சிங்கப்பூரில் உள்ள நிதிப் பயிற்சியாளர்களைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் காப்பீடு, நிதிப் பயிற்சியாளர்கள் சங்கம் (IFPAS), அதன் 55ஆம் ஆண்டு நிறைவை ஆகஸ்ட் 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடியது.
அதன் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைச் சலுகை கட்டணத்தில் பெறுவதற்கான அவகாசம் அதே நாளன்று நிறைவுபெற்றது.
சித்த சுவாதீனம் இல்லாமல் இருக்கும் தருணத்தில் தங்கள் சார்பாக முடிவெடுக்க உதவுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நம்பகமான நபர்களை நியமிக்க நீண்டகால அதிகாரப் பத்திரம் சிங்கப்பூரர்களுக்கு உதவும்.
தீவிர நினைவிழப்பு (டிமென்ஷியா), மனநலப் பாதிப்பு, உணர்விழந்த நிலை (கோமா), மருத்துவ சிகிச்சையால் நினைவுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்சார்பாக முடிவெடுக்க நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் மூலம் ஒரு நபரை நியமிக்கலாம்.
கீஸ்டோன் மருந்தகத்துடனும் எம்ரே சட்ட நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட்ட சங்கம், நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பற்றிய இணையக் கருத்தரங்குகள், உரையாடல்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவற்றில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இது போன்ற நிகழ்ச்சிகள், நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கின்றன. மேலும், சித்த சுவாதீனம் இழந்தவர்களின் சார்பாக முடிவெடுக்க நம்பகமான நபரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதை அவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் முழுவதும் உள்ள 3,400 நபர்களுக்கு சங்கம் நிதியுதவியையும் சான்றுகளையும் அளித்தது. தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற்ற 1,113 பேரும் அவர்களில் அடங்குவர்.
பீஷான்-தோ பாயோ அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட், இந்த முயற்சிவழி சமூகத்திற்குப் பங்களித்த பங்காளிகளுக்கும் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும், தனியார் வீடுகளிலும் வசிக்கும் நமது குடியிருப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பலனளிக்கும் இந்த அர்த்தமுள்ள முயற்சிக்காக, சிங்கப்பூர் காப்பீடு, நிதிப் பயிற்சியாளர்கள் சங்கத்துடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியிலிருந்து, சிங்கப்பூர் காப்பீடு, நிதிப் பயிற்சியாளர்கள் சங்கம் 400க்கும் மேற்பட்ட நீண்டகால அதிகாரப் பத்திர வழக்கறிஞர்களை நியமித்துப் பயிற்சி அளித்துள்ளது.
சிங்கப்பூரர்கள் தங்கள் எதிர்காலத்திற்காகச் சரியான முடிவுகளை எடுக்க இந்த வழக்கறிஞர்கள் நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்பிக்க உதவுகின்றனர்.

