மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டு உருவான நோன்புப் பெருநாள் கலைவண்ணம்

பூமியைக் காக்கும் முயற்சி

மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டு உருவான நோன்புப் பெருநாள் கலைவண்ணம்

3 mins read
16991fca-8c10-44f0-adc7-2e3690c1dc31
கென்டோன்மன்ட் குடியிருப்பு நோன்புப் பெருநாள் அம்சங்களுடன் மிளிர்கிறது. - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரின் ஒரு குடியிருப்புப் பகுதியில் புளோக்கின் கீழ்த்தளத்தை ஒரு கலைக்கூடமாகவே மாற்றியுள்ளார் அனிதா தமிழ்மாறன், 50.

கென்டோன்மன்ட் குடியிருப்புப் பகுதியைத் தனது கைவண்ணத்தால் மாற்றியுள்ள அனிதா.
கென்டோன்மன்ட் குடியிருப்புப் பகுதியைத் தனது கைவண்ணத்தால் மாற்றியுள்ள அனிதா. - படம்: பே. கார்த்திகேயன்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் பண்டிகைக்கால மகிழ்ச்சியைத் தரும் வகையில் மிக அழகான அலங்காரங்களை இவர் உருவாக்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் பண்டிகைக்கால மகிழ்ச்சியைத் தரும் வகையிலான கலைப்படைப்பு.
அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் பண்டிகைக்கால மகிழ்ச்சியைத் தரும் வகையிலான கலைப்படைப்பு. - படம்: பே. கார்த்திகேயன்

இந்தக் கலைப்படைப்பின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்டவை.

தேவையற்றவை என்று தூக்கி எறியும் பழைய தாள்கள், துணிகள், இதர பொருள்களைக் கொண்டு அனிதா தனது கைவண்ணத்தால் இந்தப் பண்டிகைக் காலத்தை அர்த்தமுள்ளதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றியுள்ளார்.

மக்களிடையே ஒற்றுமையையும் பண்டிகை உற்சாகத்தையும் விதைக்கும் இவரின் முயற்சிக்கு அக்கம்பக்கத்தினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தனது கலைப்படைப்பால் அக்கம்பக்கத்தினரை ஈர்த்த அனிதா.
தனது கலைப்படைப்பால் அக்கம்பக்கத்தினரை ஈர்த்த அனிதா. - படம்: பே. கார்த்திகேயன்

அனிதாவிற்கு இது முதல் அனுபவமன்று. சென்றாண்டு தேசிய தினம், தீபாவளிக் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் பண்டிகை, இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு எனப் பல்வேறு பண்டிகைகளுக்குக் கென்டோன்மன்ட் குடியிருப்பை அலங்காரங்களால் மிளிர வைத்துள்ளார் அனிதா.

நோன்புப் பெருநாள் பண்டிகை என்பதால் தனது படைப்பில் முதலில் பச்சை நிற அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்று அனிதா முடிவெடுத்தார்.

“கலைப்படைப்பை ஒரு கதையாகக் கொண்டுசேர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தினர் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட வேண்டும்,” என்று சொன்னார் அனிதா.

இஸ்லாமியக் கலாசாரத்தில் குவிமாடங்களுக்கு தனி இடமுண்டு. அதை அமைப்பதற்கான பொருள்களை அனிதா முதலில் தேடத் தொடங்கினார். கண்ணில் தென்படும் எந்தப் பொருளையும் அனிதா விட்டுவைக்கவில்லை.

ஏதோ ஒரு பொருளைக் கண்டாலும்கூட அதைச் சேகரித்து வைத்துத் தனது படைப்புக்கு அவர் பயன்படுத்தினார். நாளடைவில் இஸ்லாமியக் கலாசாரத்தைப் பற்றி அதிகம் படிக்கத் தொடங்கி அதில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன என்பதை ஆழமாக அறியத் தொடங்கினார்.

