இயற்கைவழி உற்சாகம் தூண்டும் பூங்கா விழாவின் சிறப்பம்சங்கள்

இயற்கைவழி உற்சாகம் தூண்டும் பூங்கா விழாவின் சிறப்பம்சங்கள்

2 mins read
9756d74c-b856-404d-bf63-a6da244e038f
பத்தாவது முறையாக, இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ள பூங்கா விழாவிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. - படம்: சுந்தர நடராஜ்
திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த வண்ணக் கொடிகள் கொண்ட பாதைகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நுழைவாயில்.
திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த வண்ணக் கொடிகள் கொண்ட பாதைகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நுழைவாயில். - படம்: சுந்தர நடராஜ்

வண்ண மலர்க் காட்சிகள், செடிகொடிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அழகிய வடிவமைப்புகள், பார்வையாளர்கள் கண்முன் அரங்கேறும் விறுவிறுப்பான தோட்டக்கலைப் போட்டிகள் எனக் கரையோரப் பூந்தோட்டங்களின் வளாகம் துடிப்பாக மாறவுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூங்கா விழா பத்தாவது முறையாக இவ்வாண்டு நடக்கவிருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வடிவமைப்பாளர்களும் தோட்டக்கலை வல்லுநர்களும் ஊழியர்களும் இப்பணிகளில் ஈடுபடும் காட்சிகளைக் காணச் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், மக்களின் பார்வைக்காக வடிவமைக்கப்பட்ட, போட்டியில் இல்லாத நான்கு காட்சிகள் குறித்து விவரிக்கப்பட்டது.

மலர் அலங்காரத்துடன் ‘ரோலர் கோஸ்டர்’ சாகச வண்டி

வெப்பமண்டலப் பகுதிகளின் தாவரங்கள், மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ரோலர் கோஸ்டர்’.
வெப்பமண்டலப் பகுதிகளின் தாவரங்கள், மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ரோலர் கோஸ்டர்’. - படம்: சுந்தர நடராஜ்

‘மலர்களின் விழா’ எனும் கருப்பொருளையொட்டி, ஒரு திருவிழா போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் மலர்களாலான 'ரோலர் கோஸ்டர்’ சாகச வண்டி இடம்பெறுகிறது.

எட்டு மீட்டர் உயரத்தில், வளைவுகளில் மேலும் கீழும் செல்லும் உற்சாக அனுபவத்தை இது தரும். வெப்பமண்டலப் பகுதிகளின் தாவரங்கள், மலர்களைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாதையில் பல்வேறு இலைத்தொகுதிகளையும் வண்ணப் பூங்கொத்துகளையும் காணலாம்.

கரையோரப் பூந்தோட்டங்களில் உள்ள ‘த மெடோஸ்’ வளாகத்தில் இடம்பெற்றுள்ள இவ்வடிவத்துடன், 1861ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூரின் முதல் மலர்க் கண்காட்சி முதல் இவ்வாண்டின் 10வது பூங்கா விழா வரையிலான 165 ஆண்டுகால தோட்டக்கலை வரலாற்றை விளக்கும் ‘165 ஆண்டுகளாக மலரும்’ விழா (165 Years in Bloom) என்னும் வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறும்.

இயற்கைசூழ் விளையாட்டுப் பூங்கா

சுழல்ராட்டினம் தரும் உற்சாகத்தை இயற்கையோடு இணைக்கும் விளையாட்டுப் பூங்கா.
சுழல்ராட்டினம் தரும் உற்சாகத்தை இயற்கையோடு இணைக்கும் விளையாட்டுப் பூங்கா. - படம்: சுந்தர நடராஜ்

குழந்தைகளைக் கவரும் வகையில் சுழல்ராட்டினம் தரும் உற்சாகத்தை இயற்கையோடு இணைக்கும் மைய மரத்தைச் சுற்றி இவ்வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கம்பீரமான மைய மரம், அதனைச் சுற்றி ராட்டினம்போல அமைந்த கிளைகள் ஆகியவற்றுடன் ஆங்காங்கே ஆந்தைகள், மரங்கொத்திகள், எறும்புத்தின்னிகள் உள்ளிட்ட சிங்கப்பூரின் பூர்வீக விலங்குகளின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் விளையாடி மகிழ்வதுடன், இயற்கை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலர்ச்சுழல்

ஆர்க்கிட் மலர்களைக் கொண்ட வளைவுப் பாதை.
ஆர்க்கிட் மலர்களைக் கொண்ட வளைவுப் பாதை. - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூரின் தோட்டக்கலை அடையாளங்களில் ஒன்றான ஆர்க்கிட் மலர்களைக் கொண்ட வளைவுப் பாதைகளுடன் ஒரு பன்முக உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற ‘ஆன்சிடியம்’ மலர்களின் வெப்பம், ‘டென்ட்ரோபியம்’ மலர்களின் மென்மையான நிறங்கள், ஆர்க்கிட் மலர்களின் ‘பளீர்’ நிறங்கள் எனப் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் வகையில் இது அமைந்திருக்கும்.

எல்லையற்ற மலர்க் கண்ணாடிப் பாதை

எல்லையற்ற மலர் உலகிற்குள் பயணம் செய்யும் உணர்வையளிக்கும் கண்ணாடிப் பாதை.
எல்லையற்ற மலர் உலகிற்குள் பயணம் செய்யும் உணர்வையளிக்கும் கண்ணாடிப் பாதை. - படம்: சுந்தர நடராஜ்

இருபுறமும் வண்ணமயமான வெப்பமண்டலத் தாவரங்களைக் கொண்ட பாதை கண்ணாடிகளால் சூழப்பட்டு வண்ணக் கோலத்தை உருவாக்கும் உணர்வைத் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பகல் வெளிச்சம், மலர்களின் பிரதிபலிப்புகள் ஆகியவற்றுடன் ஓர் எல்லையற்ற மலர் உலகிற்குள் பயணம் செய்யும் உணர்வை இது தரும்.

மொத்தம் 14 மீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், ‘கிரிம்சன்’ எனும் அடர் சிவப்பு, ஊதா, மஞ்சள், எலுமிச்சைப் பச்சை, அடர் பச்சை என அழகிய வண்ணங்களின் தொகுப்பாக அமையும்.

குறிப்புச் சொற்கள்