பொன்னகை மின்ன சுடர்விடும் புன்னகை

பொன்னகை மின்ன சுடர்விடும் புன்னகை

படம்: வித்யா வெங்கடேசன்

08 Nov 2026 - 6:00 am

2 mins read

லிட்டில் இந்தியாவில் தீபாவளி உணர்வு அறுசுவைப் பண்டங்கள், வண்ணமய ஒளி அலங்காரங்கள், சுவாரசிய நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தங்க விற்பனையிலும் சுடர்விடுகிறது.

கடந்த இரு வாரங்களாகத் தங்க விலை தொடர்ந்து சரிந்து வந்ததாலும் தீபாவளி வந்துவிட்டதாலும் தங்க விற்பனை சூடுபிடித்துள்ளதாக லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள சில நகைக்கடைகள் தெரிவித்துள்ளன.

நகை விலை கூடத் தொடங்கியிருந்தாலும் தீபாவளியையொட்டி நகை விற்பனையும் அதிகரிக்குமென நகைக்கடைகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
நகை விலை கூடத் தொடங்கியிருந்தாலும் தீபாவளியையொட்டி நகை விற்பனையும் அதிகரிக்குமென நகைக்கடைகள் நம்பிக்கை கொண்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் உற்சாகத்துடன் நகைகள் வாங்க வந்துசெல்வதாக டிஎம்ஒய் நகைக்கடை பொது மேலாளர் சலீம் மாலிக் கூறினார்.

தற்போது தங்க விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் விற்பனையில் சிறு தொய்வு ஏற்பட்டிருந்தாலும் மக்கள் தொடர்ந்து தங்கம் வாங்குவதில் நாட்டம் காட்டுவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின்போது மக்களிடையே பெருகும் மகிழ்ச்சி அளவு அப்போக்கிற்கு முக்கியக் காரணமென கருதுகிறார் இஷ்தாரா நகைக் கடையின் மூத்த விற்பனையாளர் மனோகரன் மகேந்திரன்.

அதற்கு மாறாக, தங்க விலையைப் பொறுத்தே வாடிக்கையாளர்கள் தங்கள் முடிவுகளைப் எடுப்பதுபோல் தோன்றுவதாக ஜோயாலுக்காஸ் நகைக்கடையின் வட்டார மேலாளர் ஃபிரெடி பால் கூறினார்.

“தங்க விலை குறைவாக இருந்தபோது நகை விற்பனை கூடியது. ஆனால், தற்போது தங்க விலை உயர்ந்துவருவதால் விற்பனை குறைவதை உணர முடிகிறது,” என்றார் அவர்.

ஆயினும், இது பண்டிகைக் காலம் என்பதால் தங்க விற்பனை மீண்டும் சூடுபிடிக்குமென அவர் நம்புகிறார்.

வாடிக்கையாளர்களில் பலரும் தற்போது தங்களது பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கிக்கொள்கின்றனர் என்று அக்‌ஷரா நகைக்கடையின் நிர்வாக இயக்குநர் சுப்பையா ராமு கூறினார்.

“ஆரம், திருமண நகை வகைகள் போன்றவற்றைவிட அவர்களது இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்கு ஏற்ப தங்கம் வாங்கும் போக்கு அதிகமாக உள்ளது. அத்தியாவசியமான நகைகளை மட்டுமே மக்கள் வாங்குகின்றனர்,” என்றார் அவர்.

நகையின் எடையைவிட அழகிற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் திரு மனோகரன் உணர்கிறார்.

“தங்களை அழகுபடுத்திக்கொள்ள அவர்களுக்குப் பிடித்தமான நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்வதை அதிகம் பார்க்கமுடிகிறது,” என்று அவர் சொன்னார்.

பாரம்பரிய தங்க நகைகளான நெத்திச்சுட்டி, ஆரம் போன்றவற்றிலிருந்து பிற நகைகளான வளையல், மோதிரங்கள் வரை அனைத்தையும் அரபு நாட்டுப் பாணியில் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளதாக திரு சலீம் கூறினார்.

சிங்கப்பூரர்கள் மட்டுமன்றி தீபாவளி அலங்காரங்களைக் காண வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நகை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருப்பதாகத் திரு மனோகரன் கூறினார்.

“இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி எனப் பல நாட்டுச் சுற்றுப்பயணிகள் லிட்டில் இந்தியாவில் தங்கம் வாங்கிச் செல்கின்றனர்,” என்றார் அவர்.

தீபாவளி காலகட்டத்தில் தங்க விற்பனை பெரிதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஜோயாலுக்காஸ், இஷ்தாரா, டிஎம்ஒய் போன்ற நகைக்கடைகள் ஒரு மாதத்திற்கு முன்னரே நகைகளை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளன.

மேலும், மக்களைக் கவரும் வண்ணம் செய்கூலியில் தள்ளுபடி, இலவச தங்கக் கட்டிகள், நாணயங்கள் என பல்வேறு சலுகைகளை நகைக்கடைகள் அறிவித்துள்ளன.

வண்ணமயமான தீபாவளியாக மட்டுமல்லாமல் மக்களுக்குத் தங்கமயமான தீபாவளியையும் வழங்க நகைக்கடைகள் முற்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்