பண்டிகைக் காலம் என்றாலே குடும்பப் பாரம்பரிய நடவடிக்கைகளும் மகிழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நிறைந்ததுதான்; இருந்தாலும், சுவையான உணவுகளுடன்கூடிய விருந்துகளும் இரவில் நெடுநேரம் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் பலருக்கும் தூக்கத்தையும் உடலில் கொழுப்புச்சத்தின் அளவையும் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.
இந்தக் கொண்டாட்டங்களுக்கும் உடல்நலத்துக்கும் இடையே சமநிலை பேணும் நோக்கில், தப்லா!, தமிழ் முரசு ஊடகங்களும் ‘நமஸ்தே பாரத்’ வாழ்க்கைமுறை விழா நிகழ்ச்சியும் இணைந்து சிறப்புக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
‘பண்டிகைக் காலத்தில் உடல்நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொண்டாடுதல்’ எனும் தலைப்பிலான இக்கலந்துரையாடல், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) சன்டெக் சிங்கப்பூர் அரங்கு 405ல், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற நியமன உறுப்பினரும் குடும்ப மருத்துவ வல்லுநருமான டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, ‘ஃபிட்மந்திராஸ்’ நிறுவனரும் மனிதச் செயல்திறன், நல்வாழ்வு உத்தியாளருமான மாஸ்டர் வான்ஸ் என்று அழைக்கப்படும் வாணன் கோவிந்தசாமி இருவரும் சுகாதார ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வர்.
பாரம்பரிய இந்திய மருத்துவப் பின்னணி கொண்ட தமிழ் முரசு சமூக ஊடகச் செய்தியாளர் அகல்யா மணியம் இக்கலந்துரையாடலை வழிநடத்துவார்.
முன்னதாக, ‘சிங்கப்பூர் அனைத்துலக இந்திய எக்ஸ்போ’ என்று அழைக்கப்பட்ட நமஸ்தே பாரத், அக்டோபர் 22 முதல் நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் கைவினைப் பொருள்கள் முதல் ஆடைகள் வரை வாங்குவதற்கான கடைகள், இந்தியக் கலைப் பயிலரங்குகள், நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
