உளவியல் ரீதியாக முதலுதவி அளிக்கும் இளையர் பிரிவு தொடக்கம்

‘ஹார்ட் அசோசியேட்ஸ்’ இளையர் பிரிவு

உளவியல் ரீதியாக முதலுதவி அளிக்கும் இளையர் பிரிவு தொடக்கம்

படம்: உள்துறை அமைச்சு

27 Oct 2026 - 3:26 pm

2 mins read

இளையர்களுக்கான ‘ஹார்ட் அசோசியேட்ஸ்’ இளையர் பிரிவை வெளியுறவு, உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் தொடங்கி வைத்தார்.

2025ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஹார்ட் நிபுணர்கள் கட்டமைப்பு’ முயற்சியைத் தொடர்ந்து இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உளவியல் சங்கம், சிங்கப்பூர் சமூகப் பணியாளர்கள் சங்கம், சிங்கப்பூர் ஆலோசனைச் சங்கம், சிங்கப்பூர் மனநலச் சங்கம், உள்துறை அமைச்சு நிபுணர்களை இக்கட்டமைப்பு ஒன்றிணைக்கிறது.

‘ஹார்ட்’ உறுப்பினர்கள் தங்களது தொழில்முறை, சமூகத் தொடர்புகள் வழியே, நெருக்கடி நிலைகளின்போது அதிக அளவிலான மக்களைச் சென்றடைந்து அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க உதவுகின்றனர்.  

ஃபுராமா ரிவர்ஃபிரண்ட் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ‘நெருக்கடி நிலைகளில் மனித நடத்தை: எதிர்வினைகள், பதில் நடவடிக்கை, மீள்திறன்’ எனும் தொழில்முறை சமூகக் கருத்தரங்கில் பேசியபோது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  

‘எதிர்வினைகள், பதில் நடவடிக்கை, மீள்திறன்’ ஆகியன ஒரு நெருக்கடியின்போது மனிதர்கள் பெறும் அனுபவத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

அவசரநிலையின்போது மக்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களின் தேவைகளுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம், மேலும் தனிநபர்களும் சமூகங்களும் எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதை இவை விளக்குகின்றன,” என்றார் அமைச்சர்.

இந்த ஆண்டு ‘எஸ்ஜிசெக்யூர்’ இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், உள்துறைக் குழுக்கள், சமூகப் பங்காளிகள், தொண்டூழியர்களின் தொடர் முயற்சிகளால் சிங்கப்பூர் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நீடிப்பதற்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் சிம் ஆன்.

நெருக்கடி நிலைக்குத் தயாராக இருப்பது என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதையும் சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு என்பதையும் இந்த மைல்கல் நினைவூட்டுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘ஹார்ட் அசோசியேட்ஸ்’ இளையர் பிரிவு குழுவில் உள்ள 22 வயதான கார்த்திகேஷ்வரன் சுப்ரமணியம்.
‘ஹார்ட் அசோசியேட்ஸ்’ இளையர் பிரிவு குழுவில் உள்ள 22 வயதான கார்த்திகேஷ்வரன் சுப்ரமணியம். - படம்: ஆயிஷா ரோஸ்

இளையர்களுக்கான ‘ஹார்ட் அசோசியேட்ஸ்’ இளையர் பிரிவு குழுவில் உள்ள கார்த்திகேஷ்வரன் சுப்ரமணியம், 22, மனநலத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

மக்களின் மனநல விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், உளவியல் மீள்திறனை வலுப்படுத்துவதிலும் தன்னால் முடிந்த மாற்றத்தை ஏற்படுத்த அவர் விரும்புகிறார்.

“ஒரு சிகிச்சையாளராகவோ அல்லது உளவியலாளராகவோ செயல்படுவது எனது பணி அல்ல. நெருக்கடி நிலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக உணர்வதற்கும், அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குமான முதல் நபராக உதவுவது எனது பணியாகும்,” என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பயிலும் இரண்டாமாண்டு மாணவர் கார்த்திகேஷ்வரன் சுப்ரமணியம்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்உளவியல்பாதுகாப்புஇளையர்