சிங்கப்பூரில் இளையர்களுக்காக வட்டார அளவில் தொடங்கப்பட்ட ‘சேம்பியன்ஸ் ஆஃப் பீஸ்’ எனும் அமைதித் தூதர்கள் திட்டம், சமூக ஒற்றுமை, மீள்திறன், அமைதி ஆகியவை தொடர்பான கலந்துரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் வழிநடத்துவதற்குப் பயிற்சி அளித்துள்ளது.
ஆசியானில் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 இளையர்கள், சென்ற மாதம் (மே) 16ஆம், 17ஆம் தேதிகளிலும் இம்மாதம் 6ஆம், 7ஆம் தேதிகளிலும் ‘ஹேஷ்.பீஸ்’ அமைப்பின் பயிலரங்கில் பங்கேற்கின்றனர்.
மனநலம், பருவநிலை விழிப்புணர்வு, சமூக ஒற்றுமை ஆகியவற்றின் தொடர்பில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடைமுறைத் திறன்களை அவர்கள் அதில் கற்றுக்கொண்டனர்.
மேலும், அவர்கள் இளம் அமைதிப் பணியாளர்களின் வட்டாரக் குழுவில் ஓர் அங்கமாகவும் இணைந்தனர்.
இந்த முன்னெடுப்பு, இளையர்கள் தலைமையிலான கிட்டத்தட்ட 20 திட்டங்களுக்குத் தொடக்க நிதியுதவி வழங்கி ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க விழாவைச் சிறப்பித்த மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், திரண்டிருந்த இளையர்களை முக்கியமானவர்கள் என்றும் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்றும் பாராட்டினார்.
“பன்முகக் கலாசாரம் தென்கிழக்காசியாவில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காக நாம் எல்லாரும் குறிப்பாக இளையர்கள் ஒன்றிணைவது அவசியம்,” என்று திரு தினேஷ் கூறினார்.
நிகழ்ச்சியில் அங்கம் வகித்த மெதுவோட்டத்தில் கிட்டத்தட்ட 600 இளையர்கள் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வட்டார அமைதியை மேம்படுத்துவதில் கீழ்நிலையில் உள்ளவர்களுடைய தொடர்புகளின் முக்கியத்துவத்தை ‘ஹேஷ்.பீஸ்’ அமைப்பின் பொதுச் செயலாளர் ஃபர்ஐன் ஜாஃபர் வலியுறுத்தினார்.
“அமைதி என்பது மாநாட்டு அறைகளிலோ கொள்கை ஆவணங்களிலோ தொடங்குவதில்லை. உரையாடல்களிலும் துணிச்சலிலும் சமூகத்திலுமே அது தொடங்குகிறது. அமைதி என்பது தானாகவே அமைவதல்ல; அது நாமாகவே முனைப்புடன் கட்டியெழுப்பும் ஒன்றாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களையும் புலம்பெயர்ந்த ஊழியர்களையும் இணைக்கும் அமைப்பொன்றில் தொண்டூழியம் செய்யும் 25 வயது அப்துல் ரஹ்மான், உளவியல் முதலுதவிப் பயிற்சிப் பிரிவால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“காலியான கிண்ணத்திலிருந்து எதையும் ஊற்ற முடியாது என்ற ஆங்கிலப் பழமொழி, அமைதியைக் கட்டியெழுப்பும் நம் முயற்சிக்குச் சாலப் பொருந்தும். இதனால்தான், உளவியல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளையர்கள் முதலில் தங்களை நன்கு கவனித்துக்கொள்ளும்போது, கடினமான உரையாடல்களையும் சூழ்நிலைகளையும் சிறந்த முறையில் கையாளுவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள்,” என்று திரு அப்துல் குறிப்பிட்டார்.

