தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்லின ஒற்றுமையை ஊக்குவித்த தீபாவளிக் கொண்டாட்டங்கள்

5 mins read
e28d99de-c2f5-46aa-b0a4-48406bbc7d24
ஏறக்குறைய 103 யூடீ குடியிருப்பாளர்கள் ‘ஹேப்பி பஸ்’ (Happy Bus) எனும் பேருந்துச் சுற்றுலா வழி லிட்டில் இந்தியா வட்டாரத்தை அக்டோபர் 20ஆம் தேதி காலை வலம் வந்தனர்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன்
multi-img1 of 3

‘ஹேப்பி பஸ்’ தீபாவளி சுற்றுலா

தீபாவளிப் பண்டிகை குதூகலத்தில் மூழ்கும் வண்ணம் ஏறக்குறைய 103 யூடீ குடியிருப்பாளர்கள் ‘ஹேப்பி பஸ்’ (Happy Bus) எனும் பேருந்துச் சுற்றுலா மூலம் லிட்டில் இந்தியா வட்டாரத்தை வலம் வந்தனர்.  

அக்டோபர் 20ஆம் தேதி காலை இடம்பெற்ற இந்தச் சுற்றுலா, சிங்கப்பூரின் பன்முக சமுதாயத்தைப் பறைசாற்றும் ஒரு புதிய முயற்சி என்று வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம் தெரிவித்தார். 

அதோடு, தீபாவளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க இந்தச் சுற்றுலா முதன்முதலாக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். 

இந்திய மரபுடைமை நிலையத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய தீபாவளி நிகழ்ச்சிகள், பட்டறைகள், ஆடை, அணிகலன்கள் விற்கும் சிறு வணிகச் சந்தைகள் என தீபாவளி மகிழ்ச்சியில் யூடீ குடியிருப்பாளர்கள் திளைத்திருந்தனர். 

மேலும், கேம்பல் சாலையில் ஆண்டுதோறும் இடம்பெறும் தீபாவளிச் சந்தை, லிட்டில் இந்தியாவைச் சுற்றியுள்ள பல்பொருள் கடைகள் ஆகியவற்யும் குடியிருப்பாளர்கள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். 

இந்திய மரபுடைமை நிலையத்துக்கு முதன்முதலாக வருகை புரிந்த குடியிருப்பாளர் ஹோ, அதன் பல்வேறு கண்காட்சிகளைப் பாராட்டினார். 

“இதன்மூலம் என்னால் இந்தியக் கலாசாரத்தைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார் ஹோ. 

சுற்றுலாவின் இறுதியில் ‘கப்பர்’ என்ற சிறு உணவகத்தில் வட இந்திய உணவு வகைகளைக் குடியிருப்பாளர்கள் சுவைத்து மகிழ்ந்தார்கள். 

25 ஆண்டுகள் யூடீ வட்டாரத்தில் வசிக்கும் வாசுகி பழனிச்சாமி, தன் நண்பர்களுடன் இந்தச் சுற்றுலாவில் பங்கேற்றார். 

“என் மற்ற இன நண்பர்கள் இந்தியக் கலாசாரத்தையும் உணவையும் பாராட்டும் வகையில் தீபாவளியை என்னுடன் இணைந்து கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது,” என்றார் அவர்.

“கலாசாரம், சமயம் மீதான ஆர்வத்தின் மூலம் மற்றவர்களுடன் பன்முகத்தன்மையின் அழகைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடிகிறது,” என்றார் யூடீ அடித்தளக் குழுப் பிரிவின் தலைவர் முருகேசன் சேது. 

“இது ஒரு மகிழ்ச்சியான, வலுவான சமூகத்தை ஒன்றிணைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார். 

இந்த ‘ஹேப்பி பஸ்’ பேருந்துச் சுற்றுலா, அடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வலம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார் திரு முருகேசன். 

