குடும்பங்கள் இணைந்து உடற்பயிற்சி, விளையாட்டுச் சவால்களில் பங்கேற்கும் வகையிலும், தலைமுறைகளுக்கிடையிலான பிணைப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும் அமைந்த புதிய அங்கங்களுடன் களைகட்டியது ‘ஆரோக்கியமான வாழ்வு’ விழா.
வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் சார்பில் கடந்த நான்காண்டுகளாக நடைபெறும் இவ்விழாவில், இவ்வாண்டு ‘ஃபிட்-ஃபேம் 4’ எனும் புதிய அங்கம் அறிமுகம் கண்டது. இதில் வலிமை, வேகம், குழு மனப்பான்மை ஆகியவற்றைச் சோதிக்கும் பெற்றோர்-பிள்ளைக் குழுச்சவால்கள் இடம்பெற்றன.
விளையாட்டு, உடல்நலன் சார்ந்த ஏறத்தாழ 40 அங்கங்களுடன் ஜூன் 6,7ஆம் தேதிகளில் இவ்விழா நடைபெற்றது. இவற்றில் ஏறத்தாழ 6,000 பேர் பங்கேற்றனர்.
விழாவின் இரண்டாம் நாளன்று காலை வடமேற்கு வட்டாரத்தின் 20 பிரிவுகளைச் சேர்ந்த வேகநடைக் குழுவினர் பங்கேற்ற வேகநடை அங்கம் இடம்பெற்றது.
சுவா சூ காங் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியை உள்துறை, தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கா சண்முகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வடமேற்கு வட்டாரத்தின் மேயர் அலெக்ஸ் யாம், “அதிக அளவிலான குடும்பங்களையும், இளையர்களையும் ஈர்க்கும் நோக்கில் புதிய அங்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்குச் சிறந்த வரவேற்பும் கிடைத்துள்ளது. முதன்முறையாக இங்குக் கொண்டுவரப்பட்டுள்ள ‘கலிஸ்தெனிக்ஸ்’ வகை உடல் எடைப் பயிற்சிகள் மீதும் மக்களுக்கு ஆர்வம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகளை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்,” என்றார்.
சுகாதார மேம்பாட்டு வாரியம், ஆக்டிவ் எஸ்ஜி உள்ளிட்ட அமைப்புகளின் முயற்சிகளோடு, உற்சாகமான அனுபவங்கள் மூலம் துடிப்புடன் விளங்கும் வாய்ப்பை இவ்விழா வழங்குவதாகவும் அவர் சொன்னார்.
வேகநடை அங்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் கா சண்முகம், “உடலைக் கட்டுக்கோப்புடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது முக்கியம்,” என்றார். இவ்வாண்டு ஈராயிரம் பேர் இந்த அங்கத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் இந்த நிகழ்ச்சியில், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இங் ஷி சுவான், கேப்ரியல் லாம், புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் ஹெங் ஹூவா, நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹூய் யிங் ஆகியோரும் விருந்தினர்களாகப் பங்கேற்று மக்களுடன் உரையாடினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், சிறார்க்கான 50 மீட்டர் ஓட்டம், கூடைப்பந்து, காற்பந்து, பூப்பந்து தொடங்கி, விளையாட்டுகளுடன் கூடிய உடற்பயிற்சி, ‘ஹைராக்ஸ்’ என அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன. உள்ளூர்க் காற்பந்து நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பும், பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்போர்க்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மூத்தோர் பலர் ஒன்றிணைந்த வேகநடைக் குழுவின் தலைவராக இந்நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்றார் செல்வராஜா அப்புதுரை, 64. அரசுத்துறையில் பணியாற்றும் இவர், கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து செங்ஹுவா-சென்ஜா ஸ்குவேர் வேகநடைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
“எனக்குச் சிறுவயதிலிருந்தே தடகள விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். வயதானபின் அதனை விடக்கூடாது என்பதற்காக வேகநடைக் குழுவில் இணைந்தேன். தற்போது பிறருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி,” என்றார் அவர்.
“எங்கள் குழுவில் வாரந்தோறும் 70 முதல் 80 பேர் இணைந்து வேகநடை மேற்கொள்வோம். இவ்வகை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பது மருத்துவச் செலவைக் குறைத்து, மகிழ்ச்சியையும் பிணைப்பையும் கூட்டும்,” என்றும் அவர் சொன்னார்.
உடல்நலத்துக்கு உதவுவதுடன், நண்பர்கள் பலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாக இந்த வேகநடை நிகழ்ச்சி அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார் செம்பவாங் வட்டாரக் குடியிருப்பாளர் மீனாட்சி பொன்னுமலை பொன்னுச்சாமி, 74.
இந்த இருநாள் நிகழ்ச்சியில் தங்கள் குழுவினர் கிட்டத்தட்ட 80 பேருடன் இணைந்து தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஸ்ரீநிவாஸ் ஸ்ரீ செந்தூர்வேலன், 19.
அக்கல்லூரியில் ‘பீஏ கேர்ஸ்’ அமைப்பில் பங்காற்றும் இவர், “மூத்தோருடன் கலந்துரையாடுவது, பல அங்கங்களை நிர்வகிப்பது ஆகியவற்றில் ஆதரவளிக்கிறோம். மக்களுடன் பழகுவதில் எனக்கு விருப்பம் அதிகம். அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார்.
மேலும், “சமூகத்திற்குத் திரும்பச் செய்வது என்பது என்னை வளர்த்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனாகும். பல்வேறு தரப்பினருடன் பழகுவதற்கும், நல்ல பிணைப்பை உருவாக்கும் முயற்சிகளைக் காண்பதற்கும் இந்த நிகழ்ச்சி நல்வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

