தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகப் பணிகளுக்குத் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர்

3 mins read
41874c98-3eab-4553-aa1d-656024bb7860
குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களின் (சிசிசி) 60வது ஆண்டு நிறைவு விருந்தில், 1976ல் மரின் பரேட் சிசிசியில் இணைந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் தலைவராகச் சேவையாற்றிய 89 வயது திரு புஹேந்திரனைப் (வலம்) பாராட்டினார் பிரதமர் வோங். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய மூத்த சமூகத் தலைவர் திரு. புஹேந்திரன் BBM (L), PPA, 89, பல்லாண்டுகளாகச் சமூக சேவையில் தன்னைத்தான் அர்ப்பணித்தவர்.

43 ஆண்டுகள் ஆசிரியராகச் சேவையாற்றிய அனுபவம் வாய்ந்த அவருக்கு இயற்கையாகவே சமூகத்தின்மீதான அக்கறை உள்ளது.

1976ல் மரின் பரேட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவில் (சிசிசி) முதன்முதலில் சேர்ந்த அவர், சென்ற ஆண்டு மே மாதம் வரை அதன் மக்கள்நலச் செயற்குழுவுக்குத் தலைமை வகித்தார்.

1981 முதல் 2005 வரை அவர் மரின் பரேட் ‘சிசிசி’யின் தலைவராகச் சேவையாற்றினார்.

“அப்போதெல்லாம் பல வி‌‌ஷயங்களும் மாறிக்கொண்டிருந்தன. சமூக ஊடகங்கள் இல்லை. எங்களை இணைத்தது கம்பத்தது உணர்வே,” என்றார் திரு புஹேந்திரன்.

அந்த கம்பத்து உணர்வால், ஒருவருக்கொருவர் உதவிசெய்யக் குடியிருப்பாளர்கள் தயாராக இருந்தனர். அக்காலத்தில் மின்தூக்கி பழுதடைவது என்பது மிகவும் வழக்கமான ஒன்று. அப்போது திரு புஹேந்திரனும் நண்பர்களும் உடனே அங்கு விரைந்து, மின்தூக்கியில் மாட்டிக்கொண்டவருக்கு ஆறுதலளிப்பர்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக மரின் பரேட் வட்டாரத்தில் சேவையாற்றியுள்ள திரு புஹேந்திரன்.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக மரின் பரேட் வட்டாரத்தில் சேவையாற்றியுள்ள திரு புஹேந்திரன். - படம்: சாவ்பாவ்

திரு புஹேந்திரனின் பன்மொழிப் புலமை அவருக்குக் கைகொடுத்தது. ஆங்கிலம், தமிழ் மட்டுமன்றி, ஹாக்கியன், மலாய் மொழிகளிலும் அவர் நன்கு பேசுவார். “அப்போதெல்லாம் ஓங் எங் குவான் ஹாக்கியனில் பேசுவதுகூட எனக்குப் புரியும். இப்போது ஹாக்கியன் மொழி பெரும்பாலும் மறந்துவிட்டேன். அண்டைவீட்டார் மலாய்க்காரர் என்பதால் மலாய் இன்றும் பேசுகிறேன்,” என்றார் திரு புஹேந்திரன்.

சிசிசியில் ஓர் உறுப்பினராக, தேசிய சேவைக்கு மகனை அனுப்பும் பெற்றோருக்கு அவர் ஆறுதலளித்தார். “தாயார்கள் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். என் தம்பி தேசிய சேவைக்குச் சென்றந்து எங்களுக்கும் பெரும் அதிர்ச்சி. அதனால் அவர்களின் வருத்தம் எனக்குப் புரிந்தது; தேசிய சேவையால் ஆபத்து இல்லை; அது அவர்களின் கடமை என்பதை உணர்த்தினேன்,” என்றார் திரு புஹேந்திரன்.

மரின் பரேட் வட்டாரத்தில் மக்கள் கழகப் பாலர்பள்ளி அமைப்பதிலும் பங்காற்றினார் திரு புஹேந்திரன். அந்த பாலர் பள்ளியின் “திரைக்குப் பின்னால் இயங்கும் தலைமையாசிரியர்” என்றும் அதன் கற்பித்தல்முறைகளில் உதவியவர் என்றும் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் பாராட்டியுள்ளார்.

திரு புஹேந்திரனின் தந்தை ‘டிரெ‌‌ஷரி’யில் பணியாற்றியவர்; தந்தை வழங்கிய ஆலோசனைகளுடன் சிசிசி, பாலர் பள்ளி இரண்டின் கணக்குகளையும் சரிபார்த்தார் திரு புஹேந்திரன்.

மரின் பரேடில் சமூக மன்றம் இல்லாதபோது தன் அடுக்குமாடிக் கீழ்த்தளத்தையே குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடமாக மாற்றியவர் திரு புஹேந்திரன் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங், வியாழக்கிழமை (அக்டோபர் 23) நடந்த சிசிசி 60 ஆண்டு நிறைவு விழாவில் பாராட்டினார்.

போதைப் பொருள் புழங்குவோருக்கு உதவ 1985ல் அமைக்கப்பட்ட ‘பாய்ஸ் கிளப்’பில் திரு புஹேந்திரன் உதவினார். இளையரை நல்வழிப்படுத்துவதில் தொடங்கிய அவரது பயணம், சமாதான நீதிபதியாக, சிறையிலிருக்கும் கைதிகளுக்கும் உதவ அவரை இட்டுச் சென்றது.

இன்று 89 வயதான திரு புஹேந்திரன், “இன்றைய தலைமுறை கல்வியறிவு, தொழில்நுட்பம் எனப் பலவிதமாக முன்னேறியுள்ளது. ஆனால் நாம் இழக்கக்கூடாத ஒன்று, ஒருவருக்கொருவர் அக்கறையுடன் வாழும் அந்தக் ‘கம்பத்து உணர்வுதான். இன்றுவரை நான் காப்பிக் கடைக்குச் சென்று குடியிருப்பாளர்களுடன் பேசி அவர்களின் தேவைகளைத் தெரிந்துகொண்டு உதவ முயல்கிறேன்,” என்றார் திரு புஹேந்திரன்.

குறிப்புச் சொற்கள்