தீவிர சிகிச்சைக்குப்பின் நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவும் திட்டம்

தீவிர சிகிச்சைக்குப்பின் நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவும் திட்டம்

1 of 2
படம்:  ‘ட்ரைஜென்’  
படம்:  ‘ட்ரைஜென்’  

18 Oct 2026 - 6:03 am

2 mins read

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் குணமடையும் பயணம் தொடர்கிறது.

தீவிர சிகிச்சைக்குப் பிந்தைய பாதிப்பு (Post-Intensive Care Syndrome – PICS) எனப்படும் உடல், சிந்தனைத் திறன், மனநலம் சார்ந்த பாதிப்புகளைத் தீவிர சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் நீண்ட காலத்துக்குப் பாதிப்புகள் தொடரக்கூடும்.

டான் டோக் செங் மருத்துவமனையும் ‘ட்ரைஜென்’ அமைப்பும் இணைந்து, தொண்டூழியர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று உதவும் புதிய திட்டத்தைத் தொடங்கின.

கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஓராண்டாக முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு ஆறுமாத காலத்துக்கு, மாதம் ஓரிருமுறை வீடு தேடிச் சென்று ஆதரவு வழங்கப்பட்டது.

நோயாளிகள் மருத்துவமனைக்கு மீண்டும் வரும்வரை காத்திருக்காமல், மருத்துவர்களும் தொண்டூழியர்களும் அடங்கிய குழுக்கள் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று ஆதரவு வழங்கின. உடல் வலிமையை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகள், சிந்தனைத் திறனைத் தூண்டும் நடவடிக்கைகள், மருந்துகளை முறையாக உட்கொள்வதை உறுதிசெய்தல், பராமரிப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் எனப் பல்வேறு வகைகளில் அவர்கள் உதவினர்.

திட்டத்தில், ஐந்து குழுக்களில் இடம்பெற்ற டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் 15 பேருடன் பல்வேறு உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் 15 பேரும் பங்கேற்றனர். அவர்களின் ஆதரவுடன் தீவிர சிகிச்சைக்குப் பிந்தைய பாதிப்புகளை எதிர்கொண்ட நோயாளிகள் 12 பேர் பயனடைந்தனர்.

நோயாளிகளில் ஒருவரான திருமதி ஹெங், கடுமையான நிமோனியா பாதிப்புடன் ஆஸ்துமா தாக்குதலுக்கும் ஆளானதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 

“மருத்துவ வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்ற இளையர்களுக்கு இந்தத் திட்டம் வாய்ப்பு வழங்கியது. மருத்துவமனைக்கு அப்பாலும் நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்க முடிந்தது. அவர்களுடன் நேரம் செலவிட்டது மனத்தளவில் உற்சாகமடையவும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் அவர்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் திருமதி ஹெங்குக்கு உதவிய தொண்டூழியர்களில் ஒருவரான 18 வயது ஜான்வி.

“தொண்டூழியர்கள் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டத்தின்மூலம் நோயாளிகளை நன்கு அறிந்துகொண்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளைத் திட்டமிட முடிகிறது,” என்றார் மற்றொரு தொண்டூழியரான 18 வயது அமண்டா சுவா.

“இந்தத் திட்டம் என் தாயாருக்கு மனத்தளவில் உற்சாகம் அளித்ததுடன், அவர்மீது அக்கறை காட்ட அதிகமானோர் உண்டு என்பதை உணரச் செய்தது. நோயாளி ஒருவர் மீண்டு வருவதில் அவர் மற்றவர்களுடன் பழகுவது மிகவும் முக்கியம். என் தாயாருக்குக் கிடைத்த இந்த ஆதரவு, அவரைக் கவனித்துக்கொள்ளும் எனக்கும் ஓரளவு சுமையைக் குறைத்தது,” என்றார் திருமதி ஹெங்கின் மகள் ஜூடித்.

வீட்டுக்குச் சென்ற தொண்டூழியர்கள், திருமதி ஹெங்கின் உடல் வலிமையையும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறனையும் மேம்படுத்தும் பயிற்சிகளில் அவருடன் இணைந்து ஈடுபட்டனர். அவரை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதுடன், சிந்தனைத் திறனை மீட்டெடுக்க உதவும் விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தினர்.

திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த கட்டத்தில் கூடுதலான தொண்டூழியர்களை இணைத்துக்கொண்டு, மேலும் பல நோயாளிகளுக்கு ஆதரவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்