சிங்கப்பூர் நாடகத்தின் உலகளாவிய வெற்றி

சிங்கப்பூர் நாடகத்தின் உலகளாவிய வெற்றி

2 mins read
8f579477-bbd1-445a-ac6d-ef76de5ae053
வசந்தம் ஒளிவழியில் அண்மையில் ஒளிபரப்பான ‘மஸ்ட் டேட் தி பிளேபாய்’ நாடகம் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது. - படம்: மீடியாகார்ப்

சிங்கப்பூரர்கள் பலர் கொரிய, ஜப்பானிய மொழி நாடகங்களைப் பார்த்து ரசித்துவரும் வேளையில், பிற நாட்டுத் தமிழர்களை சிங்கப்பூர் நாடகமொன்றைப் பார்த்து ரசிக்க வைத்துள்ளது அண்மையில் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மஸ்ட் டேட் தி பிளேபாய்’.

‘360 என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்நாடகம், இந்தியா, மலேசியா, ஆகிய நாடுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாடகத்தின் நடிகர்களுக்கும் பாடல்களுக்கும் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

நாடகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கவில்லையென இயக்குநர் தி.சூரியவேலன் கூறினார்.
நாடகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கவில்லையென இயக்குநர் தி.சூரியவேலன் கூறினார். - படம்: மீடியாகார்ப்

“நாடகம் வெற்றியடையுமென எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியடையுமென எதிர்பார்க்கவில்லை,” என்று நாடகத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான திரு தி.சூரியவேலன் கூறினார்.

மீடியாகார்ப் நிறுவனம் தமக்கு ஐந்து கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியபோது தம் கவனத்தை ஈர்த்த முதல் தலைப்பு இந்நாடகம் என அவர் பகிர்ந்துகொண்டார்.

முக்கியமாக சிங்கப்பூர் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நாடகத்தை வடிவமைத்திருந்தாலும் பிற நாடுகளிலிருந்தும் அன்பு கிடைத்திருப்பது அவருக்கு நெகிழ்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து சுவாரசியமான, வித்தியாசமான படைப்புகளை மக்களுக்குப் படைப்பதே ‘360 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்று திரு சூரியவேலன் கூறினார்.

நாடகத்திற்காக மாறுபட்ட இசை வடிவமைப்பை முயற்சி செய்ததாக இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் கூறினார்.
நாடகத்திற்காக மாறுபட்ட இசை வடிவமைப்பை முயற்சி செய்ததாக இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் கூறினார். - படம்: மீடியாகார்ப்

நாடகத்தின் இசையும் பாடல்களும் பெருவரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், வித்தியாசமான இசை வடிவமைப்பைச் செய்ய சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் கூறினார்.

“இந்த நாடகத்தின் கருப்பொருளில் வந்துள்ள தமிழ்த் திரைப்படங்களும் நாடகங்களும் மிகக் குறைவு. அவ்வகையில், இளையர்களைப் பற்றிய கதைக்கு இளையர்களுக்குப் பிடித்த இசையை வடிவமைப்பது சவாலாக விளங்கியது,” என்றார் அவர்.

தமக்கு 48 வயதானாலும் தமது இரு பதின்ம வயதுப் பிள்ளைகளுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதால் அவர்களது இசை ரசனைக்கு ஏற்ப நாடகத்திற்கு இசையமைக்க முற்பட்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

இதற்கு முன்பு ‘வேட்டை’ நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பை இந்நாடகம் தமக்கு நினைவூட்டுவதாக அவர் கூறினார்.

“முன்பு சமூக ஊடகங்கள், பாடல்களுக்கான செயலிகள் போன்றவை குறைவாக இருந்தன. இப்போது, அத்தகைய வசதிகள் அதிகரித்துள்ளதால் நாடகத்தின் பாடல்களும் இசையும் பன்னாட்டு மக்களைச் சென்றடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

நாடகம் சிறந்த கற்றல் வாய்ப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்டார் கதாநாயகி சாந்தினி நாகதுர்கா.
நாடகம் சிறந்த கற்றல் வாய்ப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்டார் கதாநாயகி சாந்தினி நாகதுர்கா. - படம்: மீடியாகார்ப்

நாடகத்தின் கதாநாயகி சாந்தினி நாகதுர்காவிற்கு இந்நாடகத்தில் நடித்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்தது.

“தாரா என்ற கதாபாத்திரத்தை நடிப்பதில் நிறைய நுணுக்கங்கள் இருந்தன. கதாபாத்திரத்திற்கு நிறைய முரணான சிந்தனைகளும் குழப்பமான உணர்ச்சிகளும் இருந்தததால் அவற்றைப் பார்வையாளர்கள் நம்பும் வகையில் வெளிக்கொணர்வது சவாலாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.

சவாலான அனுபவமாக இருந்தாலும் தமக்கு அவ்வாய்ப்பு நல்ல கற்றல் பயணமாக அமைந்ததென செல்வி சாந்தினி கூறினார்.

ரசிகர்களின் அன்பு மனத்திற்கு நெகிழ்ச்சியளிப்பதாக கதாநாயகன் முஜாமில் இலியாஸ் கூறினார்.
ரசிகர்களின் அன்பு மனத்திற்கு நெகிழ்ச்சியளிப்பதாக கதாநாயகன் முஜாமில் இலியாஸ் கூறினார். - படம்: மீடியாகார்ப்

நாடகத்தின் கதாநாயகனான முஜாமில் இலியாசுக்கு ரசிகர்களின் அன்பு மனத்தைக் குளிரச் செய்துள்ளது.

“இந்தியாவில் நாங்கள் ரசிகர்கள் சந்திப்பிற்குச் சென்றபோது, ஒரு மனநல மருத்துவர் தாம் சிகிச்சையளித்து வரும் இளையர் ஒருவர் என் நடிப்பைப் பார்த்து சற்று குணமடைந்ததாகக் கூறியது சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தந்தது,” என்றார் அவர்.

நாடகத்தின் ரசிகர்கள் பலர் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அதுகுறித்த அதிகாரத்துவத் தகவல்கள் கூடிய விரைவில் வெளிவருமென திரு சூரியவேலன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நாடகம்இசைஇயக்குநர்கதைவெற்றிஊடகம்