நான்கு வயது முகமது செய்ன், தந்தையுடன் எங்குச் சென்றாலும் சுற்றியிருப்போரின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.
இருவருக்கும் முன்நெற்றியில் ஒரே மாதிரியான வெள்ளை முடி. ஆனால், அவர்களில் ஒருவருக்கே அது இயற்கையானது.
செய்னின் முன்நெற்றி வெள்ளை முடி, அழகு நிலையத்தில் செய்த அலங்காரமன்று. அது, அவனது உடலின் பல பகுதிகளிலும் காணப்படும் தோல் நிறமாற்றத்தின் வெளிப்பாடு. மருத்துவத்தில் ‘பைபால்டிசம்’ (Piebaldism) என அழைக்கப்படும் இந்த நிலை, பிறவியிலேயே ஏற்படும் அரிய, மரபணு தொடர்பான தோல் பிரச்சினை.
இதனால், பிரபல ‘மார்வெல்’ காமிக் புத்தக சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ‘ரோக்’ (Rogue) போன்ற தோற்றத்தை செய்ன் கொண்டிருக்கிறான்.
கட்டுமான நிறுவன இயக்குநரான 36 வயது அசாருதின் முகமது நசீம், தன் மகன் பிறந்தபோது முதலில் அவனது வெள்ளை முடிதான் தனது கவனத்தை ஈர்த்ததாக நினைவுகூர்ந்தார்.
“20 நிமிடங்களுக்குப் பிறகு, அவனது உடலின் பல பகுதிகளில் வெண்புள்ளிகள் தோன்றத் தொடங்கின. அதைப் பார்த்தவுடன் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தோல், முடியின் நிறத்தை வழங்கும் செல்களான மெலனோசைட்டுகள் இல்லாததால் இந்த நிலை உருவாகிறது. உலக அளவில் ஏறத்தாழ 20,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இது ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்தக் குறைபாடு, அறிவு அல்லது உடல் வளர்ச்சி தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தாது. இருப்பினும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் வெளிப்படையான தோற்றத்தால் தேவையற்ற கவனத்தை ஈர்ப்பதுடன் பல கேள்விகளையும் சந்திக்க நேரிடும்.
தொடர்புடைய செய்திகள்
செய்னின் தாயாரான 29 வயது சான்யா அசார், தானும் சிறிதளவு இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“என் குடும்பத்தில் பலருக்கு ‘பைபால்டிசம்’ இருப்பதால் செய்னுக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்று நாங்கள் முன்னரே எதிர்பார்த்தோம். ஆனால், வெண்புள்ளிகள் இவ்வளவு பரவலாகத் தோன்றும் என நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை,” என்றார் சான்யா.
மகனுக்கு ஆதரவாக, செய்னின் முடியைப் போலவே தன் முன்நெற்றி முடியையும் வெண்மையாக்க அசாருதின் முடிவு செய்தார்.
“செய்னுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, ஒரு நாள் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். தன் வெள்ளை முடியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, அப்போது கறுப்பாக இருந்த என் முடியைத் தொட்டான். அது எனக்கு எதையோ உணர்த்தியது,” என அவர் நினைவுகூர்ந்தார்.
அன்றிரவே மனைவியிடம், மறுநாள் தன் முடியை வெண்மையாக்கப் போவதாகக் கூறியதாக அவர் சொன்னார்.
முடியை வெண்மையாக்க ஒவ்வொரு முறையும் பல மணி நேரம் ஆகும். வாரத்தில் இருமுறை பராமரிப்பும் தேவைப்படும். ஆனால், அசாருதின் இதைப் பெருமையுடன் செய்துவருகிறார்.
