உழைப்பே தீபாவளி; தியாகமே கொண்டாட்டம்

உழைப்பே தீபாவளி; தியாகமே கொண்டாட்டம்

புலம்பெயர்ந்தோரின் பண்டிகை நாள்கள்
1 of 3
படம்: சபரி பழனிவேலு
படம்: நாகார்ஜூன் 
படம்: ஹரிகிருஷ்ணன் முருகேசன்

08 Nov 2026 - 8:58 am

3 mins read

கொண்டாட்டங்களுக்கு என்றும் அழகும் சிறப்பும் சேர்ப்பது உறவுகளின் அன்புதான். தாய்நாட்டில் இருக்கையில் ஒன்றாக இணைந்து பலகாரங்கள் செய்து, அண்டை வீட்டாருடன் பகிர்ந்து, நண்பர்களோடு பட்டாசு வெடித்து, கோலாகலமாகத் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவம் பலருக்கும் உண்டு. ஆனால், பல்வேறு காரணங்களுக்காகக் குடும்பங்களைப் பிரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் இலக்கோடு தமிழர்கள் பலர் ஆண்டுதோறும் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போது, உறவுகளுடன் சேர்ந்திருக்கும் அன்பு நிறைந்த கொண்டாட்டங்களைத் தியாகம் செய்துவிட்டே இவர்கள் வருகின்றனர். அந்தத் தியாகம், பலருக்குப் பல்லாண்டுகாலமாக நீடிக்கிறது. பண்டிகைகள் ஏக்கம் நிறைந்தவையாக உருவெடுத்துவிடுகின்றன.

செல்வம் பிரவின்

“இந்தியாவில் கொண்டாடிய தீபாவளிகளை நினைவுகூர்ந்தால் முதலில் நினைவிற்கு வருவது புத்தாடைதான். அத்துடன், நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தே தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தேன். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடிய இனிய தருணங்களை மீண்டும் அனுபவிக்க விரும்புகிறேன். இருந்தாலும் உழைப்பால் என் குடும்பத்திற்கு மகிழ்ச்சி சேர்ப்பதை எண்ணி மனநிறைவு கொள்கிறேன்,” என்றார் செல்வம் பிரவின், 24. அவர் மூன்று ஆண்டுகளுக்குமுன் புலம்பெயர் ஊழியராகச் சிங்கப்பூருக்கு வந்தார். குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடி மூன்றாண்டுகள் கடந்துவிட்டதை ஏக்கத்துடன் நினைவுகூர்ந்தார்.

ரவிச்சந்திரன் அரவிந்த்

ரவிச்சந்திரன் அரவிந்த் ஐந்து ஆண்டுகளுக்குமுன் வேலைக்காகச் சிங்கப்பூருக்கு வந்தார். இவருக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான். அவனுடன் ஒன்றாகத் தீபாவளியைக் கொண்டாட முடியவில்லை என்பது இவரது வருத்தம்.

“நான் தினமும் தொலைபேசி வழி என் குடும்பத்தினருடன் பேசுவேன். அண்மையில் பேசும்போது என் மகன் மழலையாக ‘அப்பா, பட்டாசு’ என்று சொன்னான். அதைக் கேட்கையில் மனம் உருகும், அவனுடன் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன்,” என்று பாசமும் ஏக்கமும் தோய்ந்த குரலில் கூறினார் அரவிந்த்.

சபரி பழனிவேலு

19 வயதிலேயே வேலைக்காகக் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூர் வந்த சபரி பழனிவேலு அன்புக்குரியோரைப் பிரிந்து கொண்டாடும் முதல் தீபாவளி இது. “என் தீபாவளிக் கொண்டாட்டங்களில் நண்பர்கள் ஒரு பெரிய பகுதியாக இருந்தனர். அவர்களோடு சென்று புத்தாடைகள் வாங்கி, பட்டாசு வெடித்துத் தீபாவளி கொண்டாடுவதுதான் என் வழக்கம். தீபாவளி என்றால் எங்கள் வீட்டில் அம்மா செய்யும் ரவா லட்டு நிச்சயம் இருக்கும், இந்த ஆண்டு நான் தீபாவளிக்கு வீட்டில் இல்லாததால் அவர்களும் பலகாரங்கள் செய்யவில்லை,” என்றார் சபரி. குடும்பத்தை விட்டுப் பிரிவோருக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்களுக்கும் கொண்டாட்டங்களில் அந்தப் பிரிவு வருத்தம் தருவதாகவே உள்ளது.

ஹரிகிருஷ்ணன் முருகேசன்

“நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை நான் வீட்டைவிட்டுப் பிரியும் பொழுதே முற்றிலும் உணர்ந்தேன். கொண்டாட்டங்களில் குடும்பத்தினரின் பங்கு மிகப்பெரிது. அதோடு உற்ற நண்பர்கள் இல்லாத கொண்டாட்டத்தில் குதூகலமும் இல்லை. இருப்பினும், சிங்கப்பூரில் நான் கண்ட கொண்டாட்ட முறைகள் எனக்கு வியப்பளிக்கின்றன. பல்லினச் சமுதாயத்தில் தீபாவளிக்கும் முக்கியத்துவம் இருப்பதைக் காணும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் ஹரிகிருஷ்ணன் முருகேசன். முதுநிலைப் பட்டக்கல்வி இலக்கோடு சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த இவர், இப்போது இங்கு வேலைபார்க்கிறார்.

“என் சொந்த ஊரில் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். உறவினர்களின் ஒன்றுகூடல், திரைப்படங்கள் காணச் செல்வது, பலகாரங்களின் மணம், பட்டாசுச் சத்தம் என ஒவ்வொன்றும் கொண்டாட்டத்தின் குதூகலத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அந்தச் சிறிய இன்பங்கள் கிட்டா என்றபோதுதான் அவற்றுக்கான ஏக்கத்தை உணர்கிறேன்,” என்றார் நாகார்ஜுன், 25. முதன்முறை குடும்பத்தினரைப் பிரிந்து கொண்டாடும் பண்டிகை என்பதால் சற்று வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தீபாவளிவெளிநாட்டு ஊழியர்கொண்டாட்டம்தீபாவளி 2026