பிரம்மாண்ட தேசியக் கொடி: சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற முதியோர்

பிரம்மாண்ட தேசியக் கொடி: சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற முதியோர்

3 mins read
01c5a9bb-53bc-402e-9614-47837654e3dc
தாங்கள் உருவாக்கிய பிரம்மாண்ட சிங்கப்பூர் தேசியக் கொடியுடன் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ உறுப்பினர்கள். - படம்: புரோஜெக்ட் ஸ்மைல்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ (Project SMILE) அமைப்பைச் சேர்ந்த முதியோர் 20 பேர், ‘பைப் கிளீனர்’ எனப்படும் கைவினை அலங்காரக் கம்பிகளைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

10 முதல் 12 வாரங்கள் வரை நடைபெற்ற இந்த முயற்சியில், முதியோர் ஆர்வத்துடன் ஒருங்கிணைந்து இச்சாதனையைப் படைத்துள்ளனர்.

பிரம்மாண்டமான தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்த ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ உறுப்பினர்கள்.
பிரம்மாண்டமான தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்த ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ உறுப்பினர்கள். - படம்: புரோஜெக்ட் ஸ்மைல்

சாதனையை முன்னிட்டு, 12 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட அளவில் சிங்கப்பூர் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இதனை முழுமையாக வடிவமைப்பதற்கு முதியோர் தாங்களே உருவாக்கிய 14,000 ‘பைப் கிளீனர்’ பூக்களைப் பயன்படுத்தினர்.

“முதலில் அனைத்துப் பூக்களையும் தனியாகச் செய்து முடித்தோம். முதலில் சிவப்பு நிறப் பூக்களையும், பிறகு வெள்ளை நிறப் பூக்களையும் செய்தோம். அதன் பின்னரே, ஒவ்வொருவரும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு, அந்தப் பூக்களைப் பலகையில் அமைத்து முழுமையான கொடியை உருவாக்கினோம்,” என்றார் 82 வயதான திருவாட்டி பர்வதம் தம்புசாமி.

சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த திருவாட்டி பர்வதம் தம்புசாமி, 82 (இடது).
சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த திருவாட்டி பர்வதம் தம்புசாமி, 82 (இடது). - படம்: புரோஜெக்ட் ஸ்மைல்

“இந்த நடவடிக்கை கைகளுக்கும் விரல்களுக்கும் நல்ல உடற்பயிற்சியாக அமைந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிங்கப்பூர்க் கொடியைச் செய்ய வந்தது நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது. மேலும், தொண்டூழியர்கள் அன்பாகவும் பொறுமையாகவும் கற்றுக்கொடுத்தனர்,” என்றார் திருவாட்டி பர்வதம்.

தேசிய தினக் கொண்டாட்டத்தோடு இணைந்து, பழங்கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் ‘ரெட்ரோ’ பாணியிலான விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வண்ணமயமான அங்காடிகள் அதில் அமைக்கப்பட்டன.

இவ்விழாவில் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ அமைப்பின் நான்கு மையங்களைச் சேர்ந்த முதியோர் கிட்டத்தட்ட 300 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி புதன்கிழமை (ஆகஸ்ட் 12) சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பிஜிபி அரங்கில் நடைபெற்றது.

“இந்தக் கொடியை உருவாக்க ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ உறுப்பினர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். வயதைப் பொருட்படுத்தாமல் மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இதுவே சான்று. இதுபோன்ற சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஒரு நல்ல மாற்றமும் சுறுசுறுப்பும் உண்டாகிறது,” என்று கூறினார் 89 வயதான திரு பி.செ.தியாகராசன்.

தம் துணைவியாருடன் திரு பி.செ.தியாகராசன்.
தம் துணைவியாருடன் திரு பி.செ.தியாகராசன். - படம்: புரோஜெக்ட் ஸ்மைல்

‘புரோஜெக்ட் ஸ்மைல்’ 2010ஆம் ஆண்டில் திருவாட்டி உமா பால்ஜியால் தொடங்கப்பட்டது. 2014 முதல் இந்த அமைப்பில் இணைந்து தொண்டூழியராகப் பணியாற்றி, 2019ஆம் ஆண்டில் முதியோருக்கான துடிப்புடன் மூப்படையும் திட்டங்களில் அவர் இணைந்தார். 2025ஆம் ஆண்டு முதல் அத்திட்டங்களின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் திருவாட்டி ராணி அக்னிஹோத்ரி.

“தனிமை மனச்சோர்வு, நினைவாற்றல் இழப்பிற்கு வழிவகுக்கும் என்பதால், எங்கள் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ திட்டங்கள் ஒரு தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படுகின்றன. வாரம் ஒருமுறை நடைபெறும் நாற்காலி யோகப் பயிற்சி, ஸும்பா, தை சி (Tai Chi) ஆகிய உடற்பயிற்சி வகுப்புகளில் முதியோர் கிட்டத்தட்ட 350 பேர் பங்கேற்கின்றனர். அவர்கள் புதிய நண்பர்களை உருவாக்கி, சமூகப் பிணைப்புடன் வாழ இந்த வகுப்புகள் உதவுகின்றன,” என்றார் திருவாட்டி ராணி, 53.

மேலும், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பிஜிபி அரங்கம், சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில், மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயம், கொளம் ஆயர் சமூக மன்றம் ஆகிய இடங்களிலும் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ வகுப்புகள் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்