கோலாகலமாக நடந்துவரும் புரட்டாசி அன்னதான ஏற்பாடுகள்

கோலாகலமாக நடந்துவரும் புரட்டாசி அன்னதான ஏற்பாடுகள்

2 mins read
22116fc7-11f0-40bd-87a7-ee308e280970
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் ஏறக்குறைய 25,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. - படம்: த. கவி

செப்டம்பர் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது.

அம்மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.

இவ்வாண்டும் அந்நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்த அக்கோயில் ஆயத்தமாகி வருகிறது.

ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் வழங்கப்படும் அன்னதானங்களில் காலை வேளை 3,000 பேர், மதியம் 12,000 பேர், இரவு 10,000 பேரென ஏறக்குறைய 25,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இவ்வெணிக்கை மற்றொரு மாதத்தின் சராசரி நாளில் நூற்றுக்கணக்கில் இருக்குமென ஆலயம் தெரிவித்தது.

உணவைத் தயாரிக்க ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 900 தொண்டூழியர்கள் ஒன்றுகூடுகின்றனர்.

இந்து அறக்கட்டளை வாரிய இணையத்தளத்தின் வாயிலாகவும் கோயிலின் மின்னஞ்சல்வழி தொடர்புகொள்வதன் மூலமும் பொதுமக்கள் அன்னதானத் தயாரிப்பு நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம்.

பணிகளைத் தொடங்குவதற்குமுன் தொண்டூழியர்களுக்குச் சுகாதாரம் சார்ந்த விரிவான அறிவுறுத்தல்களும் விளக்கங்களும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொண்டூழியர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இருப்பதாக அக்கோயில் தெரிவித்தது.

சமையல் வல்லுநர்கள், தொண்டூழியர்கள் ஆகியோரின் சுமையைக் குறைக்க சோறு வடிப்பதற்கும் வடை சுடுவதற்கும் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உணவு வீணாவதைத் தடுக்க ஒவ்வொரு வாரமும் முந்தைய வாரத்தைக் குறித்த தரவுகள் ஆராயப்பட்டு அடுத்த வாரத்திற்கான உணவு தயாரிக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகம் இருக்குமென எதிர்பார்க்கப்படும் நாள்களுக்குக் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சமையலை கோயிலின் தலைமை சமையல் வல்லுநர் மணவாளன் வழிநடத்துகிறார்.

கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர், 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோர், உடற்குறையுள்ளோர் ஆகியோருக்குச் சிறப்பு வரிசை ஏற்பாடு செய்யப்படும்.

காலை 11.30லிருந்து 12.30 வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதால் அன்னதானத்திற்கான காத்திருப்பு நேரம் ஒரு மணி நேரம் வரை நீடிக்கக்கூடும்.

மக்கள் நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் அந்நேரம் 30 நிமிடங்களாக இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆலயம்தொண்டூழியம்உணவு