“வருங்காலத்திலும் செய்னின் முடி எப்படி இருக்குமோ, என் முடியும் அப்படியே இருக்கும்,” என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
பொதுமக்கள் செய்னைப் பார்க்கும்போது அவர்களின் போக்கு சில நேரங்களில் மனத்தைப் புண்படுத்தும் விதமாக இருக்கும் எனச் செய்னின் பெற்றோர் கூறினர். இருந்தாலும், செய்னை உலகத்திலிருந்து கண்மூடித்தனமாகப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவன் தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ள, வேண்டியனவற்றைச் செய்ய அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
“பலர் புகைப்படம் எடுக்க முயற்சி செய்வார்கள். வேறு சிலர் முறைத்துப் பார்ப்பார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போது, பதிலுக்கு நானும் முறைத்துப் பார்த்துவிடுவேன்,” என்றார் சான்யா.
ஒருமுறை, வயதான பெண் ஒருவர் செய்னைப் பார்த்து, அதிர்ச்சியில் ‘கிழவன்’ என்று அலறிய தருணத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“ஆனால், சிலர் செய்னைப் பாராட்டி, ‘சூப்பர்’ என்று அழைப்பதும் உண்டு. அருகிலுள்ள விளையாட்டுத் திடலிலுள்ள சிறுவர்கள் அவனை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பல நேரங்களில், பெரியவர்களைவிடச் சிறுவர்களே செய்னை மிகவும் எளிதாகப் புரிந்துகொண்டு நன்றாகப் பழகுவதாக அவன் பெற்றோர் கூறினர்.
இப்போது பாலர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் செய்னின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் அவர்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
“செய்னுக்கு மெலனின் இல்லாததால், சூரிய ஒளியில் தோல் எளிதாக பாதிக்கப்படலாம். அதனால், பள்ளியில் வெளிப்புற நடவடிக்கைகளின்போது அவனுக்கு ‘சன்ஸ்கிரீன்’ தடவும்படி மட்டும் கேட்டுக்கொண்டோம். மற்றபடி, அவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் பையன்தான்,” என்றார் அசாருதின்.
செய்னின் நிலையை மறைக்கக் கூடாது என்று பெற்றோர் இருவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
“நான் சிறுமியாக இருந்தபோது, என் கால்களை எப்போதும் மறைத்துக்கொண்டே இருப்பேன். அதை நான் செய்னுக்குச் செய்ய விரும்பவில்லை. அவன் தனது தோலை மனதார ஏற்றுக்கொண்டு, அதைப் பற்றிப் பெருமைப்பட வேண்டும்,” என்று சான்யா தெரிவித்தார்.
செய்னை வளர்ப்பது எதிர்பாராத வாழ்க்கைப் பாடங்களை இந்தத் தம்பதியருக்குக் கற்றுத்தந்துள்ளது.
“அவன் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்தான். அநாகரிகமாக நடக்கும் அந்நியர்களுக்கு நான் கோபத்துடன் பதிலளிக்க விரும்பவில்லை. ஏனென்றால், பெற்றோராகிய எங்களைப் பார்த்துதான் செய்ன் வளர்கிறான்.
“இப்போது, யாராவது முறைத்துப் பார்த்தால், அவர்களிடம் வணக்கம் சொல்லும்படி செய்னை ஊக்குவிக்கிறேன். இது உரையாடலைத் தொடங்கவும் மற்றவர்களுக்கு இந்த நிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவுகிறது,” என்றார் அசாருதின்.
தாங்கள் செய்னை ஒருபோதும் வெட்கப்பட்டு வெளியுலகத்திற்கு மறைத்ததில்லை என்று குறிப்பிட்ட அவர், பெற்றோர் அப்படிச் செய்தால், குழந்தைகளால் தன்னம்பிக்கையுடன் வளர முடியாது என்றார்.
“அல்லாஹ் என்னை இப்படித்தான் படைத்தார்,” என்று செய்ன் பிறரிடம் தன்னம்பிக்கையுடன் கூறுவதாகத் தந்தை அசாருதின் பெருமையுடன் பகிர்ந்தார்.
“அவன் மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் குறைவானவன் அல்லன். அவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறான்,” என்றார் தாயார் சான்யா.