கோலம் கோலாகலம்

தாங்கள் போட்ட கோலங்களுடன் பங்கேற்பாளர்கள்.
தாங்கள் போட்ட கோலங்களுடன் பங்கேற்பாளர்கள். - படம்: செங்காங் நார்த் தொகுதி அலுவலகம்

இந்தியக் கலாசாரத்தில் கோலத்துக்குத் தனி இடம் உண்டு என்றும் பண்டிகைக்கால உணர்வினை வண்ணக் கோலங்கள் மெருகேற்றும் என்றும் நம்புகிறார் கோலம் வரைகலைஞரும் கட்டடப் பொறியாளருமான ஜெயா பாண்டியராஜம்.

செங்காங் பகுதி வசிப்போர் குழுவுடன் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வரும் இவர், இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, அனைத்து இன மக்களுக்கும் கோலம் கற்றுத்தரும் பயிலரங்கை வழிநடத்தினார்.

கம்பஸ்வேல் கிரீன் வசிப்போர் குழு நிலையம் (RC Centre) சார்பில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில் வயது, இன வேறுபாடின்றி ஏறத்தாழ 40 குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர். இது அழகியலைத் தாண்டி அடையாளத்தின் பரிமாற்றமாக இருக்கவேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

கோலம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விவரிக்கும் திருவாட்டி ஜெயா பாண்டியராஜம்.
கோலம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விவரிக்கும் திருவாட்டி ஜெயா பாண்டியராஜம். - படம்: செங்காங் நார்த் தொகுதி அலுவலகம்

“எனக்கு அடிப்படையிலேயே கலை, அலங்காரங்களில் ஆர்வம் உண்டு. அதனைச் சமூக பிணைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தி அனைவரையும் ஒன்றிணைத்ததில் மகிழ்ச்சி,” என்றார் இதனை வழிநடத்திய ஜெயா பாண்டியராஜம்.

கோலம் அடிப்படையிலிருந்து கற்பது சிரமம் என்பதால் அட்டையில் செய்யப்பட்ட ‘ரங்கோலி டெம்ப்ளேட்டில்’ (Rangoli Template) வண்ணக் கோலப் பொடிகள் கொண்டு அலங்கரிக்க கற்றுத்தரப்பட்டது.

கோலம் வரைந்து மகிழும் குடியிருப்பாளர்கள்.
கோலம் வரைந்து மகிழும் குடியிருப்பாளர்கள். - படம்: செங்காங் நார்த் தொகுதி அலுவலகம்

“இது பயிலரங்கு என்பதையும் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் குழு நடவடிக்கை,” என்றார் கம்பஸ்வேல் கிரீன் வசிப்போர் குழு நிலையத் துணைத் தலைவரும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியருமான டாக்டர் சிவநேசன் பாலகிருஷ்ணன்.

அவர், “ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரிக்கவும், பிறரது கலாசாரம் குறித்து அறியவும் மன அமைதி தரும் நடவடிக்கையில் மூழ்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததில் பெருமை,” என்றும் சொன்னார்.

கோலம் வரைந்து மகிழும் குடியிருப்பாளர்கள்.
கோலம் வரைந்து மகிழும் குடியிருப்பாளர்கள். - படம்: செங்காங் நார்த் தொகுதி அலுவலகம்

குழுவாக இணைந்து ரசித்து கோலமிட்டுக் கொண்டிருந்தனர் இல்லத்தரசி பிரதீபா, 40, தொழில்நுட்ப ஊழியர் வைஷ்ணவி, 23, வரைவாளர் (DraughtsWoman) பிரியா, 45, சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி சாதனா, 14. அவர்கள் அனைவரும்,”இந்தியக் கலாசாரத்தின் கூறுகளில் நுணுக்கமான கோலமும் ஒன்று என்பதே பெருமை; இதனைச் சீன, மலாய் இனத்தவரும் ரசித்து கற்பது பன்முகத்தன்மையைப் பறைசாற்றுகிறது,” என்று தெரிவித்தனர்.

