அயராத உழைப்பிலும் அலாதி நிறைவு

அயராத உழைப்பிலும் அலாதி நிறைவு

1 of 2
படம்: ஜீவிதா சந்திரகாந்த்
படம்: ரோசி மடு

08 Nov 2026 - 4:00 pm

3 mins read

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் உணவுக்கான தேவை பெருமளவில் அதிகரிக்கும்.

பெருநிறுவனங்களுக்கும் வீடுகளில் இயங்கும் உணவு வணிகங்களுக்கும் இடையே விநியோக நடைமுறைகள் மாறுபடுகின்றன.

பெரிய உணவகங்கள் திட்டமிடப்பட்ட சமையல் அட்டவணை, சிறப்பு வாகன விநியோகம் ஆகியவற்றை நம்பியிருக்க, வீட்டில் சமைத்து வணிகம் செய்வோர் பல மணி நேரம் சமைப்பது, குறிப்பிட்ட அளவிலான உணவுக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது, குடும்ப ஆதரவை நாடுவது ஆகியவற்றின் மூலம் சவால்களைச் சமாளிக்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காந்தி உணவகத்தின் செயல்பாடுகள் கணிசமாக விரிவடைந்துள்ளன.

வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் 300 முதல் 500 பேருக்கு உணவளிக்கும் உணவகம், தீபாவளி நாளன்று கிட்டத்தட 2,000 பேருக்கு உணவு விநியோகம் செய்வதாகத் தெரிவித்தார் அதன் உரிமையாளர் கீர்த்தி ராஜேந்திரன், 40.

மத்தியச் சமையற்கூடத்தைச் சார்ந்திருக்காமல் உணவைத் தயாரிக்க உணவக ஊழியர்களைச் சார்ந்துள்ளனர். அவர்கள், அதிகாலை 4 மணிக்கே தயாரிப்புப் பணிகளைத் தொடங்குவதாக கீர்த்தி தெரிவித்தார்.

விநியோக நேரத்திற்கேற்ப காலை 7 மணி முதல் பல கட்டங்களாகச் சமையல் நடைபெறும்.

மதிய உணவு முன்பதிவுகளுக்கான தயாரிப்பு காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. காலை 11 மணிக்கெல்லாம் அந்த உணவை உணவகத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

உச்சக்கட்ட நேர விநியோகத்திற்குத் துல்லியமான திட்டமிடல் அவசியம். விநியோகத் தாமதங்களைத் தவிர்க்கவும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பிற விநியோக நிறுவனங்களின் வாகனங்களைத் தீபாவளி காலத்தில் உணவகம் நாடுகிறது.

“ஆனால், வாடிக்கையாளர்கள் இப்போது சிறிய அளவில்தான் உணவு வகைகளை விரும்புகின்றனர்,” என்றார் கீர்த்தி.

‘புஃபே’ முறையில் வழங்கப்படும் உணவு வகைகளை விநியோகம் செய்ய கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, அத்தகைய முறையில் உணவு வழங்குவதை காந்தி உணவகம் தீபாவளி காலகட்டத்தில் குறைத்துக்கொள்கிறது.

ஸ்ரீ கேட்டரிங் உரிமையாளர் ஜீவிதா சந்திரகாந்த், 37, போன்ற வீட்டு உணவுத் தயாரிப்பாளர்களுக்கு வாகன விநியோகத்தைவிட வீட்டின் சமையலறை வசதியே முன்பதிவுகளுக்கான வரம்புகளைத் தீர்மானிக்கின்றன.

2016ஆம் ஆண்டில் நண்பர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதில் தொடங்கிய ஜீவிதா, 2020ஆம் ஆண்டில் 100 பேர் வரைக்கான தீபாவளி உணவு முன்பதிவுகளை ஏற்றார். அதிக அளவில் சமைக்கும் முறையைக் கற்றுக்கொள்வதே அவரது ஆரம்பகால சவாலாக அமைந்தது.

அதிக அளவில் சோறு சமைக்கும்போது நேரத்தைக் கணிப்பது மிக முக்கியமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார் அவர்.

பணிகளைச் சீராக நிர்வகிக்க, தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே உணவு முன்பதிவுகளை ஜீவிதா நிறுத்திவிடுகிறார். இறைச்சி, மளிகைப் பொருள்களை முன்கூட்டியே தருவிக்கிறார். மூன்று முதல் நான்கு நண்பர்களின் துணையுடன் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, இரவு முழுவதும் சமையல் வேலைகளை அவர் மேற்கொள்கிறார்.

இவர் சமையலில் முழுக் கவனம் செலுத்தும் வகையில் முன்னோர் வழிபாடு, அலங்காரப் பணிகளை அவரது வருங்காலக் கணவர் பொறுப்பேற்றுச் செய்கிறார்.

அவசரத் தேவைக்காகவும் அக்கம்பக்கத்தினருக்காகவும் கூடுதல் உணவைச் சமைத்தாலும், தமது சக்திக்கு மீறிய கோரிக்கைகளை அவர் ஏற்பதில்லை.

“உணவின் தரம் மிக முக்கியம். என்னால் நிச்சயமாகச் செய்ய முடியாது என்றால் நான் மறுத்துவிடுவேன்,” என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பொருள்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு உணவக உரிமையாளர்களும் வீட்டில் சமைத்து விற்கும் வணிகர்களும் எந்தளவு உணவு விநியோகம் செய்ய முடியும் என்பதை முடிவு செய்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை 20 முதல் 30 விழுக்காடு வரை உயர்ந்தபோதிலும் உணவு விலையை உணவகம் 5 விழுக்காடு மட்டுமே உயர்த்தியதாகக் கீர்த்தி தெரிவித்தார்.

மேலும், வீட்டில் சமையல் செய்வோருக்குப் பொருள்களை அதிக அளவில் சேமித்து வைக்கும் இடவசதி இல்லாததால் மொத்த விலைக்கு வாங்குவதும் கடினம்.

“வீட்டுச் சமையல் தொழில் செய்வோர் செலவிடுவது அதிகம் என்று நினைக்கிறேன். தேவைப்படும் அளவுக்குமேல் பொருள்களை வாங்கி வீட்டில் அதிக நாள் வைக்க முடியாது. எனவே, எப்போதும் உணவுப் பொருள்களை வாங்குகிறோம்,” என்றார் ஜீவிதா.

பெரிய உணவகங்களாக இருந்தாலும் சரி, வீட்டுச் சமையலறையாக இருந்தாலும் சரி, பண்டிகைக் காலத்தின் கடுமையான தேவையை இரு தரப்புமே வெவ்வேறு நடைமுறைகள் மூலம் திறம்படக் கையாள்கின்றன.

அயராத உழைப்புக்கும் சோர்வுக்கும் மத்தியில் பிறருக்கு உணவளித்து மகிழ்விப்பதிலேயே இந்தத் திருவிழாக் காலத்தின் உண்மையான நிறைவு அடங்கியுள்ளதாக இருதரப்பும் ஒப்புக்கொள்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்