வாட்டியது வாதம், தேற்றியது யோகம்

வாட்டியது வாதம், தேற்றியது யோகம்

4 mins read
2030e28a-eee7-4fc1-bf7e-2d667b200168
யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும். - படம்: பே. கார்த்திகேயன்

இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனுக்கு 2020ல் முடக்குவாதம் (Rheumatoid Arthritis) இருப்பதாக உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரது வாழ்க்கை தலைகீழாகப் புரண்டது. அப்போது அவருக்கு வயது 39.

மூட்டுகளைத் தாக்கும் அந்த நோயின் தீவிரத்தால் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். சில நாள்களில் நடக்க இயலாமல், தவழ்ந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. வலக்கை மணிக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பால், ஒரு கரண்டியைக்கூடப் பிடிக்க முடியாத நிலை.

இரண்டு இளம்பிள்ளைகளின் தாயான திருவாட்டி சுகன்யா, தமது வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டதோ என்ற அச்சத்தில் ஆழ்ந்தார்.

ஆனால், ஐந்து ஆண்டுகளில் அவரது நிலைமை முற்றிலும் மாறியது.

அண்மையில் தம் குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்தபோது, சொந்தமாக ஓடிச்சென்று ரயிலைப் பிடிக்கும் அளவிற்கு இப்போது 44 வயதாகும் திருவாட்டி சுகன்யாவின் உடல்நிலை தேறியுள்ளது. அதுமட்டுமின்றி, சென்ற ஆண்டு ஒரே அமர்வில் 80 முறை சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்து வியப்பில் ஆழ்த்தினார் அவர்.

இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமன், 44.
இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமன், 44. - படம்: பே. கார்த்திகேயன்

இந்த வியக்கத்தக்க மாற்றத்திற்கு அவர் முக்கியக் காரணமாக கருதுவது யோகாசனப் பயிற்சியைத்தான்!

திருவாட்டி சுகன்யாவின் யோகா பயணம் 2016ல் தொடங்கியது.

யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதன் தம் வீட்டிலேயே நடத்திவந்த ‘யோகமும் வாழ்க்கையும்’ எனும் பெண்கள்நல அமைப்பில் அவர் இணைந்தார்.

செங்காங்கிலிருந்து செம்பவாங் வரை பயணம் செய்து வகுப்புகளில் கலந்துகொண்ட அவர், குறுகிய காலத்திலேயே நல்ல பலன்களை உணர்ந்ததாகக் கூறினார். உடல் எடை குறைந்ததோடு, அவரது சினைப்பை நீர்க்கட்டி (PCOD) பிரச்சினையும் சீரானது.

“நாம் இவ்வளவு வீட்டு வேலைகளைச் செய்கிறோமே, ஏன் நமக்குச் சோர்வு வருவதில்லை என்று யோசித்திருக்கிறேன். யோகா எனக்குக் கொடுத்த ஆற்றல் அதுதான்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும்.
இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும். - படம்: பே. கார்த்திகேயன்

முடக்கியது வாதம்

ஆனால், 2019ஆம் ஆண்டு இறுதியில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இடது முழங்காலில் தொடங்கிய வலி, விரைவில் உடல் முழுவதும் பரவியது. 2020ஆம் ஆண்டு மத்தியில், முகம் கழுவக்கூட முடியாத அளவிற்கு அவரது வலது மணிக்கட்டு வீங்கியது.

மருத்துவப் பரிசோதனையில் திருவாட்டி சுகன்யாவிற்கு முடக்குவாதம் இருப்பது கண்டறியப்பட்டது.

நீண்டகால மருந்தாக வாரத்திற்கு எட்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தீவிர ஸ்டீராய்டு சிகிச்சையும் பரிந்துரைக்கப்பட்டது. மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தினாலும், உடலளவிலும் மனத்தளவிலும் அவர் சோர்ந்து போனார்.

அந்தச் சமயத்தில்தான், “மாற்றுத்திறனாளிகளே பாராலிம்பிக் போட்டிகளில் இவ்வளவு சாதிக்கிறார்கள் என்றால், உங்களால் ஏன் முடியாது?” என்று அவரது மகன் கேட்ட கேள்வி, அவருக்குள் மறைந்திருந்த மனவுறுதியை மீண்டும் தட்டி எழுப்பியது.

உடனடியாக திருவாட்டி சுகன்யா, தமது யோகா பயிற்சியாளர் பிரியாவைத் தொடர்புகொண்டார். கொவிட்-19 காலகட்டம் என்பதால், வகுப்புகள் ‘ஸூம்’ தளம் வழியாக இணையத்தில் நடைபெற்றன. பயணம் செய்ய வேண்டிய அவசியமின்றி வீட்டிலிருந்தே பயிற்சி செய்யும் வசதி, அவருக்குப் பெருந்துணையாக அமைந்தது.

