மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்: டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு

மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்: டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு

3 mins read
e3b2a6f8-c064-4a14-88e6-150539fcc646
2026 ஜனவரி 12ஆம் தேதி நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு. - காணொளிப்படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மருத்துவம், இளைய குடும்பங்களுக்கான ஆதரவு, சமூக நலத்திட்டங்கள் குறித்த தமது கேள்விகள்வழி அரசாங்கத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டவுள்ளதாகக் கூறினார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, 35.

தமது பதவிக்காலத்தில் இன்னும் ஈராண்டுகளுக்குமேல் எஞ்சியுள்ள நிலையில், தமிழ் முரசுடனான நேர்காணலின்போது அவர் இவ்வாறு கூறினார்.

மருத்துவ ஆர்வமும் பயணமும்

சிறுவயதிலேயே தம் குடும்பத்தில் ஒருவரைப் புற்றுநோய்க்குப் பறிகொடுத்த டாக்டர் ஹரேஷுக்கு மருத்துவமனைகளின் அமைப்பும் வாசமும் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிந்துவிட்டது.

அதன் காரணமாக மருத்துவத் துறைமீது ஆர்வம் கொண்ட அவர், தற்போது குவீன்ஸ்டவுன் பலதுறை மருந்தகத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

குடும்ப மருத்துவ வல்லுநரான டாக்டர் ஹரேஷ், வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்களும் அனுபவங்களுமே தம்மைக் குறிப்பாக அப்பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கத் தூண்டியதாகக் கூறினார்.

“என் 12 ஆண்டுகால மருத்துவ வாழ்க்கையில், என் கண்ணோட்டத்தை வெகுவாக மாற்றியது ஓர் இந்திய மூதாட்டியின் கதை,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

“சிறுநீரகச் செயலிழப்பால் அம்மூதாட்டி அவதியுற்றதனால் அவரை ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்ளுமாறு பரிந்துரைத்தேன். ஆனால், அவரோ அச்சிகிச்சை வேண்டாமெனக் கூறியது எனக்கு மிகுந்த வியப்பளித்தது.

“ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொண்டால் வாரத்தில் மூன்று, நான்கு நாள்கள் அதற்கே செலவாகிவிடும். அதனால் தம் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியாது என்று அவர் கூறியது என் மனத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார் டாக்டர் ஹரேஷ்.

“அந்த கட்டத்தில் நோயாளிகளைத் தனிமனிதர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களை ஒரு குடும்பத்தின் அங்கமாகப் பார்ப்பது, அவர்களுடைய விருப்பங்கள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தும் குடும்ப மருத்துவத்தின்மீது ஆர்வம் கொண்டேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தம் குடும்பமும் ஓர் இளைய குடும்பமாக இருப்பதால், நண்பர்கள், சமூகத்தினர் ஆகியோர் சந்திக்கும் சவால்களை நேருக்கு நேர் பார்க்க முடிவதாக டாக்டர் ஹரேஷ் குறிப்பிட்டார்.

அதனால், இளைய குடும்பங்களுக்கான ஆதரவுக்காகவும் தாம் குரல் எழுப்புவதாக அவர் கூறினார்.

தமிழ்ப் பற்று

மருத்துவம், சமூகப் பிரச்சினைகள்மீது மட்டுமல்லாமல் தமிழ்மொழியின்மீதும் அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளார் டாக்டர் ஹரேஷ்.

“சிங்கப்பூரர்கள் இல்லங்களில் தமிழ் பேசும் விகிதம் குறைந்து வருவது கவலை அளித்தாலும், தமிழ்மொழி விழாவில் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் முயற்சிகளும் நம்பிக்கை ஊட்டுகின்றன,” என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு தமிழ்மொழி விழாவில் நடந்தேறிய பல்வேறு நிகழ்ச்சிகள் தம் மனத்தைக் கவர்ந்ததாகவும் அவை இல்லங்களில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க, ஆதரிக்க நல்ல தொடக்கப் புள்ளிகளாக அமைவதாகத் தாம் உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

“அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் பேச ஊக்குவிக்கும் சிறு தீப்பொறிகளாகத் தோன்றின. அவற்றிலிருந்து பெரிய தீப்பிழம்பை உருவாக்குவது நம் கைகளில்தான் உள்ளது.

“வீடுகளில் உணவு உண்ணும்போது, சிறுவர்களிடம் அன்பு செலுத்தும்போது எனத் தமிழில் பேச பல வாய்ப்புகள் எழும். அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்,” என்றார் டாக்டர் ஹரேஷ்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல இந்த சிறிய முயற்சிகள் எதிர்காலத்தில் சிங்கப்பூரில் தமிழ் நீடித்து நிலைத்து நிற்க பேரளவு உதவுமென அவர் நம்புகிறார்.

‘இணை’ மீதான எதிர்பார்ப்புகள்

இந்தியச் சமூகத்திற்கு உதவ முற்படும் ‘இணை’ செயற்குழு குறித்தும் தமது கருத்துகளை டாக்டர் ஹரேஷ் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

இளையர்கள், சமூகத் தேவைகள் கொண்ட குடும்பங்கள் சார்ந்த விவகாரங்களில் உதவ ‘இணை’யின்கீழ் தாம் முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.

“இணை, இந்திய சமூகத்திற்கு உதவ முயலும் ஒரு நல்ல தொடக்கப் புள்ளி. பல இந்திய குடும்பங்கள் இன்றும் ஆதரவு அமைப்புகளிடம் உதவிநாடத் தயங்குகின்றன. அத்தகைய குடும்பங்களுக்கு இந்த முயற்சி நிச்சயம் உதவும்,” என்றார் டாக்டர் ஹரேஷ்.

“சிங்கப்பூரிலிருக்கும் மற்றவர்களைப் போலவே சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிட்டுவதை உறுதிசெய்வதே ‘இணை’யின் ஆகப் பெரிய வெற்றியாக இருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

வெற்றி ரகசியம்

இளையர்களுக்காக தமது வெற்றியின் ரகசியத்தையும் பகிர்ந்துகொண்டார் டாக்டர் ஹரேஷ்.

“உங்கள் மனத்திற்குப் பிடித்த அனைத்துத் துறைகளிலும் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்; அச்சமின்றித் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஏதேனும் ஒரு கதவு அடைத்தாலும், மற்றொன்று கண்டிப்பாகத் திறக்கும்.

“அவ்வாறு முன்னேறித்தான் நான் இன்று இந்நிலையில் உள்ளேன். உங்களாலும் உறுதியாகச் சாதிக்க முடியும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்