எட்டு முனை நட்சத்திரம், ‘நூர்’ எனும் ஒளிக் கூறு அடங்கிய அலங்காரங்கள், நிலவு, நட்சத்திரங்கள் போன்றவை அவரது படைப்பில் இடம்பெற்றுள்ளன.

முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு அழகான வடிவங்களை அனிதா தயாரித்துள்ளார்.
முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு அழகான வடிவங்களை அனிதா தயாரித்துள்ளார். - படம்: பே. கார்த்திகேயன்

12 ஆண்டுகள் மத்திய கிழக்கில் வசித்து வந்த அனிதா அங்குக் குவிமாடங்களை ரசித்தவர். மத்திய கிழக்கில் இருந்தபோது அறிந்துகொண்ட இஸ்லாமியக் கலாசாரக் கூறுகளில் என்னென்ன தனது நினைவுக்கு வந்ததோ அவற்றைப் படைப்பில் சேர்த்தார்.

தனது குடியிருப்பில் மலாய்க் குடியிருப்பாளர்கள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அனிதா, அதனால் மலாய்க் குடியிருப்பாளர்களிடம் உதவி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனதாகத் தெரிவித்தார்.

“குடியிருப்பாளர்கள் சிலர் அவர்களுக்குத் தேவையற்ற பொருள்களை என்னிடம் வழங்குவார்கள். இத்தகைய சிறிய உதவிகள் மூலம் என்னால் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைச் சேகரிக்க முடிந்தது,” என்றார் அனிதா.

சீனப் புத்தாண்டு அலங்காரத்திற்குப் பிறகு அனிதாவிற்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருந்தது. அந்த ஒரு மாதத்தில் அவர் அலங்காரத்தை அல்லும் பகலும் படிப்படியாக செய்யத் தொடங்கினார். அனிதாவிற்கு பக்கபலமாக இருந்து உதவினார் அவரது கணவர்.

நீடித்த நிலைத்தன்மை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள அனிதா, தனது மகன்கள் இருவரும் படிக்கும் காலத்தில் அவர்களின் பள்ளிப் பாடத்திட்டங்களுக்குத் தேவையான பொருள்களைப் பணம் கொடுத்து வாங்காமல் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்துக் கற்றுத்தந்துள்ளார்.

உட்புற வடிவமைப்பில் பட்டம் பெற்றுள்ள அனிதா முப்பரிமாண வரைதல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.

பூமியைக் காக்க தன்னால் முடிந்ததைச் செய்வதாகக் குறிப்பிட்ட அனிதா, தனது கலைப்படைப்பு ஒரு குடியிருப்பை நெருக்கமாக்குவதாக நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து கென்டோன்மன்ட் டவர்ஸ் வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பில் தொண்டூழியராக இருந்துவரும் அனிதா கலைப்படைப்புகளை உருவாக்கத் தனக்கு ஊக்கம் தந்தது வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பின் தலைவர் என்று குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு தேசிய தினத்திற்கு ஒரு படைப்பை உருவாக்கக் கட்டமைப்பின் தலைவர் அளித்த ஊக்கம் இன்று பேரளவிலான கலைப்படைப்புகளைச் செய்ய அனிதாவைத் தூண்டியுள்ளது.

அக்கம்பக்கத்தினரின் ஆதரவுடனும் அவர்கள் அளித்த ஊக்கத்துடனும் குடியிருப்புக்கு நோன்புப் பெருநாள் உற்சாகத்தைக் கொண்டுவந்துள்ள அனிதா தனது படைப்பை மனநிறைவுடன் கண்டு ரசிப்பதாகக் கூறினார்.

இத்தகைய படைப்புகள் ஒரு சமூகத்தை ஒன்றிணைப்பதாக அனிதா சொன்னார்.
இத்தகைய படைப்புகள் ஒரு சமூகத்தை ஒன்றிணைப்பதாக அனிதா சொன்னார். - படம்: பே. கார்த்திகேயன்
குறிப்புச் சொற்கள்