“கலை சோறு போடுமா?”
தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த ‘மனித நூல்கள்’ எனும் நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட முதன்மையான கேள்விகளில் இதுவும் ஒன்று.
செயற்கை நுண்ணறிவு ஒருவரது வாழ்வின் பல நிலைகளிலும் ஊடுருவி வருவதாலும், அறிவியல் சார்ந்த துறைகளில் பணம் ஈட்டுவதற்கான வாயப்புகள் அதிகரிப்பதாலும், கலைகளில் முழுநேரமாக ஈடுபடுவது சாத்தியமான ஒன்று என்பதை அறிந்துகொள்ளவும் கலைத்துறையில் ஈடுபடுவோரின் அனுபவங்களை ஒரே இடத்தில் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் அந்நிகழ்ச்சி அமைந்தது.
தேசிய நூலக வாரியத்தின் ‘தி பாட்’ அரங்கில் அக்டோபர் 24 (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று பேச்சாளர்களும் ஏறத்தாழ 25 பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டனர்.
“வந்திருந்தோருள் பலர் கலைத்துறையில் ஏற்கெனவே அடியெடுத்து வைத்துள்ளனர். ஆனால், அடுத்த கட்டத்திற்கு எப்படிச் செல்வது என்பது குறித்து அவர்கள் தெரிந்துகொள்வதற்காக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். கலைத்துறை தொடர்பான தவறான கண்ணோட்டங்களை மாற்றுவதும் இந்நிகழ்ச்சியின் ஓர் இலக்கு,” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுத் தலைவர் யோகேன், 35, கூறினார்.
கலைகளில் முழுநேரமாக ஈடுபடுவது, சவால்களை எதிர்கொள்வது, புத்தாக்க முறைகளில் தொடர்ந்து சிந்திப்பது குறித்து கருத்தரங்கு வடிவில் நிகழ்ச்சியின் முதல் அங்கம் அமைந்திருந்தது. கலைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் அந்த மாற்றத்தை ஏற்பதா நிராகரிப்பதா என்பது குறித்தும் பேசப்பட்டது.
கலாசார பதக்கம் வென்ற திரு ஹரேஷ் ஷர்மா, அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி, ‘டமாரு சிங்கப்பூர்’ நிறுவனர் அக்ஷரா திருக்குமரன் ஆகிய மூவரும் கலந்துரையாடலில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
“கலைத்துறையில் பணம் ஈட்டுவது எளிதன்று எனச் சிலர் சொல்வதுண்டு. ஆனால், சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். சில தியாகங்களைச் செய்யவும் தயாராக இருக்கவேண்டும்,” என்றார் திரு திருக்குமரன்.
நிகழ்ச்சியின் இரண்டாம் அங்கம் சற்று மாறுபட்ட வகையில் அமைந்திருந்தது. ஒரு நூலகத்தில் எவ்வாறு பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, அவற்றின்மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்ள இயலுமோ, அதைப்போலவே ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்து வரும் வல்லுநந்களை ‘இரவல் பெற்று’, அவர்களிடம் பேசுவதற்கு ஏற்றவாறு அவ்வங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
நாடக ஆசிரியர் புகழேந்தி, பல்திறன் கலைஞர் கிரேஸ் கலைச்செல்வி, நடனக் கலைஞர்கள் ஸ்ருதி நாயர், டாக்டர் நித்யா ஷாந்தினி மனோகரா, இசைத் தயாரிப்பாளர் போனியோ வெஸ்காஸ், பாடகி ஏன்ஜெல் வைஷிலி ஆகியோர் ‘மனித நூல்களாக’ கலந்துகொண்டனர்.
“பலரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு, ஆர்வத்தோடு கேள்வி கேட்க முன்வந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது,” என்று திருவாட்டி கிரேஸ் கலைச்செல்வி சொன்னார்.
“கலைகள்மீது எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் நாடகத்தை மேடையேற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் பிறந்த ஆர்வத்தை, கல்வி பயிலும்போதே தொடர்ந்து வளர்த்துக்கொள்வது எப்படி எனக் கற்றுகொள்வதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்,” என்று சொன்னார் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் லாவண்யா கணேசன் கிருத்திக்கேஷ், 22.
“இன்று பேசிய ஒவ்வொருவருடைய அனுபவங்களும் குறிக்கோளை அடைவதற்கான பாதைகளும் தனித்துவமிக்கவையாக இருந்தன. கலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையவேண்டும் என்பது மட்டும் அவர்களது இலக்காக இல்லை. அவர்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட திறன்களைத் தொடர்ந்து மெருகேற்றி வருகின்றனர்,” என்று மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றிவரும் திருவாட்டி மெலிசா வினிஷா தேவி கூறினார்.
ஒரு வல்லுநருடைய அனுபவங்களிலிருந்து பலவற்றைத் தம்முடைய தனிப்பட்ட கலைப்பயணத்தோடு ஒப்பிட முடிவதோடு எவற்றை எதிர்பார்க்கலாம் என்று நிகழ்ச்சியின்மூலம் தெரிந்துகொண்டதாக நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக இளநிலை நான்காம் ஆண்டு மாணவி சௌமியா திருமேனி சொன்னார்.
