இல்லப் பணிப்பெண்களுக்கு சேவை வழங்கும் ‘ஹோப் வில்லேஜ்’

2 mins read
0ac68bc7-45a8-4f43-98d1-32d40a40596d
இதுவரை பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டும் சேவை வழங்கி வந்த காக்கிட் புக்கிட் பொழுதுபோக்கு நிலையம், இல்லப் பணிப்பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மறுவடிவமைக்கப்படவுள்ளது. - படம்: சாவ்பாவ்

காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம், வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கும் சேவை வழங்கும் ஒரு பிரத்தியேக சமூக நிலையமாக மேம்பாடு காணவுள்ளது.

‘ஹோப் வில்லேஜ் @ கேபிஆர்சி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய ஒருங்கிணைந்த சமூக மையத்தைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நிலையத்தில் நடைபெற்ற ‘வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான பெருமகிழ்வுலா நாள் 2026’ நிகழ்ச்சியின்போது ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ் (எச்ஐஏ) அமைப்பு கூடுதல் தகவல் பகிர்ந்தது.

‘வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான பெருமகிழ்வுலா நாள் 2026’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நடைபெற்றது.
‘வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான பெருமகிழ்வுலா நாள் 2026’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நடைபெற்றது. - படம்: சாவ்பாவ்

மனிதவள அமைச்சின் நியமனத்தின்கீழ், நிலையத்தை எச்ஐஏ அமைப்பு, அட்வான்சர் ஐஎஃப்எம் நிறுவனத்துடன் இணைந்து ஜனவரி 2026 முதல் டிசம்பர் 2028 வரை நிர்வகிக்கிறது.

இதுவரை பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டும் சேவை வழங்கி வந்த இந்நிலையம், இனி பணிப்பெண்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு மறுவடிவமைக்கப்படவுள்ளது என்று எச்ஐஏ தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பெரும்பாலான பணிப்பெண்களின் ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் பயனுள்ள வசதிகள் செய்து தரப்படும்.

தற்போது இந்நிலையத்தில் பன்னோக்கு மண்டபம், விளையாட்டுத் திடல்கள், பொதுவான உணவருந்தும் இடங்கள் உள்ளன. மார்ச் 2026ல் இடம்பெறும் அதிகாரபூர்வத் தொடக்கத்திற்கு முன்னதாக, நிலையத்தில் விரிவான மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வெளிப்புறச் சுற்றுலாத் தலமாக விளங்கும் ‘நல்வாழ்வுத் தெரு’, உணவுக்கடைகளும் கண்ணைக் கவரும் விளக்கு அலங்காரங்களும் கூடிய ‘சோலைப் பூங்கா’, ஆங்கிலம், அடிப்படைக் கணினித் திறன் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் திறன் மேம்பாட்டு அறைகள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளையும் நிலையத்தில் எதிர்பார்க்கலாம்.

அதோடு, சட்ட உதவி, ஆலோசனை, மருத்துவ ஆதரவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பங்காளிகள் வழங்கக் கூடுதல் இடங்கொடுக்கும் கிட்டத்தட்ட 10 புதுப்பிக்கப்பட்ட அலகுகளைக் கொண்ட ‘கொள்கலன் கிராமம்’ (container village) ஒன்றும் அமைக்கப்படவுள்ளது என்று எச்ஐஏ அமைப்பின் தலைவர் தவத்திரு எசெக்கியல் டான் குறிப்பிட்டார்.

‘ஹோப் வில்லேஜ்’ திட்டத்தின் மையக் கருத்தாக ‘கூட்டுருவாக்கம்’ விளங்குவதாக அவர் கூறினார். இந்த இடத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பணிப்பெண்களிடமிருந்து அமைப்பு நேரடியாகக் கருத்துகளைச் சேகரித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கூடுதல் பெண்கள் கழிவறைகள், பாதுகாப்புப் பெட்டகங்கள், நடனம், கைவினைக்கலை போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான அறைகள் உள்ளிட்ட ‘சகோதரிகளுக்கே உரிய பகுதிகளை’ உருவாக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“பணிப்பெண்களின் ஓய்வு நாளில், அவர்கள் இங்கு வந்து மனநிம்மதியாக ஓய்வெடுக்கவும் அங்கீகாரம் பெறவும் தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்று தவத்திரு டான் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இரண்டாவது வீடு போன்ற ஓர் இடத்தை உருவாக்கும் நோக்கில், இந்த நிலையம் கட்டங்கட்டமாக மேம்படுத்தப்படும்.

சீரமைப்புப் பணிகள் நடைபெறும் காலத்திலும் நிலையம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்