புகைமூட்டத்தில் பல முகங்கள், பல சவால்கள்

புகைமூட்டத்தில் பல முகங்கள், பல சவால்கள்

படம்: கிறிஸ்டோ லியோன்

24 Oct 2026 - 6:30 am

3 mins read

புகைமூட்டம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கிறது. ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்; மற்றொருவருக்குக் குடும்பப் பொறுப்புகளையும் வேலைச் சூழலையும் சமாளிப்பதில் சவால்கள் எழலாம்.

புகைமூட்டம் மக்களை எவ்வாறு பாதித்துள்ளது, அதிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை அறிய தமிழ் முரசு லிட்டில் இந்தியாவிற்குச் சென்றது.

அங்குப் புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இல்லப் பணிப்பெண்கள் சிலரிடம் கேட்டபோது, புகைமூட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

“எனக்கு அண்மையில்தான் காய்ச்சல் ஏற்பட்டது. புகைமூட்டம் காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். நான் வேலை செய்யும் வீட்டில் உள்ள இரு குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன்,” என்றார் 46 வயது மகேஷ்வரி.

“நான் ஒரே வீட்டில் கடந்த 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு என் முதலாளிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில், முடிந்தவரை வெளியே செல்லாமல் இருக்குமாறும் கூறியுள்ளனர்,” என்றார் திருவாட்டி வசந்தமாலா, 47.

சொந்த நாட்டைவிட்டு சிங்கப்பூருக்கு வந்து பணிபுரியும் இல்லப் பணிப்பெண்களுக்கு, வேலை செய்யும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மளிகைப் பொருள்களை வாங்குவதற்காகக் கடைக்கு வந்திருந்த திருவாட்டி நுருல் நதியா, புகைமூட்டத்தால் தமது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மளிகைப் பொருள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்திருந்த திருவாட்டி நுருல் நதியா.
மளிகைப் பொருள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்திருந்த திருவாட்டி நுருல் நதியா. - படம்: கிறிஸ்டோ லியோன்

“புகைமூட்டத்தால் என் இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இருவருக்கும் மதியிறுக்கம் (ஆட்டிசம்) இருப்பதால், அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் பெற்றோராகிய எங்களுக்குக் கூடுதல் சிரமம் ஏற்படும். எங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக ஆண்டுவிடுப்பையும் குழந்தைப் பராமரிப்பு விடுப்பையும் எடுக்க வேண்டியிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, உடல்நலம்தான் முதன்மையானது,” என்றார் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பணியாற்றிவரும் நுருல் நதியா, 29.

புகைமூட்டச் சூழலில், வேலைக்கும் குழந்தைகளின் தேவைகளுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது பெற்றோருக்கு மேலும் சவாலாகிறது.

லிட்டில் இந்தியாவில் பகுதி நேரமாக விளம்பரத் துண்டுச்சீட்டுகளை விநியோகித்துக்கொண்டிருந்த தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர் ஜானும், வெயிலில் வேலை செய்வதால் ஏற்படும் சிரமங்களை எடுத்துரைத்தார்.

“வெளிப்புறத்தில் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், என் பெற்றோர்க்கு உதவுவதற்காக இந்த வேலையைத் தொடர்ந்து செய்கிறேன்,” என்றார் ஜான், 18.

தீபாவளிச் சந்தைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திரு ஆனந்தராஜன், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்வதால் ஏற்படும் சிரமங்களைப் பற்றிக் கூறினார்.

“தொடர்ந்து வியர்க்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். இதுதான் இந்த வேலையின் தன்மை. தீபாவளி முடியும்வரை இங்கு வேலை செய்வேன். முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை அணிவது சிரமமாக இருப்பதால் நான் அணிவதில்லை,” என்றார் திரு ஆனந்தராஜன், 45.

பூக்கடை நடத்திவரும் திரு கிருஷ்ணன் கோவிந்தசாமி, புகைமூட்டத்தால் தமது வணிகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.

“வணிகம் குறையவில்லை. புகைமூட்டத்தால் என் உடல்நலத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், முகக்கவசம் அணிந்தால் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் நினைத்து, பூக்களை வாங்காமல் சென்றுவிடுவார்களோ என்ற கவலை இருக்கிறது. அதனால் முகக்கவசம் அணிவதில்லை,” என்றார் திரு கிருஷ்ணன், 69.

இரவு நேரங்களில் ரயில் பாதைகளில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் திரு சதாசிவம் கண்ணன், 49, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றார்.

இந்திய மரபுடைமை நிலையத்துக்கு அருகே  நண்பர்களுடன் ஓய்வெடுக்கும் திரு சதாசிவம் கண்ணன் (நடுவில்).
இந்திய மரபுடைமை நிலையத்துக்கு அருகே நண்பர்களுடன் ஓய்வெடுக்கும் திரு சதாசிவம் கண்ணன் (நடுவில்). - படம்: கிறிஸ்டோ லியோன்

“என் வேலைச் சூழலில் என்95 முகக்கவசம் அணிவது கட்டாயம். அடிக்கடி தண்ணீர் குடிக்குமாறும் தேவைப்படும்போது ஓய்வெடுக்குமாறும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது,” என்றார் கட்டுமானத் துறையில் பணிபுரியும் திரு கண்ணன்.

லிட்டில் இந்தியாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நண்பர்கள் குழுவினரிடமும் தமிழ் முரசு பேசியது. அவர்களில் ஒருவரான பாண்டிசெல்வம், சிங்கப்பூரில் சாரம் கட்டும் பணியில் ஓராண்டாக ஈடுபட்டு வருகிறார்.

நண்பர்களுடன் திரு பாண்டிச்செல்வம் (இடக்கோடி).
நண்பர்களுடன் திரு பாண்டிச்செல்வம் (இடக்கோடி). - படம்: கிறிஸ்டோ லியோன்

“உடல் உழைப்பு அதிகமுள்ள வேலையைச் செய்வது இப்போது மிகவும் சிரமமாக இருக்கிறது. கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது; தொண்டை வறண்டு போகிறது. என்95 முகக்கவசம் அணிந்துகொண்டு வேலை செய்வது கடினமாக இருக்கிறது. ஆனால், முகக்கவசம் அணிய வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். வேறு என்ன செய்வது? இந்தச் சூழலைச் சமாளித்துத்தான் ஆகவேண்டும்,” என்றார் திரு பாண்டிச்செல்வம், 27.

ஒருபுறம், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம்; மறுபுறம், வெப்பம், கண் எரிச்சல், தொண்டை வறட்சி போன்ற பாதிப்புகள். அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் இவர்களுக்கு உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் வேலையையும் தொடர வேண்டிய இரட்டைச் சவால் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்