கோடை வெயில் கொளுத்தும் வேளையில் அடர்த்தியான புகைமூட்டமும் அவ்வப்போது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும்.
சில வேளைகளில் வெளியே அனல் காற்று வீசும். தொண்டையிலும் கண்ணிலும் எரிச்சல் ஏற்படும் அளவிற்கு வானிலை மிகவும் மோசமாக இருக்கும்.
அத்தகைய நேரத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் கடும் வானிலையால் அவதிப்படுவர்.
இந்தச் சூழ்நிலையில் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
எளிய முறைகள் மூலம் எவ்வாறு உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்துக் குடும்ப மருத்துவர் டாக்டர் வித்யா பிள்ளை சில ஆலோசனைகளை வழங்கினார்.
புகைமூட்டத்தின்போது காற்றின் தரம் மோசமாக இருந்தால் ஒருவருக்கு மூக்கிலும் கண்களிலும் நீர் வடியலாம், தொண்டை எரிச்சல் ஏற்படலாம் என்றார் டாக்டர் வித்யா.
முதியவர்கள், குழந்தைகள், நாட்பட்ட சுவாச, இதயக் கோளாறுகளை உடையோர் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடும்.
புகைமூட்டத்தின்போது நோய்வாய்ப்படாமல் இருக்கப் பொதுமக்கள் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து டாக்டர் வித்யா தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து சத்தான சமச்சீர் உணவைச் சாப்பிடுவது, நாள் முழுதும் உடல் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதிசெய்வது, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100க்கும் குறைவாக இருக்கும் வரை வீட்டிற்குள்ளோ வெளியிலோ தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை அவர் பரிந்துரைத்தார்.
புகைமூட்டத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் முகக்கவசங்கள் எந்த அளவுக்குப் பலனளிக்கும், மேலும் எந்த வகையான முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கும் பதில் தந்தார் டாக்டர் வித்யா. பொதுவாகக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவில் இருக்கும்போது ஒருவர் நீண்ட நேரம் வெளியே இருக்கும் வேளைகளைத் தவிர மற்ற வேளைகளில் முகக்கவசங்கள் அணிய வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘என்95’ முகக்கவசத்தைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவதாக அவர் சொன்னார்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100க்கும் குறைவாக இருந்தாலும் உடல்நிலை சீராக இருந்தாலும் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றார் டாக்டர் வித்யா.
இந்நிலையில் காற்றுச் சுத்திகரிப்பான்கள் அவசியமில்லை என்றார் அவர். இருப்பினும் தேவை எனக் கருதினால் ஹெப்பா (HEPA) வடிகட்டிகளைக் கொண்டவை பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
வெளிப்புறக் காற்றின் தரம் மோசமடைவதுபோல் தோன்றினால் புகைமூட்டத்தின் பாதிப்பைக் குறைக்க வீட்டின் கதவுகள், சன்னல்களை மூடிவைக்க வேண்டும். வீட்டிற்குள் உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மூடிய அறைகளுக்குள் புகை பிடித்தல் போன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்றார் டாக்டர் வித்யா.
தூசியை அகற்றச் சாதாரணமாகத் துடைப்பது அல்லது ‘வேக்யூம்’ செய்வது போலல்லாமல், ஈரத்துணியால் தரையைத் துடைக்கலாம். காற்றோட்டத்திற்காக மின்விசிறிகள் அல்லது குளிரூட்டிகளைப் பயன்படுத்தலாம். குளிரூட்டி, வெளியிலிருந்து வடிகட்டப்படாத காற்றை உள்ளிழுத்தால் வெளிப்புறக் காற்றை உள்ளிழுக்கும் துவாரத்தை மூடிவைக்கலாம்.
உட்புறக் காற்றில் உள்ள தூசு, நச்சுத் துகள்களின் அளவை மேலும் குறைப்பதற்குச் சிறிய காற்றுச் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தலாம்.
இந்த நேரத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதும் சத்தான சமச்சீர் உணவை உட்கொள்வதும் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க உதவும் என்று குறிப்பிட்டார் டாக்டர் வித்யா.
கண்கள், மூக்கு, தொண்டையில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை நாடுவது சிறந்தது என்றும் அவர் சொன்னார்.
நாட்பட்ட நோய்களால் அவதிப்படும் மூத்தோர், உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் வித்யா.

