மருத்துவத்தையும் தாண்டிய மனிதநேயம்: சமூகத்தின் தூண்களாய் இந்தியத் தாதியர்

மருத்துவத்தையும் தாண்டிய மனிதநேயம்: சமூகத்தின் தூண்களாய் இந்தியத் தாதியர்

3 mins read
7cde02aa-ee40-40e1-ac40-dfbd90b81132
ரீமா கேத்தரின் டென்னிசன், 46 (இடது), மதுரவள்ளி ரவீந்திரன், 32 (வலது மேல்), நீலாம்பிகை இராஜேந்திரன், 39. - படங்கள்: ரீமா கேத்தரின் டென்னிசன், மதுரவள்ளி ரவீந்திரன், நீலாம்பிகை இராஜேந்திரன்

சிங்கப்பூரில் சார்ஸ், கொவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் பரவிய காலகட்டங்கள் பெரும் சவாலாக அமைந்தன.

அத்தகைய சூழ்நிலைகளிலும் சமூகத்தில் உள்ள தாதியர் தங்களுக்குத் தொற்றுப் பரவும் அபாயம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இரவு பகலாக அயராது உழைத்தனர்.

மருத்துவக் கட்டமைப்பையும் நோயாளிகளின் நலனையும் தாங்கிப் பிடிக்கும் கண்ணுக்குத் தெரியாத தூண்களாக விளங்குகின்றனர் தாதியர்.

நிபுணத்துவத் தாதி ரீமா

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நேரடிக் கவனிப்பையும் மேம்பட்ட சிகிச்சையையும் வழங்குகிறார் நிபுணத்துவத் தாதி ரீமா கேத்தரின் டென்னிசன், 46.

அவர் 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாதியாகப் பணியாற்றி வருகிறார். சிறு வயதில் தாதிமையில் அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்புக்கு, அவரது பாட்டி மிக முக்கியக் காரணம்.

அவரது பாட்டி ஒரு தாதியாகப் பணியாற்றியது மட்டுமல்லாமல், சமூகத்தினருக்கு உதவி செய்வதைக் கண்டு வளர்ந்தார் ரீமா.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் நிதியுதவியோடு தாதிமைத் துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்று, அதைத் தொடர்ந்து மருத்துவப் பயிற்றுவிப்பாளர் திறன் பயிற்சியை முடித்தார் அவர்.

இன்று மற்ற தாதியருக்குக் கற்றுக்கொடுக்கும் மருத்துவப் பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கிறார் ரீமா.

தாதியருக்குக் கற்றுக்கொடுக்கும் மருத்துவப் பயிற்றுவிப்பாளர் ரீமா கேத்தரின் டென்னிசன், 46 (வலது).
தாதியருக்குக் கற்றுக்கொடுக்கும் மருத்துவப் பயிற்றுவிப்பாளர் ரீமா கேத்தரின் டென்னிசன், 46 (வலது). - படம்: ரீமா கேத்தரின் டென்னிசன்

“தாதிமைப் பணி என்பது உன்னதமான மனிதநேயச் சேவை. இப்பணி மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. துயரமிகுந்த காலங்களிலும் நோயாளிகளுக்கு உற்ற துணையாக விளங்குவதும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்குவதும் முக்கியம்,” என்று ரீமா கூறினார்.

தாம் கவனித்துக்கொண்ட நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் தம்மைத் தொடர்புகொண்டு நன்றி தெரிவிக்கும்போது தமக்கு மனநிறைவாக இருக்கும் என்று ரீமா தெரிவித்தார்.

தாதி நீலாம்பிகை இராஜேந்திரன்

தாதிமைத் துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வருகிறார் நீலாம்பிகை இராஜேந்திரன், 39. எதிர்பாராவிதமாகத் தம் தந்தையை இழந்தபோது, இதயவியக்க உயிர்ப்பிப்புச் சிகிச்சையின் (சிபிஆர்) முக்கியத்துவத்தையும் அடிப்படை மருத்துவ அறிவின் தேவையையும் அவர் உணர்ந்தார்.

மருத்துவமனை, முதியோர் இல்லங்களில் ஆதரவற்ற முதியோர் சிலரின் நிலையைக் கண்டு அவர்களுக்கு அன்பையும் சிகிச்சையும் வழங்கிச் சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரை அத்துறையில் சேர்த்தது.

நோயாளிகளுடனான மருத்துவக் கவனிப்பில் எந்தவொரு மொழி இடைவெளியும் ஏற்பட்டக் கூடாது என்பதால் மாண்டரின், மலாய் மொழிகளில் பேசக் கற்றுக்கொண்டார் நீலாம்பிகை.

“ஆறு ஆண்டுகள் தனியார் தாதியாகக் பணிபுரிந்தபோது நான் கவனித்துக்கொண்ட ஒரு பாட்டி காலமானார். அவருடைய குடும்பத்தினர் என்னை அவரின் பேத்தியாக ஏற்றுக்கொண்டனர். இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக அவர்களுடன் இந்தியா சென்று, ஒரு மாதம் தங்கியிருந்து அஞ்சலி நிகழ்வுகளில் பங்கெடுத்தேன்.

“அவர் மறைந்து பத்து ஆண்டுகள் கடந்து, இன்றும் நான் அவருடைய ஆண்டு நினைவு அஞ்சலி பிரார்த்தனைகளில் தவறாமல் கலந்துகொள்கிறேன். இதுபோல நான் கவனித்துக்கொண்ட நோயாளிகள் பலரும் அவர்களின் குடும்பத்தினரும் என் நண்பர்களாக இன்னும் தொடர்பில் உள்ளனர்,” என்று நீலாம்பிகை கூறினார்.

தாதி மதுரவள்ளி ரவீந்திரன்

கடந்த 14 ஆண்டுகளாகத் தாதிமைத் துறையில் தடம் பதித்துவரும் மதுரவள்ளி ரவீந்திரன், 32, குருதியியல் (Haematology) துறையில் மூத்த தாதியாகப் பணியாற்றி வருகிறார். அவர் நோயாளி ஒருவருடன் பகிர்ந்துகொண்ட அனுபவத்தைப் பற்றிக் கூறினார்.

“24 வயதான நுரையீரல் புற்றுநோயாளி ஒருவர் மரணத்தை எதிர்நோக்கும் நேரத்தில் பேச இயலாமல் இருந்தார். அவரது கணவர், இறக்கும் தறுவாயில் இருந்த மனைவியின் மனநிலையைப் புரிந்துகொண்டு, மனைவியின் கையைப் பிடித்துக் குடும்பத்தினரைத் தாம் பார்த்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்த அடுத்த நொடியில், மனைவி உயிர்நீத்தார். அந்தத் தருணம், அறையில் இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நானும் கண்கலங்கினேன்,” என்று உருக்கத்துடன் கூறினார் மதுரவள்ளி.

ஒரு தாதிக்கு நோயாளிகளின் வலியைப் புரிந்துகொள்ளும் தன்மை இருக்க வேண்டும். அதே நேரத்தில், இக்கட்டான சூழ்நிலைகளைக் கண்டு சோர்ந்துவிடாமல், நோயாளிக்குத் தைரியம் ஊட்டும் வகையில் மனவலிமையோடு இருக்க வேண்டும் என்று மதுரவள்ளி அடுத்தத் தலைமுறைத் தாதியருக்கு அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்