இணையவழி வர்த்தகம், நாம் பொருள்களை வாங்கும் மற்றும் விற்கும் முறையை முற்றிலும் மாற்றியுள்ளது.
தற்போதைய சூழலில் பெரிய இணையவர்த்தகத் தளங்கள் முதல் 'கேரோசல்’ போன்ற இணையச் சந்தைகள் வரை, சிங்கப்பூரர்கள் வீட்டிலிருந்தபடியே பொருள்களின் விலைகளை ஒப்பிடலாம், குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை வாங்கலாம், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்களுக்கு மோசடிக்காரர்களும் வருகிறார்கள்.
நீங்கள் நீண்ட நாள்களாக வாங்க விரும்பிய ஒரு பொருள், நம்பமுடியாத அளவுக்குக் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளை வாங்க மேலும் பலர் ஆர்வமாக இருப்பதாக விற்பனையாளர் கூறுகிறார்.
“இப்போதே முன்பணம் அனுப்பினால், அந்தப் பொருளை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறேன்,” என்று சொல்கிறார்.
திடீரென, ஒரு நல்ல சலுகை அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையாக மாறிவிடுகிறது. இத்தகைய அவசரத்திலும் நாம் தடுமாறாமால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விலை நம்பமுடியாத அளவுக்குக் குறைவாக இருந்தால் கவனம்!
மோசடிக்காரர்கள் உண்மையில் இல்லாத பொருள்களை விற்பனைக்கு விளம்பரப்படுத்தலாம். உண்மையான விற்பனை விளம்பரங்களிலிருந்து புகைப்படங்களை எடுத்துப் பயன்படுத்தலாம். போலியான விற்பனையாளர் கணக்குகளை உருவாக்கலாம்.
சிலர், நீங்கள் பயன்படுத்தும் இணையவர்த்தகத் தளத்திற்கு வெளியே உரையாடலையும் பணப் பரிவர்த்தனையையும் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தலாம்.
ஒரு பொருளின் விலை குறைவாக இருப்பதால் மட்டும் அது மோசடி என்று முடிவுசெய்ய முடியாது. ஆனால், வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த விலையுடன், உடனடியாக முடிவெடுக்குமாறு வற்புறுத்துவது, முன்பணம் கேட்பது அல்லது வர்த்தகத் தளத்திற்கு வெளியே தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்துவது போன்றவை சேர்ந்திருந்தால், கூடுதல் கவனம் அவசியம்.
விற்பனையாளரின் விவரத்தையும், கிடைக்கக்கூடிய முந்தைய பரிவர்த்தனை விவரங்களையும் சரிபாருங்கள்.
புதிதாக உருவாக்கப்பட்ட கணக்குகள் அல்லது பரிவர்த்தனைக்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் வர்த்தகத் தளத்தில் பணம் செலுத்துவதற்கான வசதிகள் அல்லது வாங்குபவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால், அவற்றைப் புரிந்துகொண்டு பயன்படுத்துங்கள். அறிமுகமில்லாத முறையில் பணம் செலுத்துமாறு யாராவது கேட்டால், உடனடியாக ஒப்புக்கொள்ளாதீர்கள்.
பொருள் விற்பவர்களும் மோசடிக்கு ஆளாகலாம்
இணையச் சந்தைகளில் நடைபெறும் மோசடிகள் பொருள் வாங்குபவர்களை மட்டும் பாதிப்பதில்லை. விற்பனையாளர்களும் மோசடிக்காரர்களின் இலக்காக மாறலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை வாங்க விரும்புவதாகக் கூறும் ஒருவர், அதற்கான பணத்தை ஏற்கெனவே செலுத்திவிட்டதாகத் தெரிவிக்கலாம்.
அந்தப் பணத்தைப் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட இணைய இணைப்பைத் திறக்க வேண்டும் என்றும் அவர் கூறலாம்.
ஆனால், அந்த இணைப்பு உங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்ட போலி இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லக்கூடும்.
பணத்தைப் பெறுவதற்காக உங்கள் வங்கிக் கணக்கின் உள்நுழைவுத் தகவல்களை உள்ளிடுமாறு கேட்பதும் முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாகும். ஒருவர் உங்கள் பொருளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதற்காக மட்டும் அவர் உண்மையான வாடிக்கையாளர் என்று நம்பிவிடாதீர்கள்.
வர்த்தகத் தளத்திற்கு வெளியே தொடர்புகொள்ள வேண்டாம்
மோசடிக்காரர்கள், இணைய வர்த்தகத் தளத்தில் நடைபெறும் உரையாடலை வாட்ஸ்அப், டெலிகிராம் அல்லது வேறு தொடர்புச் செயலிகளுக்கு மாற்ற முயற்சி செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, நீங்கள் பயன்படுத்தும் வர்த்தகத் தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் அந்த உரையாடலுக்குப் பொருந்தாமல் போகலாம்.
இதற்காக, வேறொரு செயலியில் தொடர்புகொள்ளுமாறு கேட்கும் அனைவரும் மோசடிக்காரர்கள் என்று அர்த்தமன்று. ஆனால், அவ்வாறு மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோல், வாங்குபவர் அல்லது விற்பனையாளர் கூறுகிறார் என்பதற்காக மட்டும் அறிமுகமில்லாத செயலியை உங்கள் தொலைபேசியில் நிறுவாதீர்கள்.
பணம் அனுப்புமுன் அல்லது நிதி தொடர்பான தகவல்களை வழங்குமுன் அந்தப் பரிவர்த்தனை உண்மையானதா என்பதைச் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள். ஒரு பொருளைக் குறைந்த விலையில் வாங்குவதற்காக உங்கள் வங்கிக் கணக்கின் பாதுகாப்பை இழப்பது மதிப்புக்குரியதன்று.
இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு
இணையத்தில் பொருள் வாங்குபவரோ விற்பவரோ பணப் பரிவர்த்தனைக்காக வெளிப்புற இணைய இணைப்பை அனுப்பினால், கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
நல்ல சலுகை என்ற ஆசையில், அவசரப்பட்டுத் தவறான முடிவெடுக்காதீர்கள்.
