தமிழர் பேரவை ‘மனித நூலகம்’ எனும் நிகழ்ச்சிக்கு வரும் ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ஏற்பாடு செய்துள்ளது.
அரசாங்கப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்களை, நூல் போன்று ‘இரவல் வாங்கி’ அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள், அறிவுரைகளை உரையாடல் மூலம் அணுகும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘தி போட்’ (The Pod) அரங்கில் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 50 இளையர்கள் வருகையளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர் பேரவையின் இந்த ஏற்பாடு குறிப்பாக இளையர்களுக்கும் வாழ்க்கைத்தொழில் மாற விரும்புவோருக்கும் மிக உதவியாக இருக்கும் என்றார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெள்ளிநிலா குணாளன்.
“நிர்வாகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள தமிழர்கள், அவர்களுடைய சமூக ஈடுபாடு பற்றித் தெரிந்துகொள்வது வருபவர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் வெள்ளிநிலா.
இந்த நிகழ்ச்சியில் நான்கு கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெறும். இளையர்கள் வெவ்வேறு பேச்சாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடைய பணியைப் பற்றி நன்கு அறிந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து பேச்சாளர்களும் பங்கேற்பாளர்களும் கூடிக் கலந்துரையாடும் அங்கமும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் தமிழர் பேரவையின் ‘இன்ஸ்டகிராம்’ மூலம் அல்லது https://forms.gle/dyHnZ5uVkGaqCSzj6 எனும் இணைய முகவரி வழியாகப் பதிவுசெய்யலாம்.