சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் ‘வில்லியம் ஃபார்குவார் இயற்கை வரலாற்று வரைபடங்கள்’ தொகுப்பிலிருந்து 36 கலைப்படைப்புகள் சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் சராசரியாக 200 ஆண்டுகள் பழைமையானவை.
‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்: சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ என்று அழைக்கப்படும் தொகுப்பு சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.
தென்கிழக்காசியாவின் கவர்ச்சியான, பசுமையான உயிரியல் பகுதியில் காணப்படும் குறிப்பிடத்தக்க பாலூட்டிகள், ஊர்வன, தாவரவியல் ஆகியவை இந்த ஓவியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
“மேலும் சிங்கப்பூர்க் கலைஞர்களின் திறமை, நுட்பங்களை இந்தத் தொகுப்பு வெளிப்படுத்துகின்றது,” என்றார் ஆஸ்திரேலிய அரும்பொருளகளத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிம் மெக்கே ஏஓ.
சிங்கப்பூர்-மலாயாவில் காணப்படும் பாலூட்டியான பிந்துராங், சுத்தியல் போன்ற தலையைக் கொண்ட கொம்பன் சுறா மீன், மெதுவாக நகர்ந்து செல்லும் அரிய வகைத் தேவாங்கு (Loris) போன்ற முக்கியப் படைப்புகளில் சில காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள இவ்விரண்டு அரும்பொருளகங்கள் மிகப் பழைமையானவை என்று சுட்டிக்காட்டினார் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் இயக்குநர் திருவாட்டி சுங் மே குயென்.
“இந்தக் கண்காட்சியால் சுற்றுச்சூழல், விலங்குப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்து அர்த்தமுள்ள உரையாடல்கள் இடம்பெறும் என்று நம்புகிறோம்,” என்று கூறிய அவர் ஆஸ்திரேலிய அரும்பொருளகத்துக்கு நன்றி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்: சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ கண்காட்சித் தொகுப்பு ஆஸ்திரேலிய அரும்பொருளகளத்தில் மே 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை இடம்பெறும்.
அனுமதி இலவசம். மேல்விவரங்களுக்கு australian.museum/exhibition/tails-from-the-coasts எனும் இணையத்தளத்தை நாடலாம்.