கோலம் வரைந்து மகிழும் குடுயிருப்புவாசிகள்.
கோலம் வரைந்து மகிழும் குடுயிருப்புவாசிகள். - படம்: செங்காங் நார்த் தொகுதி அலுவலகம்

தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் மின்னிலக்கக் கருவிகளை மறந்து பொழுதுபோக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறினர்.

உடையால் இணைந்த பெண்கள்

சேலை கட்டி மகிழ்ந்த பெண்கள்.
சேலை கட்டி மகிழ்ந்த பெண்கள். - படம்: கேன்பரா சமூக மன்றம்

தீபாவளிப் பண்டிகைக்குப் பெண்களின் தேர்வு பெரும்பாலும் சேலைகளாகவே உள்ளது. இந்திய மரபுடனான நெருக்கத்தை சேலை உணரவைப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.

சேலையின் அழகு மூலம் இந்தியக் கலாசாரத்தின் அழகினை அனைத்து இனத்தவருக்கும் கொண்டுசேர்க்கும் வண்ணம் ஒரு பல்லின சேலை, ஒப்பனைப் பயிலரங்கை வழிநடத்தினார் அழகுக் கலை நிபுணரும் கலா பியூட்டி ஸ்டூடியோவின் உரிமையாளருமான கலாவதி ஆறுமுகம்.

தனது 15 ஆண்டுகால அனுபவம், நிபுணத்துவம் கலாசாரப் புரிதலுக்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டதாகக் கூறினார்.

அக்டோபர் 20ஆம் தேதி, கேன்பரா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 16 இந்திய சமூகப் பெண்களும் 10 பிற இனங்களைச் சேர்ந்த பெண்களும் பங்கேற்றனர். பிற இனத்தவர் சேலை கட்டிப் பழக ஏதுவாக அவர்களுக்கு இந்திய சமூகப் பெண்கள் சேலை கொண்டு வந்ததும் சேலை கட்டி அவர்களைப் பாராட்டி மகிழ்வித்ததும் பண்டிகைக்கால உற்சாகத்தையும் ஒற்றுமை உணர்வையும் பரப்பின.

சேலைப் பயிலரங்கு.
சேலைப் பயிலரங்கு. - படம்: கேன்பரா சமூக மன்றம்

“ஒப்பனை, ஃபேஷன் ஆகியவை வயது, இன வேறுபாடின்றி அனைவரையும் இணைக்கும். இதில் பங்கேற்ற பெண்கள் சேலை குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. இது போன்ற பயிலரங்குகள் சமூக உணர்வைத் தட்டியெழுப்ப ஒரு சக்திவாய்ந்த வழி என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக விளங்கியது,” என்று சொன்னார் கலாவதி.

“கேன்பரா இந்தியர் நற்பணிச் செயற்குழு வசிப்போர் தொடர்புக் கட்டமைப்புடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்தது சிறப்பு. இது ஓர் இதமான அனுபவம்,” என்றார் இதில் பங்கேற்ற ஜெஸ்லின் மெர்லிபா, 56.

சேலை உடுத்தக் கற்கும் பெண்.
சேலை உடுத்தக் கற்கும் பெண். - படம்: கேன்பரா சமூக மன்றம்

“நடனக் குழுவில் இருப்பதால், அனைத்துக் கலாசாரங்களையும் பற்றி, குறிப்பாக, அவர்களின் உடை குறித்து அறிவது அவசியம். சேலை உடுத்துவது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். எளிதாக கற்றுக்கொடுத்தார் கலாவதி,” என்றார் எங் ஏய் சின், 59.

“இந்தியப் பெண்கள் சேலை அணிந்து நடப்பதைப் பார்த்து ரசிப்போம். அடுத்த முறை இந்திய நண்பர்களின் வீட்டுக்குத் தீபாவளி விருந்துக்குச் செல்லும்போது சேலை உடுத்திச் சென்று அவர்களை மகிழ்விக்க உள்ளோம்,” என்றனர் சபியா, 70, மஸெனான், 66.

குறிப்புச் சொற்கள்