரு சைய்யது ‘பஹ்ரகத் இறைச்சி சூப்’ வியாபாரத்துக்கு பொறுப்பேற்கத் தொடங்கினார்.

“அப்பா கடுமையாக உழைத்து தொழிலைத் தக்கவைத்துக் கொண்டார். அதை நானும் என் மனைவியும் இழக்க விரும்பவில்லை,” என்றார் அவர்.

மாமனாரிடமிருந்து இறைச்சி சூப் செய்யும் முறையை கற்றுக்கொண்டு, கடையில் சமைக்கத் தொடங்கினார் திரு சைய்யதுவின் மனைவி. அதே சமயம் சமைத்த உணவை பரிமாறி வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொண்டார் திரு சைய்யது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இவ்வழி கடந்து தம்பதியரின் குடும்பமும் 4 பிள்ளைகள், 3 பேரப்பிள்ளைகள் என வளர்ந்தது.

அவரது மனைவி இப்போது பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் தமது நேரத்தை அர்ப்பணித்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு சைய்யது, “நான் அவரிடமிருந்து செய்முறையைக் கற்றுக்கொண்டு இப்போது வியாபாரத்தை நடத்துகிறேன்,” என்று கூறினார்.

தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரத்துக்குப் பங்களிக்கும் வர்த்தகர்களைப் பாராட்டும் விருதைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘பஹ்ரகத் இறைச்சி சூப்’ கடை பெற்றது.

விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய திரு சைய்யது, “உணவங்காடிக் கலாசாரம் தொடர்ந்து செழிக்க வேண்டும்,” என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

அண்மைக் காலமாகத் திரு சைய்யதுவிடமிருந்து படிப்படியாகத் தொழிலைக் கற்று வருகிறார் அவரது மூத்த மகன் சைய்யது அஜ்மல் கான், 38.

“எதிர்காலத்தில் இந்தக் கடையை மேலும் மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் திரு அஜ்மல்.

இணையம்வழி ‘பஹ்ரகத் இறைச்சி சூப்’ வணிகத்தை மேம்படுத்த முயன்றார் திரு. அஜ்மல். ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த யோசனை சாத்தியமில்லை என்று அவர் விளக்கினார்.

“நாங்கள் இறைச்சி சூப் மற்றும் பிரியாணி மட்டுமே விற்பதால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையம்வழி அதிகத் தெரிவுகள் இல்லாமல் இருந்தன. மேலும், இணைய விநியோகத்தின் காத்திருப்பு நேரங்களால் சுவை பாதிக்கப்படலாம். எங்கள் வாடிக்கையாளர்கள் நேரில் வந்து சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்,” என்றார் திரு அஜ்மல்.

அவர் இப்போது அடிப்படையான இறைச்சி சூப் செய்முறையைக் கற்றுக்கொள்வதில் ஈடுபட்டுள்ளார்.

“நான் கடையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறேன். அதனால் கற்றுக் கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது,” என்று சிரித்தபடியே அவர் கூறினார்.

இது திரு அஜ்மலுக்கு வெறும் வணிகம் மட்டுமன்று; தாத்தாவும் தந்தையும் வளர்த்த பயிரைத் தொடர்ந்து பேணி வளர்க்கும் ஒரு வாய்ப்பு.

“நான் இல்லை என்றால் வேறு யார் செய்வது?” என்கிறார் திரு அஜ்மல்.

குறிப்புச் சொற்கள்