திருவாட்டி பிரியா, அவரை வற்புறுத்தாமல், நாற்காலியில் அமர்ந்தபடியே பயிற்சிகளைச் செய்ய ஊக்கமளித்தார்.

“உங்களால் இதைச் செய்ய முடியுமா என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை. வற்புறுத்தியிருந்தால், ஒருவேளை நான் பாதியிலேயே கைவிட்டிருப்பேன்,” என்று திருவாட்டி சுகன்யா கூறினார்.

விடாமுயற்சியால் விளைந்த பயன்

ஜனவரி 2021ஆம் ஆண்டு பயிற்சியைத் தொடங்கியபோது, நாற்காலியில் அமர்ந்து மற்றவர்கள் செய்வதைப் பார்க்க மட்டுமே அவரால் முடிந்தது. நாளடைவில் தரையில் அமரும் நிலைக்கு முன்னேறினார். பின்னர் ஒரு நொடி மட்டும் யோகாசன நிலையில் அமரப் பழகினார்.

ஓர் அசைவு இரண்டானது, பிறகு மெல்ல அதிகரித்தது. காலப்போக்கில் உடல் சமநிலை சீரானது. தசை வலிமை திரும்பியது. அன்றாடப் பணிகள் எளிதாகின.

யோகா பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும்.
யோகா பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும். - படம்: பே. கார்த்திகேயன்

மருத்துவப் பரிசோதனைகளில், மூட்டு இயக்கத் திறன் மேம்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ரத்த மாதிரிகளின் முடிவுகளும் மேம்பட்டிருந்ததைப் பார்த்து மருத்துவரும் வியந்துபோனதாக திருவாட்டி சுகன்யா குறிப்பிட்டார். வாரத்திற்கு எட்டு மாத்திரைகள் எடுத்த நிலை, இப்போது மூன்றாகக் குறைந்திருக்கிறது.

முடக்குவாதத்தை முழுமையாகக் குணப்படுத்த இன்னும் வழி கண்டறியப்படவில்லை என்றாலும், மருத்துவச் சிகிச்சையுடன் தொடர்ந்து யோகா செய்து வருவது மூட்டு வலியையும் வீக்கத்தையும் குறைப்பதோடு, மன அழுத்தத்தை நீக்கி உடல் இயக்கத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் - மூச்சு - மனம்

“ஒரு காலத்தில் அவரால் நடக்கக்கூட முடியவில்லை. இன்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் இயங்குகிறார். இது ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றமன்று. விடாமுயற்சி, தொடர்ந்த பயிற்சி, அளவற்ற பொறுமை ஆகியவற்றின் பலன்,” என்றார் திருவாட்டி பிரியா.

13 பெண்களுடன் தொடங்கிய அவரது யோகா வகுப்புகளில், இன்று 300க்கும் மேற்பட்ட பெண்கள் இலவசமாகப் பயிற்சி பெறுகின்றனர்.

பாதுகாப்பான சூழலில், ஆதரவுடன், சிறு சிறு படிகளாக முன்னேறி பயிற்சியைத் தொடர்ந்து செய்ததே இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணம் என திருவாட்டி பிரியா குறிப்பிட்டார். வகுப்பில் உள்ள பிற பெண்களைப் பார்க்கும்போது, தாம் தனியாக இல்லை என்ற உணர்வு உருவாகிறது. அந்த ஆதரவு, மருந்தைப் போலவே குணமளிக்கும் சக்தி கொண்டது என்றும் அவர் கூறினார்.

இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும்.
இல்லத்தரசி சுகன்யா ரகோத்தமனும் (வலது) யோகா பயிற்றுநர் பிரியா சுவாமிநாதனும். - படம்: பே. கார்த்திகேயன்

“யோகா என்பது முழுமையை அடைவதன்று. அது உடல், மூச்சு, மனம் ஆகியவற்றுக்கிடையிலான பிணைப்பு,” என்கிறார் திருவாட்டி பிரியா. இந்த ஆண்டு தமது அமைப்பின் 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், திருவாட்டி சுகன்யாவின் பயணத்தைத் தமது போதனையின் தத்துவமாக அவர் பார்க்கிறார்.

தாம் செய்தது பிறருக்காக அன்று, தமக்காகவே செய்ததாகக் குறிப்பிட்ட திருவாட்டி சுகன்யா, தமது அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளித்தால் அதைவிடப் பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்